திருமணத் தடை நீங்க வழிபட வேண்டிய கோயில்!

40

திருமணத் தடை நீங்க வழிபட வேண்டிய கோயில்!

கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள கஞ்சாம் என்ற ஊரில் உள்ள கோயில் நிமிஷாம்பாள். இந்தக் கோயிலில், நிமிஷாம்பாள் மூலவராக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் நிமிஷாம்பாள் ஜெயந்தி, மாத பௌர்ணமி, நவராத்திரி மற்றும் மகாசிவராத்திரி ஆகிய நாட்களில் இந்தக் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. நிமிஷாம்பாள் ஜெயந்தி அன்று அம்மனுக்கு 108 கலச அபிஷேகமும், துர்க்கா ஹோமமும் நடைபெறுகிறது. நிமிஷாம்பாள் ஜெயந்தி ஆண்டு தோறும் வைகாசி மாதம் வளர்பிறை தசமி நாளில் கொண்டாடப்படுகிறது.

இந்த நிமிஷாம்பாள் கோயிலில் விநாயகர், சிவபெருமான், பார்வதி, சூரியன், மகாவிஷ்ணு ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் வாசலிலேயே காவிரி நதி ஓடுகிறது.

5 சன்னதிகள்:

நாடு முழுவதும் நடந்தே சென்ற ஆதிசங்கரர் பக்தி நெறியை நிலைநாட்டினார். விநாயகர், சிவபெருமான், பார்வதி, சூரியன், மகாவிஷ்ணு ஆகிய 5 தெய்வங்களை ஒன்றிணைத்து தர்மத்தை மக்கள் மத்தியில் நிலைநாட்டினார். ஆதிசங்கரரது எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த நிமிஷாம்பாள் கோயிலில் 5 தெய்வங்களுக்கும் தனித்தனியாக 5 சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நிமிஷாம்பாள் அம்மனை வழிபாட்டால் முற்பிறவி சாபங்கள், இந்தப் பிறவியில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள், தோஷங்கள் யாவும் விலகும். மேலும், திருமணத் தடை நீங்கவும், வழக்கில் வெற்றி பெறவும், எதிரிகள் தொல்லை விலகவும், குழந்தை பாக்கியம் உண்டாகவும் அம்மனை வழிபடுகின்றனர்.

துர்க்கையின், அம்சமாக நிமிஷாம்பாள் இருப்பதால், ராகுகாலம் அஷ்டமி நாட்களில் பாலபிஷேகம் செய்பவர்களுக்கு மணவாழ்க்கை கைகூடும் என்பது நம்பிக்கை.

பராசக்தி அன்னையின் சிறந்த பக்தனாக திகழ்ந்தவன் முக்தராஜன் என்ற மன்னன். அவன் தன்னுடைய நாட்டை எந்த வித குறைகளும் இல்லாதபடிக்கு ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சியில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், வறுமை இன்றும் வாழ்ந்து வந்தனர். அவர்களின் மகிழ்ச்சிக்கு ஒரு அசுரனால் இடையூறு ஏற்பட்டது.

ஜானுசுமண்டலன் என்னும் அந்த அசுரனுக்கு, முக்த ராஜனின் பக்தியைக் கண்டு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அந்த அசுரன், முக்தராஜனுக்கு இடையூறு செய்வதையே வேலையாக மாற்றிக்கொண்டான். முக்தராஜனுக்கு, ஜானுசுமண்டலனின் இடையூறுகளை சமாளிப்பதே பெரும் சுமையாக இருந்தது. ஆகையால் நாட்டையும், நாட்டு மக்களின் குறைகளையும் உடனடியாக கவனித்து, சரி செய்ய முடியாமல் திணறினான்.

இப்படியே போனால் என்னதான் முடிவு. ஒரு நாள் இதுபற்றி முக்தராஜன் சிந்தித்தபோது, தன் அன்னையான பராசக்தியிடமே தன் குறையை கூறி வேண்டுவது என்று முடிவு செய்தான். ஜானுசுமண்டலனை அழிக்க வேண்டி அன்னை பராசக்தியை வேண்டி யாகம் செய்தான். மனமுருகி வேண்டும் பக்தனுக்கு மனம் இறங்காமல் இருப்பது தெய்வம் அல்லவே!

