திருமண வரன், குழந்தை பாக்கியம் அருளும் அய்யனார் வழிபாடு!

29

திருமண வரன், குழந்தை பாக்கியம் அருளும் அய்யனார் வழிபாடு!

இந்த மாதத்தில், இந்த தேதியில் இந்த குழந்தை தான் பிறக்கும் என்று அருள்வாக்கு கூறும் பூசாரி கலிதீர்த்தான் இருக்கும் கோயில் தான் ஆயக்காரன்புலம் ஸ்ரீ கலிதீர்த்த அய்யனார் கோயில்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகிலுள்ள ஆயக்காரன்புலம் என்ற கிராமத்தில் தான் ஸ்ரீ கலிதீர்த்த அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருக்கும் பூசாரி தான் கலிதீர்த்தான். அருள் வாக்கு சொல்லும் இந்த பூசாரி கலிதீர்த்தான், இந்த தேதியில் இந்த குழந்தை பிறக்கும் என்று கணித்து சொல்வாராம். அவரிடம் அருள் வாக்கு கேட்கவே செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்குமாம்.

குழந்தை வரம் வேண்டி வரும் தம்பதியினருக்கு இந்த தேதியில், இந்த மாதத்தில் இந்த குழந்தை பிறக்கும் என்று அருள் வாக்கு சொல்கிறார் கலிதீர்த்தான். அதன்படியே குழந்தை பெற்றெடுக்கும் தம்பதியினர், அந்த கோயிலுக்கு வந்து குழந்தை சிலையை வைத்து வணங்கிவிட்டு செல்கின்றனர். வேதாரண்யத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு எங்கு தோண்டினாலும் உப்பு நீராக இருந்துள்ளது. ஆனால், ஆயக்காரன்புலம் பகுதியில் மட்டும் நல்ல நீர் கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதியில், 20 அந்தணக் குடும்பங்கள் குடியேறியதாக கூறப்படுகிறது.

ஒரு நாள் பௌர்ணமியன்று வானத்திலிருந்து ஒளி வந்து மண்ணில் இறங்கி, அதன் பின் அந்த ஒளி மீண்டும் வானிற்கே சென்றதையும் அந்தணர் ஒருவர் கண்டு, அதனை மற்றவர்களிடம் பகிர்ந்தார். ஆனால், ஓரிரு நாட்களிலேயே அவர் இறந்துவிட்டார். இதே போன்று மற்றொரு பௌர்ணமியில் ஒரு அந்தணர் கண்டு மற்றவர்களிடம் பகிர்ந்தார். ஆனால், அவரும் இறந்துபோனார்.

இதன் விளைவாக செங்கல்லை நட்டு வைத்து 15 நாட்கள் பரிகார பூஜைகள் செய்தனர். அடுத்து வந்த பௌர்ணமியன்று வானிலிருந்து மண்ணில் வந்திறங்கிய ஒளிவடிவமானது மீண்டும் செல்லவில்லை. ஆனால், நட்டு வைத்து செங்கல் வெடித்து கருங்கல்லாக மாறியது. மேலும், ஒரு அசரீரி ஒன்று ஒலித்தது. அதில், நான் அய்யனார் வந்திருக்கிறேன். என்னை வேண்டி வணங்குவோருக்கு வேண்டிய வரம் அளிப்பேன் என்று அந்த அசரீரி சொன்னது.

அன்று முதல் பக்தர்களின் கலி தீர்க்கும் அய்யனாராக அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீ கலிதீர்த்த அய்யனார். அது மட்டுமின்றி, இந்த கோயிலில் வீரன், பெத்தாள், சம்பவராயன், தூண்டில்காரன், பெரியாச்சி போன்ற தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன.

இந்த அய்யனாருக்கு கூத்து என்றால் ரொம்பவே பிடிக்குமாம். வேண்டுதல் பலித்த பக்தர்கள், அய்யனார் கோயிலில் படையிலிட்டு பூஜை செய்து, ஏதாவது ஒரு புராணக் கதைகள் நடத்தி வைக்க வேண்டுமாம். இதனை அய்யனார் மகிழ்ச்சியோடு கண்டுகளிப்பதாக ஐதீகம் என்று கூறப்படுகிறது.

திருமணம் வரம் வேண்டி வரும் பக்தர்களுக்கு அய்யனாருக்கு சாற்றிய மாலை கொடுக்கப்படுகிறது. அந்த மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு கோயிலை சுற்றிலும் வலம் வந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்படி செய்வதோடு, வீட்டிலும் அய்யனார் உருவப்படத்தை வைத்து வழிபட வேண்டுமாம். அப்படி செய்வதன் மூலம் 3 மாதத்திற்குள்ளாக திருமண வரம் அமைந்து திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாம். அதனை அவ்வாறே அய்யானரும் நடத்தி வைப்பாராம்.