திருமண தடை நீங்கி வேலைகள் ஆரம்பிக்க வழிபட வேண்டிய கோயில்!

40

திருமண தடை நீங்கி வேலைகள் ஆரம்பிக்க வழிபட வேண்டிய கோயில்!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் என்ற ஊரில் உள்ள கோயில் ஆயிரத்தெண் விநாயகர். இந்தக் கோயிலில் ஆயிரத்தெண் விநாயகர் மூலவராக காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஏழாவது நாளின் போது பஞ்சமுகத்துடன் கூடிய ஹேரம்ப கணபதி நடராஜருடன் திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.

விநாயகருக்கென தமிழகத்தில் எழுதப்பட்ட கோயில்களில் முக்கியமான கோயில் இது. தேர், கொடிமரம் அமைத்து திருவிழா காணும் கோயில்களில் இதுவும் அடங்கும். ஆரம்ப காலத்தின் போது இந்த ஊரின் குளத்தின் தென்கரையில் அந்தணர்கள் ஆயிர்த்தெண் விநாயகரை ஸ்தாபித்து வழிபட்டனர். முதலில் கர்ப்பகிரகமும், அர்த்த மண்டபமும் அமைக்கப்பட்டது. பிற்காலங்களில் காளஹஸ்தீஸ்வரர், கல்யாணி அம்மன் சன்னதிகளுடன் மகா மண்டபம் அமைக்கப்பட்டது.

திருவாவடுதுறை ஆதீனத்தால் கொடிமரம், தேர் மற்றும் உற்சவ மூர்த்திகள் தரப்பட்டன. சமீப காலத்தில் சுற்று மண்டபமும், மேற்கூரை தளமும் அமைக்கப்பட்டன. அடிக்கடை உடல் நலக் குறைவு ஏற்பட்டாலும், திருமணத் தடை இருப்பவர்களும், படிப்பில் குறைபாடு இருந்தாலும், வழக்குகளில் இழுபறி இருந்தாலும், மோட்டார் வாகனங்களில் செல்லும் போது அடிக்கடி விபத்து ஏற்பட்டாலும், பணப்பிரச்சனை தீரவும் இங்கு வந்து விநாயகரை வழிபட வேண்டிய காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும்.

திருமண வேலைகள் ஆரம்பிக்க, வீடு கட்ட, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, வியாபாரம் ஆரம்பிக்க என்று நாம் எந்த காரியம் தொடங்கினாலும் முழு முதல் கடவுள் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தால் போதும் எந்தவித தடைகளும் வராமல் பார்த்துக்கொள்வார் என்பது ஐதீகம்.

பிரார்த்தனை நிறைவேறியதும் ஆயிரத்தெண் விநாயகருக்கு 108, 1008 தேங்காய் சாற்றி வழிபாடு செய்கின்றனர். மேலும், 108 தீப வழிபாடும் செய்து நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர். ஆதிசங்கரர் தனது உடல் உபாதை நீங்க திருச்செந்தூர் செல்லும் வழியில் இத்தலத்தில் கணேச பஞ்சரத்தினம் பாடி பின் திருச்செந்தூர் சென்று சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம் பாடி வியாதி நீங்கப் பெற்றார்.

எதுவும் இல்லாத இட த்தில் கூட சிறிதளவு மஞ்சள் இல்லையென்றால் மணல் பிடித்து வைத்தால் கூட பிள்ளையார் வந்துவிடுவார். அப்படிதான் ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி நாளன்றும் விநாயகர் பல உருவங்களில் பக்தர்கள் மூலமாக காட்சி தருகிறார். அப்படி வந்தவர் தான் இந்த ஆயிரத்தெண் விநாயகர்.

கிமு 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சோமார வல்லபன் என்ற மன்னன் நர்மதை நதிக்கரையிலிருந்து 1008 அந்தணர்களை வரவழைத்து இங்கு பெரிய யாகம் நடத்த முடிவு செய்தான். ஆனால், ஒருவர் மட்டும் குறைந்துள்ளார். பிரார்த்தனையின் பேரில் விநாயகர் அந்தணவர் வடிவில் ஆயிரத்தெட்டாவது (1008) நபராக வந்து யாகத்தை பூர்த்தி செய்து தந்தார். இதன் காரணமாக இங்குள்ள விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

யாகத்தின் முடிவின் போது தனக்கு கொடுக்கப்பட்ட ஆறுமுகமங்கலம் கிராமத்திலேயே விநாயகர் தங்கிவிட்டதாக வரலாறு கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.