திருமணம் நடக்க மாளிகைபுறத்தம்மன் வழிபாடு!

54

திருமணம் நடக்க மாளிகைபுறத்தம்மன் வழிபாடு!

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் என்ற ஊரில் உள்ளது சுவாமி ஐயப்பன் கோயில். இந்தக் கோயிலில் ஐயப்பன் மூலவராக இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் வருடாபிஷேகம், விஜயதசமி, தீபாவளி, தை மாதம் மகர விளக்கு பூஜை ஆகிய நாட்களில் திருவிழா நடக்கிறது. இங்கு ஐயப்பன் பஞ்ச லோக மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.

ஐயப்பனுக்கு வலதுபுறம் கன்னிமூல கணபதிக்கும், இடது புறம் மாளிகைபுறத்து அம்மனுக்கும் தனி சன்னதிகள் உள்ளன. மூலஸ்தானத்திற்கு முன் 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. படிகளுக்கு அருகில் கடுத்தசாமி, கருப்பண்ணசாமி, கருப்பசாமி ஆகியோர் காவல் தெய்வங்களாக இருக்கின்றனர். கோயிலில் கொடிமரமோ, பலிபீடமோ கிடையாது. மூலஸ்தானத்திற்கு முன்புறம் இரண்டு புலி வாகனங்கள் உள்ளன.

மாளிகைபுறத்தம்மன்: திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் நடக்க வேண்டி அம்மனுக்கு மஞ்சள் பொடி மற்றும் சட்டைத்துணி சாற்றி அந்த சட்டைத் துணியை தைத்து போட்டுக் கொள்கிறார்கள். சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் பக்தர்கள் தங்களது நிவர்த்திக்க் கடனை செலுத்துகின்றனர். குழந்தை இல்லாத தம்பதியினர் ஐயப்பன் கழுத்தில் மணி கட்டி வழிபாடு செய்கின்றனர். இதன் மூலம் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

தசபுஜ ஐயப்பன்: ஐயப்பன் சன்னதிக்கு கீழ்தளத்திலுள்ள மண்டபச் சுவரில் ஐயப்பனின் பலவித சுவை சிற்பங்கள் உள்ளன. ஆரியங்காவு போன்று பூரணையுடன் குடும்ப நிலையை காட்டும் வகையில் இருக்கும் ஐயப்பனும், பின்புற சுவரில் அச்சன் கோயில் போன்று இரு கால்களையும் மடக்கி, வலக்கையில் அக்னியுடன் யோகப்பட்டை அணிந்து பூர்ண புஷ்கலாவுடன் ஒரு ஐயப்பனும் உள்ளனர்.

இடதுபுறத்தில் காந்தமலையில் உள்ளது போன்று பத்து கரங்களுடன் கூடிய தசபுஜ ஐயப்பன் காட்சி தருகிறார். யோகப்பட்டை அணிந்திருக்கும் இவர், கைகளில் மகாவிஷ்ணுக்குரிய சக்கரம், புல்லாங்குழல், வில், அம்பு, சூலம், கத்தி ஆகியவற்றை வைத்திருக்கிறார்.

இங்குள்ள உற்சவர், சிலையானது, சபரிமலையில் ஆறாட்டு உற்சவத்தில் பங்கேற்கும் உற்சவரின் அமைப்பிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. உற்சவரின் இடது கையில் வில், அம்பு இருக்கிறது. வலது கை வரம் தருகிறது. மாளிகைபுறத்தம்மன் வட்ட வடிவ கண்ணாடி பிம்பம் போன்று காட்சிதருகிறாள். திருமண தடையுள்ள பெண்கள், அம்மனுக்கு மஞ்சள் பொடி மற்றும் சட்டைத்துணி சாற்றி அந்த சட்டைத் துணியை தைத்து போட்டுக் கொள்கிறார்கள்.

தான் கன்னியாக இருப்பது போன்று மற்ற பெண்களும் கன்னியாக இருக்க கூடாது என்ற எண்ணம் கொண்டவளாக அம்மனை சித்தரிக்கிறார்கள். இந்தக் கோயிலில் நடை திறப்பின் போது படி பூஜை செய்யப்படுகிறது. அப்போது, 18 படிகளுக்கும் கலசம் சாற்றி, பட்டுத்துணி சாற்றி, உன்னியப்பம், அரவணை நைவேத்தியங்கள் படைத்து மலர் அலங்காரம் செய்யப்படும். பின்னர், கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கும்.

மகர ஜோதி நாளின் போது திருவாபரண பெட்டி ஊர்வலம் ஜோதி தரிசனம், சித்திரைப்பிறப்பன்று விஷூக்கனி தரிசனம் ஆகியவையும் உண்டு.

திருமண வழிபாடு: மாளிகைபுறத்து அம்மன் எனப்படும் மஞ்சள் மாதா சன்னதி இந்தக் கோயிலில் உள்ளது. இவள், ஐயப்பனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சபரிமலையில் குடியிருப்பவள். எந்த ஆண்டில் முதல் முதலாக கன்னி சாமிகள் மாலை அணிந்து வரவில்லையோ அந்த ஆண்டில் அவளை திருமணம் செய்து கொள்வதாக ஐயப்பன் வாக்களித்துள்ளார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவளது ஆசை நிறைவேறவில்லை. ஏனென்றால், ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனுக்கு கன்னி சாமிகள் மாலை அணிந்து சபரிமலைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தனது எண்ணம் நிறைவேறாத நிலையில், தன்னைப் போன்று எந்த கன்னிப் பெண்ணும் இருக்க கூடாது என்பதற்காக, மற்ற பெண்களுக்கு திருமண பாக்கியம் அருள்கிறாள்.

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலைப் போன்றே இந்தக் கோயிலிலும் ஐயப்பன் உயர்ந்த இடத்திலுள்ள மூலஸ்தானத்தில் பாலகனாக அருள்பாலிக்கிறார். பஞ்சலோக மூர்த்தியான இவரது சிலையானது கேரளாவில் செய்யப்பட்டுள்ளது. சுவாமிக்கு வலப்புறம் உள்ள துவாரபாலகர் தனது ஒருவிரலை மட்டும் காட்டி இறைவன் ஒருவனே என்ற தத்துவத்தை உணர்த்துவது போன்றும், மனதை அலைபாயவிடாமல் ஐயப்ப சுவாமியை அலை பாயவிடாமல் ஒரு மனதாக வணங்க வேண்டும் என்பதையும் உணர்த்துவாக சொல்லப்படுகிறது.

இடது புறத்திலுள்ள துவாரபாலர் சுவாமியின் பக்கம் திரும்பி தனது திருப்பிக்காட்டி இறைவனான இவரை வணங்கு என்று காட்டுகிறார். சபரிமலையில் எப்போதெல்லாம் கோயிலில் நடை திறக்கப்பட்டிருக்கிறதோ அப்போதெல்லாம் இங்கேயும் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். விஷேசம் முடிந்து கோயிலில் நடை அடைக்கப்படும் போது ஐயப்பனுக்கு விபூதி அலங்காரம் செய்து, இடது கையில் தண்டம் வைத்து, ஒரு தீபத்தை ஏற்றுகிறார்கள். ஐயப்பன் தவ நிலையில் இருப்பதால், இந்த வழிபாட்டு முறை பின்பற்றப்படுகிறது. மீண்டும் கோயில் நடை திறக்கப்படும் போது விபூதி அலங்காரம் கலைக்கப்பட்டு அது பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.