திருமணத் தடை நீங்க வழிபட வேண்டிய கோயில்!
நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை என்ற ஊரில் உள்ள கோயில் கோமுக்தீஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயிலில் கோமுக்தீஸ்வரர் (மாசிலாமணீஸ்வரர்) மூலவராக காட்சி தருகிறார். ஒப்பிலாமுலைநாயகி, அதுல்ய குஜாம்பிகை அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். படர் அரசு மரமே கோயிலில் தல விருட்சமாக திகழ்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் பிரமோற்சவம், மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, அன்னபிஷேகம் ஆகிய நாட்களில் கோயிலில் திருவிழா நடக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். மிகப்பெரிய நந்தி, திருமூலரின் ஜீவ சமாதி இந்தக் கோயிலில் உள்ளது. திருமணத் தடையை நீக்கும் பரிகார தலமாக இந்தக் கோயில் விளங்குகிறது.
இந்தக் கோயிலில் உள்ள விநாயகர் துணைவந்த கணபதி என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிரகாரத்தில் லிங்கத்தின் மீது பசு, பால் சொரியும் சிலை இருக்கிறது. இதனை கோரூம்பிகை என்கின்றனர். அருகில் சனீஸ்வரர் இருக்கிறார். இந்தக் கோயிலில் நவக்கிரகத்திற்கு என்று தனி சன்னதி கிடையாது. மாறாக ஒரே இடத்தில் 3 சூரியன் இருப்பது கூடுதல் சிறப்பு.
கணவன் மனைவிக்கிடையில் ஒற்றுமை அதிகரிக்க, புத்திர பாக்கியம் கிடைக்க, மாங்கல்ய பாக்கியம் நிலைக்க இந்தக் கோயிலில் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். அப்படி வேண்டிக் கொள்ளும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறிய உடன் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் தங்களது நிவர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.
முசுகுந்த சக்கரவர்த்திக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதனால், இந்திரனிடம் பெற்ற தியாகேசரை தொடர்ந்து வழிபட்டு வந்தான். ஒரு சமயம் சிவபெருமான், அவரது கனவில் தோன்றி இத்தலத்தில் தன்னை வழிபட குழந்தைப் பாக்கியம் கிடைக்கப் பெறும் என்றார். அதன்படி, இந்தக் கோயிலுக்கு வந்து சிவனை வணங்கி முசுகுந்தன் புத்திர பாக்கியம் பெற்றார். ஆகையால், குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதிகள் இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால் கண்டிப்பாக குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சுவாமி சன்னதிக்கு வலது புறத்தில் தியாகேசர் காட்சி தருகிறார். தெற்கு நோக்கிய சன்னதியில் அணைத்திருந்த நாயகர் உற்சவராக இருக்கிறார். இவர் அணைத்த கோலத்தில் இருந்தாலும் அம்பாள் மீது கைகள் படாதவாறு சிலை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். இவர் இங்கு வரப்பிரசாதியாக திகழ்கிறார். பிரிந்திருக்கும் தம்பதியினர் இவரிடம் வேண்டிக்கொண்டால் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என்பது நம்பிக்கை.
இந்தக் கோயிலில் திருஞானசம்பந்தர், தனது தந்தையர் சிவபாதவிருதயருடன் சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது சீர்காழியில் யாகம் நடத்த வேண்டுமென்று சிவபாதவிருதயர் விரும்பினார். ஆகையால், யாகத்திற்கு பொன்னும், பொருளும் வேண்டுமென்று சம்பந்தரிடம் கேட்டார். சம்பந்தரோ யாகத்திற்கு பொருள் வேண்டி பதிகம் பாடினார்.
சிவன் பூதகணங்கள் மூலமாக ஒரு பொற்கிழியை கொடுத்து அதனை இந்தக் கோயிலில் உள்ள பலிபீடத்தில் வைக்கச் செய்தார். பொன் பெற்ற சிவபாதவிருதயர் சீர்காழிக்கு சென்று யாகத்தை நடத்தி முடித்தார். இந்த பலிபீடம் நந்திக்கு அருகில் இருக்கிறது. இதனைச் சுற்றிலும் பொற்கிழி கொண்டு வந்த பூதகணங்கள் இருக்கிறது. இங்கிருந்து சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.
