திருமண வரன் அமைய வழிபட வேண்டிய கோயில்!

87

திருமண வரன் அமைய வழிபட வேண்டிய கோயில்!

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் பகுதியில் உள்ள கோயில் ஐயப்ப பக்தர்கள் பிரார்த்தனை கோயில். இந்தக் கோயிலில் ஐயப்பன் மூலவராக காட்சி தருகிறார். தாயார், மஞ்ச மாதா பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கொடியேற்றப்பட்டு ஜனவரி 1ஆம் தேதி ஆறாட்டு விழா நடத்தப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி, சித்திரை விஷூ, நவராத்திரி விழா, விளக்கு பூஜையும், கார்த்திகை, மார்கழியில் நித்ய பூஜையும், தமிழ் மாத முதல் சனிக்கிழமையில் நெய் அபிஷேகமும் செய்யப்படுகிறது.

சபரிமலையில் உள்ள ஐயப்பன் விக்ரகம் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்து திண்டுக்கல்லில் உள்ள இந்த பக்தர்களின் பிரார்த்தனை மண்டபத்தில் வைத்து எடுத்துச் செல்லப்பட்டது என்பது சிறப்பம்சம். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பின்புறம் இந்தக் கோயில் உள்ளது. கிழக்கு பார்த்து அமைந்துள்ள கோயில் முன்பு மஞ்சள் மாதா சன்னதியும், கம்பத்தடி விநாயகர் சன்னதியும் அமைந்துள்ளது.

கோயில் பிரார்த்தனை மண்டபத்தின் முன் கோபுரத்தில் புலி வாகனங்கள் உள்ளது. உட்புறம் பிரார்த்தனை மண்டபத்தில் ஐயப்ப சுவாமிகள் தரிசனம் செய்கிறார். குடும்ப நலன், குழந்தை பாக்கியம், திருமணத் தடை நீங்கவும், தீராத நோய் தீரவும் இந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்யப்படுகிறது. பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், கோயிலில் அன்னதானம் செய்கின்றனர்.

கடந்த 1967 ஆம் ஆண்டு ஐயப்ப பக்தர்கள் சிலர் சபரிமலை ஐயப்பனின் புகைப்படத்தை வைத்து வழிபட்டனர். அதன் பிறகு நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, 1969 ஆம் ஆண்டு பிரார்த்தனை மண்டபம் கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, வசந்த மண்டபம், கலையரங்கம் கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதங்களிளும், ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர்.

ஐயப்பன் பக்தர்கள் மட்டுமல்லாமல் சில வெளிநாட்டு பக்தர்களும் இந்தக் கோயிலுக்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர். கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது பக்தர்கள் இந்தக் கோயிலிலிருந்து தீச்சட்டி எடுத்துச் சென்று அம்மனை வழிபடுகின்றனர்.