திருமண வரம் கை கூடி வர சென்று வர வேண்டிய ஸ்தலம் திருமணஞ்சேரி!

140

திருமணஞ்சேரி என்ற திருத்தலத்தில் பூஜை செய்து வழிபட்டால் திருமண வரம் கை கூடி வரும் என்பது ஐதீகம்.

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றின் அருகில் அமைந்துள்ள ஒரு கிராமம் தான் திருமணஞ்சேரி. திருமணம் என்பது இருமணம் இணைவது. சேரி என்பது கிராமம். திருமணஞ்சேரி என்றால் திருமணம் நடந்த இடம் என்று பொருள். அதாவது, சிவபெருமானும், பார்வதி தேவியும் திருமணம் செய்து கொண்ட இடம். இவர்களுக்கு மகா விஷ்ணு திருமணம் செய்து வைத்துள்ளார். ஆதலால் இந்த இடம் புகழ் பெற்ற ஸ்தலமாக கருதப்படுகிறது.

சிவன் பார்வதி திருமணத்தை தொடர்ந்து, விஷ்ணு, லட்சுமி, பார்வதி, சிவன் ஆகிய நால்வரும் இங்கேயே வாசம் செய்கிறார்கள் என்பது ஐதீகம். பூவுலகில் பசுவாக பிறந்த பார்வதி தேவியை, பசு மேய்ப்பவராக அவதாரம் எடுத்து சிவபெருமான் அப்பசுக்களை பராமரித்து வந்தார். ஒரு கட்டத்தில் பார்வதி தேவி கொடுத்த பாலால் மனம் குளிர்ந்த சிவபெருமான் பார்வதி தேவிக்கு சுய உருவம் கொடுத்தார். பரத முனிவரிடம் வளர்ந்து வந்த பார்வதி தேவியை, அவரது விருப்பப்படியே சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார் என்று தல வரலாறு கூறுகிறது.

திருமணஞ்சேரிக்கு அருகில் அமைந்துள்ள மற்றொரு பிரபலமான கோயில் எதிர்கோல்பாடி. மணமகனாக சிவபெருமானை அவரது மாமனாரான பரத முனிவர் வரவேற்ற இடம் தான் இந்த எதிர்கோல்பாடி.

வழிபடும் முறை:

திருமணஞ்சேரியில் உள்ள சப்தகிரி தீர்த்தத்தில் முதலில் குளித்துவிட்டு மூலவரான கல்யாண சுந்தரருக்கு மாலை அணிவிக்க வேண்டும். அதன் பின் தீபம் வைக்கப்பட்டுள்ள மேடையில் 5 தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும். அப்போது கொடுக்கப்படும் எலுமிச்சை பழத்தை உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்காமல் தண்ணீரில் கலந்து அப்படியே குடிக்க வேண்டும்.

திருமணம் ஆகாமல் தவிக்கும் ஆண்களும், பெண்களும் மணக்கோலத்தில் வந்து மூலவரை தரிசனம் செய்ய வேண்டும். அப்படி செய்தல் கூடிய விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். மேலும், ராகு தோஷம் உள்ளவர்களும் இந்த திருத்தலத்திற்கு வருகை தந்து ராகு பகவானை வணங்கி வர ராகு தோஷம் நீங்கும். அதோடு, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் புனித நீராடி ராகு பகவானை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

எப்படி செல்வது?

கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. குத்தாலத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் திருமணஞ்சேரி இருக்கிறது. இந்த கோயிலுக்கு மற்றொரு பெயர் உத்வகநாதர் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.