திருமணத் தடை நீங்க வழிபட வேண்டிய கோயில்!

33

திருமணத் தடை நீங்க வழிபட வேண்டிய கோயில்!

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் என்ற பகுதியில் உள்ள கோயில் தான் வெயிலுகந்த விநாயகர் கோயில். இந்தக் கோயிலில் வெயிலுகந்த விநாயகர் மூலவராக காட்சி தருகிறார். சூரியபுரி, பாவ விமோசனபுரம், தவசித்திபுரி, வன்னிமந்தார வனம் ஆகியவை இந்த ஊரின் புராண பெயர்கள். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி நாளில் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் தெற்குப் பகுதியில் சூரிய வெளிச்சம் படுகிறது. இதே போன்று, உத்தராயன காலங்களில் வடக்கு பக்கமாக சூரிய வெளிச்சம் படுகிறது. பாண்டிய மன்னர்கள் காலத்திற்குப் பிறகு ராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னர்கள் அமைத்த உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சிறப்பு மிக்கதாகும்.

திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி தொண்டியிலிருந்து உப்பூர் சத்திரம் என்ற கிராமம் 15 கிமீ தொலைவில் உள்ளது. அதுவும் சேது கடற்கரை சாலை என்று அழைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. கடற்கரை அருகில் அமைந்த இந்த கிராமம் வட மொழியில் லவணபுரம் என்று அழைக்கப்பட்டது. லவனம் என்ற வட சொல்லிற்கு தமிழில் உப்பு என்று பெயர். இதிலிருந்து இந்த கிராமத்திற்கு உப்பூர் என்று பெயர் வந்தது.

சூரியன் இந்தக் கோயிலில் தவம் புரிந்து சித்தி பெற்று விமோசனம் பெற்றதால் சூரியபுரி, தவசித்திபுரி, பாவ விமோசனபுரம் ஆகிய பெயர்கள் வழங்கப்பட்டன. வன்னி, மந்தாரம் ஆகிய மரங்கள் வளர்ந்திருந்ததால் வன்னி மந்தார வனம் என்றும் அழைக்கப்பட்டது.

ஆஞ்சநேயர் மூலம் சீதை இருக்கும் இடம் குறித்து அறிந்து கொண்ட ராமன் தனது பத்தினியை மீட்க வானர படைகளுடன் பிரச்சிரவன மலையிலிருந்து கிளம்பி கீழக்கடற்கரை அருகேயுள்ள வன்னிவனத்தை அடைந்தார். அங்கு கோயில் கொண்டிருந்த வெயிலுகந்த விநாயகரை வணங்கி தனக்கு வெற்றி கிடைக்க வேண்டிக் கொண்டு சேதுக்கரை நோக்கி பயணித்தார்.

கடந்த 1905 ஆம் ஆண்டு இந்தக் கோயில் கட்டியதாக கூறப்படுகிறது. இந்தக் கோயிலை கட்டியவர் ராமநாதபுரம் மன்னரான பாஸ்கர சேதுபதி ஆவார். மரத்தடியிலிருந்த இறைவன் அர்ச்சகரின் கனவில் தோன்றி எனக்கு எல்லா கோயில்களிலும் இருப்பது போன்று கர்ப்பகிரகத்தில் அதாவது அர்த்த மண்டபத்தை மூடவிடாமல் எப்பொழுதும் என் மீது வெயில்படும்படி கோயில் அமைக்க வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் தெற்குப் பகுதியில் சூரிய வெளிச்சம் படுகிறது. இதே போன்று, உத்தராயன காலங்களில் வடக்கு பக்கமாக சூரிய வெளிச்சம் படுகிறது. இந்தக் கோயில் தோன்றிய வரலாறு பற்றி பல்வேறு விதமான புராணங்கள் கூறுகின்றன.

பிரஜாதிபதிகளுல் ஒருவனான தட்சன் தனது மகளான தாட்சாயிணியை மண ந்த சிவபெருமான் தன்னை பணிய வேண்டும் என்று விரும்பினான். ஆனால், அது நடக்கவில்லை. இதன் காரணமாக தன்னை வணங்காத ஈசனை அவமானப்படுத்த மாபெரும் வேள்வியை உருவாக்கினான். அந்த வேள்வியில் சிவபெருமானைத் தவிர வானகர்களும், தவசிகளும் தட்சனின் அழைப்பை ஏற்று கலந்து கொண்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த பார்வதி தேவி தனது தந்தைக்கு புத்தி கூற வந்த போது அவமானப்படுத்தப்பட்டாள். தந்தையின் யாகத்தை அழிக்க வீரபத்திரரை அனுப்பினாள். யாகத்தில் கலந்து கொண்டு தண்டனையும் பெற்ற சூரியன் தான் புரிந்த தவறுக்காக பரிகாரம் தேடவும் முற்பட்டார்.

இதற்காக பாண்டி நாட்டில் கீழக் கடற்கரை ஓரமாக தேவிபுரம், காளிபுரம், திருப்புணவாயில் ஆகிய தலங்களுக்கு அருகில் அமைந்துள்ள வன்னிமந்தாரவனம் என்ற பகுதியிலுள்ள விநாயகரை துதித்து தவத்தில் ஈடுபட்டார். சூரியனின் தவத்தால் மகிழ்ந்த விநாயகர் உடனே காட்சியளித்து அவரது பாவங்கள் யாவும் நீங்குமாறு வரம் அருளினார். தனக்கு அருள் புரிந்தது போன்று பக்தர்களுக்கும் அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

மேலும், விநாயகப் பெருமானின் திருமேனி மீது தனது ஒளிக்கதிர்கள் முழுமையாக விழுந்து வணங்க வழிகாட்டுமாறு சூரியன் வரம் பெற்றார். சூரியன் கதிர்கள் தன் மீது முழுமையாக வீசுமாறு கோயில் கொண்டதால் இத்தல இறைவனுக்கு வெயிலுகந்த விநாயகர் என்று பெயர் வந்தது.