திருமணம் நடக்க, செல்வம் வளம் அதிகரிக்க துளசி கல்யாண பூஜை!

121

திருமணம் நடக்க, செல்வம் வளம் அதிகரிக்க துளசி கல்யாண பூஜை!

துளசி ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது. துளசியை இறைவனாகவும் வழிபடுவது சிறப்பு. இந்து சமயத்தில் துளசி புனிதமானதாக கருதப்படுகிறது. துளசியை பூமிக்குரிய வெளிப்பாடு என்றும் கூறுகின்றனர். திருமாலை எப்போதும் துதித்துக் கொண்டிருப்பவள் துளசி. வீட்டு முன்புறத்திலும், முற்றத்திலும் துளசி செடியை வளர்த்து வழிபடுவது சிறப்பு.

விருட்ச வழிபாட்டிற்கும் எல்லாம் தலையாயது துளசி வழிபாடு. நம் வீடுகளில் துளசிச் செடிக்கும் பூஜை செய்து விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. அந்த துளசிக்கு திருமணம் செய்வது என்றால் அது மிகவும் சிறப்பானது. திருமணம் என்பது, நாள் நட்சத்திரம், நல்ல நேரம் பார்த்து செய்யப்படுவது. கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியை கைசிக ஏகாதசி என்றும் கூறுவார்கள்.

கார்த்திகை மாத வளர்பிறை கைசிக ஏகாதசிக்கு மறுநாள் வரும் துவாதசி தினத்தை பிருந்தாவன துவாதசி என்றும் கூறுவார்கள். இந்த நாளில் துளசி தாயார் விஷ்ணு பகவானை மணந்தார் என்று விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த நாளில் துளசி தாயாரை விஷ்ணு பகவானுடன் திருமணக் கோலத்தில் அலங்கரித்து பூஜை செய்வது சிறப்பு வாய்ந்தது.

துளசி கல்யாண பூஜை:

துளசி கல்யாண பூஜையை அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் செய்ய வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த பூஜையை மேற்கொள்ள வேண்டும்.

பூஜை செய்யும் முறை:

துளசி செடியாக இருந்தாலும் சரி, துளசி மாடமாக இருந்தாலும் சரி, முதலில் அதனை சுத்தம் செய்து, பின்பு வஸ்திரம் அணிவித்து மஞ்சள் குங்குமமிட்டு அரிசி மாவு கொண்டு கோலம் போட வேண்டும். அதன் பிறகு பூ கொண்டு மணப்பெண்ணிற்கு எப்படி அலங்காரம் செய்வார்களோ அதே போன்று அலங்காரம் செய்ய வேண்டும். இதையடுத்து, துளசி செடிக்கு அருகில் விஷ்ணுவின் புகைப்படத்தையோ அல்லது கிருஷ்ணரின் புகைப்படத்தையோ அப்படி இந்த இரண்டு புகைப்படமும் இல்லையென்றால், நெல்லி மர குச்சியையோ வைக்க வேண்டும். ஏனென்றால், விஷ்ணுவின் அம்சமே நெல்லி மரம் தான்.

துளசி மற்றும் விஷ்ணுவை மணக்கோலத்தில் வைத்து நைவேத்தியம் படைத்து, விளக்கேற்றி தீபாராதனை காட்டி துளசி தாயை வழிபட வேண்டும். துளசி கல்யாண பூஜையின் போது அக்கம் பக்கத்தினரை வரவழைத்து, இந்த பூஜையில் கலந்துக் கொள்ளச் செய்து, அவர்களுக்கு தாம்பூலம் கொடுப்பது என்பது மேலும் நன்மையை கொடுக்கும்.

துளசியில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மன் ஆகியோர் வாசம் செய்வதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, துளசியின் அடிப்பாகத்தில் சிவன், மத்தியில் விஷ்ணு பகவான், நுனியில் பிரம்மன் என்று மும்மூர்த்திகளும் துளசியில் வாசம் செய்வதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இப்படி துளசி கல்யாணம் செய்வதன் மூலமாக, வீட்டில் சுபகாரிய தடை இருந்தால் கூட அது உடனடியாக நீங்கிவிடும். துளசி மகாலட்சுமியின் அம்சமாக இருப்பதால், செல்வ வளம் அதிகரிக்கும். மேலும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்றால், துளசி செடிக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.