திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிநாராயணப் பெருமாள் வழிபாடு!

143

திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிநாராயணப் பெருமாள் வழிபாடு!

திருவாரூர் மாவட்டம் எண்கண் என்ற ஊரில் உள்ளது ஆதிநாராயணப் பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் ஆதிநாராயணப் பெருமாள் உற்சவராக திகழ்கிறார். தாயார் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

தல சிறப்பு:

பொதுவாக எந்த பெருமாள் கோயில்களை எடுத்துக் கொண்டாலும், பெருமாள் நின்ற கோலத்திலோ அல்லது இருந்த, கிடந்த கோலத்திலோ காட்சி தருவார். அவருக்கு அருகிலோ அல்லது எதிரிலோ கருடாழ்வார் இருப்பார். திருவிழா நேரங்களின் போது பெருமாள் கருடன் மீது எழுந்தருளி கருட சேவை புரிவார். ஆனால் இந்தக் கோயிலில் பெருமாள் அரசனுக்கு அருள்பாலிப்பதற்கு உடனடியாக கருட வாகனத்தில் வந்ததால், மூலஸ்தானத்தில் கருடன் மீது அமர்ந்த கோலத்திலேயே பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

கோயில் பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், அனுமன், கருடன் சன்னதி உள்ளது. திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயில், திருக்கண்ணமங்கை, நாச்சியார் கோயில், திருச்சேறை ஆகிய கோயில்கள் இத்தலத்திற்கு அருகில் அமைந்துள்ளன.

மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணம்:

கூர்மையான அறிவும், புத்தியும், திறமையும் பெற்றிருப்பர். செல்வம் சேர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். முன் கோபம் அதிகம் இருந்தாலும் எப்போதும் தைரியமாக இருப்பார்கள். தான தர்மம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். எப்போதும் மற்றவர்களைப் புரிந்து கொண்டு அவர்களது மனதிற்கு ஏற்ப நடந்து கொள்வர்.

தல பெருமை:

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது இந்த நட்சத்திர நாளிலோ இத்தல பெருமாளை வழிபாடு செய்தால் கருட வாகனத்தில் தோன்றி நம்மை காத்தருள்வார் என்பது ஐதீகம். கோயிலில் உற்சவரான ஆதிநாராயணப் பெருமாள் பிரயோகச்சக்கரம் ஏந்தி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காதவர்கள், நல்ல சம்பளத்துடன் கூடிய உயர்பதவி வேண்டுபவர்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும். மேலும், இந்த நடச்த்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திரத்தன்று இத்தல இறைவனை வழிபாடு செய்தால் அவர்களின் பிரச்சனை உடனடியாகவே தீரும் என்பது நம்பிக்கை.

பெருமாளின் நித்ய கருடன் சேவை:

பெருமாள் நின்ற கோலத்திலோ அல்லது இருந்த, கிடந்த கோலத்திலோ காட்சி தருவார். அவருக்கு அருகிலோ அல்லது எதிரிலோ கருடாழ்வார் இருப்பார். திருவிழா நேரங்களின் போது பெருமாள் கருடன் மீது எழுந்தருளி கருட சேவை புரிவார். ஆனால் இந்தக் கோயிலில் பெருமாள் அரசனுக்கு அருள்பாலிப்பதற்கு உடனடியாக கருட வாகனத்தில் வந்ததால், மூலஸ்தானத்தில் கருடன் மீது அமர்ந்த கோலத்திலேயே பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இது போன்ற பெருமாளின் நித்ய கருட சேவையை இங்கு தரிசிக்கலாம். இந்தக் கோயிலில் பெருமாளும், கருடன் பகவானும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பு.

தல வரலாறு:

பிருகு முனிவர் சமீவனம் என்று அழைக்கப்பட்ட இந்த தலத்தில் பெருமாளை நினைத்து தவம் புரிந்தார். அந்த நேரம் பார்த்து சோழ மன்னர் சிங்கத்தை வேட்டையாடுவதற்கு அதிக சத்தம் எழுப்பிக் கொண்டே தனது படைகளுடன் வந்தார். அவர் எழுப்பிய சத்தத்தால் பிருகு முனிவரின் தவம் கலைந்தது. ஆத்திரமடைந்த முனிவர், மன்னரைப் பார்த்து முனிவர்கள் தவம் புரிந்த இந்த வனத்தில் சிங்கத்தை வேட்டையாட வந்து எனது தவத்தை நீ கலைத்தாய். ஆகையால், நீ சிங்க முகத்துடனேயே அலைவாய் என்று சாபமிட்டார்.

தனது தவறை உணர்ந்த மன்னர் மனம் வருந்தி மன்னரிடம் மன்னிப்புக் கேட்டார். முனிவரோ, மன்னரின் மீது இரக்கம் கொண்டு, விருத்த காவிரி எனப்படும் வெற்றாற்றில் நீராடி, இத்தல பெருமாளை வழிபாடு செய்துவிட்டு வரும்படி கூறினார். முனிவர் கூறியதைப் போன்று மன்னரும் பெருமாளை வழிபட்டார். இதனால், மனம் மகிழ்ந்த பெருமாள், கருட வாகனத்தில் மன்னருக்கு காட்சி கொடுத்தார். மேலும், பெருமாளின் அருளால் சிங்க முகம் நீங்கி மீண்டும் மன்னருக்கு பழைய முகம் கிடைக்கப் பெற்றது.

மிருகசீரிட நட்சத்திரத்திற்குரிய இந்த தலத்தில் தைப்பூச நாளில் விருத்த காவேரி எனப்படும் வெட்டாற்றில் புனித நீராடி பெருமாளை வழிபாடு செய்து வர வேண்டும். கருடன் மீது பெருமாள் எழுந்தருளி காட்சி அளிக்கும் போதும், மயில் மீது மால் மருகன் முருகன் காட்சி அளிக்கும் போது உனது சாபம் நீங்கப் பெறும் என்று முனிவர் கூறினார்.

அதோடு, மயில் வாகனம், சிம்ம வாகனம், ரிஷப் வாகனம், அன்ன வாகனம், மேஷ வாகனம் ஆகிய 108 விதமான வாகனங்களை செய்து இறைவனுக்கு விழா நடத்த வேண்டும் என்று முனிவர் கூறினார். அவரது ஆலோசனைப்படி செய்த மன்னர், பூஜைகள் நிகழ்த்தி இறைவனின் அருளைப் பெற்று சிங்க முகம் நீங்கப் பெற்றான்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் இத்தல இறைவனான ஆதிநாராயணப் பெருமாளை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

மேலும், நாக தோஷம், பட்சி தோஷம் உள்ளவர்கள், தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த குடும்பத்தினர்கள் ஒன்று சேரவும், மரண சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களும், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் தொந்தரவுகள் நீங்கவும் பௌர்ணமி மற்றும் மிருகசீரிட நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபாடு செய்யலாம்.