யாகத்தில் உதித்த நிமிஷாம்பாள்:

யாகத்தில் இருந்து உதித்த அம்பிகை, முக்தராஜன் மற்றும் அவனது நாட்டு மக்களின் வேண்டுகோளின் படி, ஜானுசுமண்டலனைப் பார்த்து ஒரு நிமிடம் கண்ணை மூடி திறந்தாள். அந்த நொடிப் பொழுதில் அசுரனான ஜானுசுமண்டலன் சாம்பலாகிப் போனான். கண நேரத்தில் தன் பக்தன் முக்தராஜனுக்கு அருள் புரிந்ததால், ‘நிமிஷாம்பாள்’ என அழைக்கப்பட்டாள்.

அசுர வதம் செய்ததால், அம்பிகைக்கு உண்டான தோஷம் நீங்க, நிமிஷாம்பாள் கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற இடத்தின் அருகில் சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபனம் செய்து வழிபாடு செய்தாள். அதைத் தொடர்ந்து அம்பிகையின் தோஷம் நீங்கியது. அம்பிகை வழிபட்ட அந்த லிங்கம், ‘முக்தீஸ்வரர்’ என்னும் பெயரில் அழைக்கப்பட்டது.

இந்த இறைவனை கர்நாடகாவில் ‘மவுத்திகேஸ்வரர்’ என்று அழைக்கிறார்கள். தனக்கு அருள்புரிந்த அன்னைக்கு, கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினம் அருகில் உள்ள கஞ்சாம் என்னும் இடத்தில் கோயில் எழுப்பினான் முக்தராஜன். அந்த அம்பிகைக்கு, ‘நிமிஷாம்பாள்’ என்று பெயரிட்டான். சமயபுரம் மாரியம்மனைப் போலவே பக்தர்களுக்கு தக்க சமயத்தில் கை கொடுப்பவளாக திகழ்கிறாள் இந்த நிமிஷாம்பாள் தேவி.

ஆலய அமைப்பு:

அம்மனை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு ஐந்து நிலை கோபுரம் முதலில் வரவேற்பு அளிக்கும். அதன் வழியாக கருவறைக்கு சென்றால், அங்கு அன்னை கிழக்கு நோக்கி நான்கு திருக் கரங்களுடன் துர்க்கையின் அம்சமாக அருள்பாலித்து கொண்டிருக்கிறார். நிமிஷாம்பாள் தேவியின் முன்பாக சக்தி வாய்ந்த ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தலைக்கு மேல் தர்ம சக்கரமே குடையாய் அமைக்கப்பட்டுள்ளது. மேல் இரு கரங்களிலும் சூலமும், உடுக்கையும் உள்ளன. கீழ் இரு கரங்களிலும் அபய, வரத ஹஸ்தங்கள் உள்ளன.

நிமிஷாம்பாள் வழிபட்ட சிவலிங்கமான மவுத்திகேஸ்வரர் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். அதன் அருகிலேயே லட்சுமி நாராயணர் சன்னிதி அமைந்துள்ளது.

சென்னையில்…

கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் கஞ்சாம் என்னும் இடத்தில் நிமிஷாம்பாள் ஆலயம் உள்ளது. இதுதவிர பெங்களூரில் அக்கிப்பேட் மற்றும் ராஜராஜேஸ்வரி நகர், கர்நூல், தவணகிரி ஆகிய இடங்களிலும் நிமிஷாம்பாள் கோயில் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் சென்னை பிராட்வேயில் உள்ள காசிச்செட்டித் தெருவில் நிமிஷாம்பாள் கோயில் இருக்கிறது.

சென்னை காசிச்செட்டி தெருவில் உள்ள கோயில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் முதலில் தென்படுவது கருவறை தான். அதனுள் நின்ற கோலத்தில் தெற்கு பார்த்த வண்ணம் நிமிஷாம்பாள் எழுந்தருளி உள்ளாள். அம்மனின் எதிரில் சிம்ம வாகனமும், சூலமும் உள்ளன. நிமிஷாம்பாளுக்கு 5 நெய் தீபம் ஏற்றி, மரிக்கொழுந்து மலர் சூட்டி தொடர்ந்து 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் திருமணத் தடைகள் அகலும். வேலைவாய்ப்பு கிட்டும்.

