திருமண தடை நீங்க கல்யாண வெங்கடேச பெருமாள் மட்டை தேங்காய் வழிபாடு!

89

திருமண தடை நீங்க கல்யாண வெங்கடேச பெருமாள் மட்டை தேங்காய் வழிபாடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நார்த்தாம்பூண்டி என்ற ஊரில் திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேசப் பெருமாளும் கோயில் கொண்டுள்ளனர்.

பிரளயம் ஏற்பட்ட போது பிரபஞ்சம் அழிந்து போனது. அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் திருமால், ஆலிலை எனப்படும் ஆலமரத்தின் இலையில் குழந்தை வடிவில் கண்ணனாக மிதந்து வந்தார். அழிந்து போன இந்த பிரபஞ்சத்தை மீண்டும் உருவாக்க நினைத்தார். இதற்காக, தன்னுடைய நாபிக் கமலத்திலிருந்து (தொப்புள்) பிரம்மனை உருவாக்கினார்.

பிரம்மனுக்கு படைக்கும் தொழில் சக்தியை வழங்கினார். தனக்கு படைப்பு தொழில் சக்தியை கொடுத்த நாராயணருக்கு நன்றி செலுத்தும் விதமாக, பூலோகத்தில் ஒரு கோயில் கட்டி வழிபட்டார். அந்த கோயில் தான் திருவுந்திப் பெருமாள் கோயில்.

உந்தி என்பதற்கு வயிறு என்று பெயர். தொப்புள் (வயிறு) வழியாக வந்த பகுதி என்பதால், பெருமாளுக்கு திருவுந்திப் பெருமாள் என்று பெயர் வந்தது. ஆனால், ஆரம்பத்தில் பிரம்மனின் 4 முகத்தைக் குறிக்கும் வகையில் சதுர்முகன்புரி என்று இந்த ஊருக்கு பெயர் இருந்தது. அதன் பிறகு தான் நார்த்தாம்பூண்டி என்று பெயர் வந்துள்ளது. ஏன், என்பதற்கான காரணத்தை இந்தப் பதிவில் பார்ப்போம்….

பிரம்ம தேவனின் மகன் நாரத முனிவர் சாபத்தின் விளைவாக பூலோகத்தில் பிறந்தார். நாரத முனிவரின் சாபம் தீர திருவுந்திப் பெருமாளை நந்தனம் அமைத்து வழிபட்டு வந்தார். இப்படியே ஒரு வருடம், 2 வருடம், 3 வருடம் என்று வரிசையாக கடந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு திருமால், நாரத முனிவருக்கு காட்சி கொடுத்தார்.

அதோடு, நாரத முனிவரின் சாபத்தையும் நீக்கி அருள் புரிந்தார். நாரத முனிவர் தங்கி வழிபட்டு வந்ததன் காரணமாக சதுர்முகன்புரி என்ற ஊரானது நாரதர் பூண்டி என்று அழைக்கப்பட்டு பின்னர், நார்த்தாம்பூண்டி என்று மாறியது. 12ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட சம்புவராயர் காலத்தில் கோயில் கட்டப்பட்டது. ஆனால், 16ஆம் நூற்றாண்டில் படையெடுப்பின் காரணமாக கோயில் பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து, பெருமாளுக்கு புதிய கோயில் கட்டப்பட்டது. அப்போது, ஸ்ரீ தேவி – பூதேவி சமேத பெருமாள் சிலை அமைக்கப்பட்டது. அதற்கு கல்யாண வெங்கடேசப் பெருமாள் பெயர் சூட்டப்பட்டது. திருவுந்தி பெருமாள் மற்றும் கல்யாண வெங்கடேசப் பெருமாள் என்று இரு பெருமாள்கள் கொண்ட கோயிலாக இந்த கோயில் விளங்குகிறது.

இந்த கோயிலில் பத்மாவதி தாயார் மற்றும் ஆண்டாள் நாச்சியார் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. கல்யாண வெங்கடேசப் பெருமாளுக்கு மட்டை தேங்காய் வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலில் புனித நீராடிவிட்டு ஈரத் துணியுடன் கல்யாண வெங்கடேசப் பெருமாளுக்கு மட்டை தேங்காய் வைத்து வழிபட்டு, 27 முறை கோயிலை சுற்றி வலம் வர அடுத்த மாதமே திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். இந்த கோயில், திருமணத் தடை நீக்கும் கோயிலாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.