போகரின் சீடரான திருமாளிகைத் தேவர் இந்தக் கோயிலில் சிவதொண்டு செய்து வந்தார். ஒரு சமயம் அவர் மீது வீண் பழி சுமத்தப்பட்டதால் மன்னன் படை வீரர்களை அனுப்பி அவரை தாக்க முயன்றான். அப்போது அம்பாள் திருமாளிக்கைத் தேவரை காக்கும்படி சிவனிடம் வேண்டவே அவர் நந்தி படையை அனுப்பி அவர்களை விரட்டினார்.
இந்த நந்திகள் ஒன்று சேர்ந்து இந்தக் கோயிலில் பிரமாண்ட நந்தியாக இருக்கிறது. பல கற்களை இணைத்து செய்யப்பட்ட இந்த நந்தி பீடம் சேர்க்காமல் 14 அடி 3 அங்குலத்துடன் உயரமாக இருக்கிறது.
இதற்கு முன்புறம் மற்றொரு சிறிய நந்தியும் இருக்கிறது. பிரதோஷ வேளையில் இதற்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இது தவிர அதிசார நந்தியை அடுத்து மற்றொரு நந்தியும் உள்ளது. திருவிடைமருதூர் தலத்திற்கான பரிகார தலங்களில் இத்தலம் நந்தி தலமாக இருப்பதால் இங்கு நந்தியிடம் வேண்டிக் கொள்வது சிறப்பு.
சுந்தரநாதர் என்ற சிவயோகியார் கயிலாயத்திலிருந்து பூலோகம் வந்து சிவதலங்களை தரிசித்து வந்தார். அவர் இந்தக் கோயிலுக்கு வந்த போது மூலன் எனும் இடையன் இறந்து கிடக்க, அவனைச் சுற்றிலும் பசுக்கள் அழுது கொண்டிருந்ததைக் கண்டார். பசுக்களின் மீது இரக்கம் காட்டிய சிவயோகியார் தனது உயிரை மூலன் உடலில் புகுத்தி எழுந்தார். அதன் பிறகு பசுக்களை வீட்டில் விட்டுவிட்டு இந்த கோயிலுக்கு வந்து தவம் செய்ய துவங்கினார்.
மூலன் வீட்டிற்கு வராததால், அவனது மனைவி இங்கு வந்து சுந்தரநாதரை தன்னுடன் வரும்படி அழைத்தார். ஆனால், அவரோ செல்ல மறுப்பு தெரிவித்தார். மூலன் சிவஞானம் பெற்றுவிட்ட தாக உறவினர்கள் கூறவே மனைவியும் விட்டுச் சென்றுவிட்டாள். இவரே திருமூலர் என்று பெயர் பெற்றார். இவர், ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம், மொத்தம் 3 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். இவையே திருமூலர் திருமந்திரமாக தொகுக்கப்பட்டது. இவர் ஐயக்கிமான இந்தக் கோயிலில் சன்னதி இருக்கிறது.
சிவன் சன்னதிக்கு வலதுபுறத்தில் தியாகராஜர் கமலாம்பிகையுடன் காட்சி தருகிறார். இந்தக் கோயிலில் சிவபெருமான் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமாசித்திகளை உபதேசித்ததாக ஐதீகம். ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் நான்கு பதிகங்கள் பாடிய திருமாளிகைத் தேவர் நமச்சிவாய மூர்த்தி சுவாமிகளுக்கு சன்னதிகள் இருக்கிறது. இத்தலத்திற்கு நந்தி கோயில் என்றும், கோமுக்திநகர் என்றும் பெயர் உண்டு.
கயிலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிவனே தான் தொடர்ந்து வெற்றி பெற்றதாக தன்னை அறிவித்துக் கொண்டார். அம்பாள் கோபம் கொள்ளவே சிவபெருமான், அவளை பசுவாக பிறக்கும்படி சாபமிட்டார். அவள் தனது வடிவம் நீங்கி மன்னிப்பு தரும்படி சிவனிடம் வேண்டினாள். இத்தலத்தில் தம்மை வழிபட்டு வர சாபம் நீங்கப் பெறும் என்றார். அதன்படியே பசுவின் வடிவில் வந்து அம்பாள், சிவனை வழிபட்டு தவமிருந்தாள்.
சிவன் அவளுக்கு காட்சி கொடுத்து தன்னுடன் அணைத்துக் கொண்டு விமோட்சனம் கொடுத்தார். கோவாகிய பசுவிற்கு சிவபெருமான் விமோட்சனம் கொடுத்ததால் கோமுக்தீஸ்வரர் என்று பெயர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.