கருவறை வெளிப்பிரகாரத்தில் வரசித்தி விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாசலபதி, முக்தீஸ்வரர், ஆஞ்சநேயர், முருகப்பெருமான் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் கிழக்கு பார்த்து அருள்பாலித்து வருகின்றனர். நிமிஷாம்பாள் கருவறையின் பின்புறம் நவக்கிரக சன்னிதி உள்ளது. இதில் சூரியன் 7 குதிரைகள் பூட்டிய தேரில் இருப்பது போன்ற சிலை கலையம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அம்பிகை வழிபட்ட லிங்கம்:

கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினம் அருகில் உள்ள கஞ்சாத்தில் அமைந்துள்ளது நிமிஷாம்பாள் ஆலயம். இங்கு அம்பாள் வழிபட்ட லிங்கம், ‘மவுத்திகேஸ்வரர்’ என்ற பெயரில் தனிச் சன்னிதியில் இருக்கிறது. மவுத்திகேஸ்வரர் என்னும் முக்திகேஸ்வரருக்கு, முகம் போன்ற கவசம் இந்த தலத்தில் சாத்தப்பட்டுள்ளது. இத்தல ஈசனை பிரதோஷ நாட்களில் வழிபட்டால் முற்பிறவி சாபங்கள், இந்தப் பிறவியில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள், தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்.

அசுரனை வதம் செய்த பாவம் நீங்க நிமிஷாம்பாள், சிவனை ஸ்தாபித்து வழிபட்டாள். அவர், மவுத்திகேஸ்வரர் என்ற திருநாமத்தோடு லிங்க வடிவில் வீற்றியிருக்கிறார். பிரதோஷ நாளன்று மவுத்திகேஸ்வரரை வழிபட்டால் ஆயுள் அபிவிருத்தி உண்டாகும். சிவபெருமானுக்கு வலது புறத்தில் லட்சுமி நாராயணர் சன்னதி உள்ளது. தனது சகோதரியைக் காண்பதற்கு லட்சுமி நாராயணர் பூலோகத்திற்கு வந்தவர் இங்கேயே தங்கிவிட்டார். இதனால், ஒரு கொடியில் பூத்த இரு மலர்களாக லட்சுமி நாராயணர் மற்றும் நிமிஷாம்பாளை வழிபட சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை மேம்படும் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் வளர்பிறை தசமியன்று நிமிஷாம்பாள் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. நிமிஷாம்பாள், தனது 4 திருக்கரங்களில் இரண்டில் சூலம் மற்றும் உடுக்கையை ஏந்திய நிலையிலும் மற்ற இரு கரங்களில் வரம் அளித்தல் மற்றும் அடைக்கலம் தருதல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தி வருகிறாள். இந்தக் கோயிலில் தினந்தோறும் 3 காலபூஜை நடக்கிறது.

ஒவ்வொரு பௌர்ணமியன்றும், பக்தர்கள் விரதமிருந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். குழந்தை பாக்கியம் கிடைக்கவும், திருமணத் தடை நீங்கவும், எதிரிகளால் ஏற்படும் தொல்லை நீங்கவும், வழக்கில் வெற்றி பெறவும் இந்த பௌர்ணமி நாள் விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

பரிவார மூர்த்திகளில் சூரியன், அனுமன் சன்னதிகள் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. கேரளா பாணியில் அர்ச்சகர்கள் அமர்ந்தே இந்தக் கோயிலில் பூஜை செய்கின்றனர். கல்வி அபிவிருத்திக்கும், திருமணத் தடை நீங்கவும் அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாற்றுகின்றனர். இந்தக் கோயிலில் உள்ள அனைத்து மூர்த்திகளும் கிருஷ்ண சிலா என்ற கருப்பு கல்லால் செய்யப்பட்டுள்ளது. சூரிய பகவான், விஷ்ணுவின் அம்சமாக சூரிய நாராயணர் என்ற பெயரில் அருள் புரிகிறார். உத்ராயணம், தட்சிணாயனம், ரதசப்தமி ஆகிய நாட்களில் இந்தக் ஜோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.