தீராத நோயும் தீரும்: ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் வழிபாடு!

97

தீராத நோயும் தீரும்: ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் வழிபாடு!

அதிர்வுகளும், உடலுக்குத் தேவையான கதிர்வீச்சுகளும் ஒருங்கே அமைக்கப்பெற்றிருப்பது சிவலிங்கம். இதன் மீது சாற்றப்படும் அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதம் பக்தர்களின் தீரா நோயையும் குணப்படுத்துவதோடு, குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பாக்கியத்தையும் கொடுக்கிறது.

இந்த உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அடிப்படையாக இருப்பது உணவு (சாப்பாடு, அன்னம்). உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் படைப்பது இறைவன் என்றால், அந்த உயிர்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்து ஆகாரத்தையும் படைத்தருள்வது இறைவன். அப்படிப்பட்ட இறைவனுக்கு நன்றி சொல்லும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

இந்த ஐப்பசி பௌர்ணமி நாளில் தான் சந்திர பகவான் தனது முழு சாபமும் நீங்கப்பெற்று 16 கலைகளுடன் பூமிக்கு அருகில் வந்து மீண்டும் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும். பிறை நிலவை தனது தலையில் சூடிய சிவபெருமானுக்கு அந்த முழு பௌர்ணமி நாளில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. நவக்கிரகத்தில் உள்ள சந்திர பகவானுக்கு உரிய தானியம் அரிசி. இந்த தானியத்தில் சிவபெருமான் இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

சிவலிங்கமாக காட்சி தரும் சிவனுக்கு அன்னம் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்தை தரிசனம் செய்து பிரசாதமாக கொடுக்கப்படும் அன்னத்தை உண்ணும் பக்தர்களுக்கு தீராத நோயும் தீரும், வறுமை ஒழியும், விவசாயம் செழிக்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவலிங்கத்தின் மீது சாற்றப்படும் சாதம் லிங்கத்தின் தன்மையை பெறும். ஆதலால், அந்த அன்னாபிஷேகத்தை தரிசிப்பதன் மூலமாக கோடிக்கணக்கான லிங்கத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கப் பெறும்.

அன்னத்தால் சிவலிங்கம் திருமேனி முழுவதும் அலங்கரித்து அதற்கு மேலாக காய்கறிகள் கொண்டு அலங்கரிப்பார்கள். அப்போது வேத மந்திரங்கள் முழங்கப்படும். அதன் பிறகு இரவு நேரங்களில் சிவலிங்கத்தின் மீது சாற்றப்பட்ட அன்னத்தை எடுத்து கோயில் குளம்  மற்றும் ஆற்று நீரில் வாழும் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாக அளித்துவிடுவார்கள்.