தீராத நோய்களை தீர்க்கும் நடராஜர் சந்தனக் காப்பு!

38

தீராத நோய்களை தீர்க்கும் நடராஜர் சந்தனக் காப்பு!

இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை என்ற ஊரில் உள்ளது உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில். உலகத்திலேயே முதல் முதலாக தோன்றிய கோயில் என்ற பெருமை இந்த கோயிலுக்கு உண்டு. பொதுவாக, திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, அண்ணாமலையாரை நினைத்தால் முக்தி என்று கூறுவார்கள்.

ஆனால், உண்மையில் உத்தரகோசமங்கை மண்ணை மிதித்தாலே முக்தி தான். நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்திலிருந்து செவ்வாய் பகவான், சந்திரன் பகவான், சூரியன் பகவான் மட்டுமே இந்த கோயிலில் கிரகங்களாக அமைந்துள்ளன. இந்த கோயிலில் வைத்து தான் சிவபெருமான், பார்வதி தேவிக்கு வேதங்களைப் பற்றிய வேதாகமத்தின் பெயர் விளக்கம், வேதாகம் மொழிகள் பற்றிய ரகசியங்களை உபதேசம் செய்துள்ளார்.

இந்த கோயிலில் உள்ள சிவபெருமான் மங்களநாதர் சுயம்புவாக இலந்தை மரத்திற்கு அடியில் தோன்றியுள்ளார். கோயிலில் மங்களநாதர் சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் சன்னதிகளும், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், நடராஜர், பாலபைரவர் உபசன்னதிகளும் உள்ளன.

மூன்று மூர்த்தங்கள்:

மங்களேச்சுவரர், மங்களேசுவரி, ஆடல்வல்லான் மூர்த்தியும் இங்கே (நடராசர்) மரகதப் பச்சை, தீர்த்தமும் இங்கே பச்சை, விருட்சமும் இங்கே பச்சை என்று வெறும் பச்சையாகவே இருக்கின்றன.

கிமு 3100 ஆண்டு பரீஷீத்து மகாராஜன் காலத்தில் கலிகாலம் பிறந்தது. அந்த காலத்திலேயே உத்திரகோசமங்கை கோயில் இருந்திருக்கிறது. அதற்கு முந்தைய காலம் ராயாயணக் காலம். இந்தக் காலத்தில் இலங்கேஸ்வரன், இராவணன் உத்திரகோசமங்கை வந்து வணங்கி சென்றிருக்கிறான். இந்த கோயிலில் உள்ள மங்களேச்சுவரர் மண்டோதரிக்கு அருளியுள்ளார்.

மண்டோதரி மணந்தால் உண்மையான சிவ பக்தனைத் தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள். இதன் காரணமாக அவளுக்கு திருமணம் ஆகவில்லை. அதன் பின்பு தான் மங்களேச்சுவர்ர் மற்றும் மங்களேசுவரி அம்மனை வழிபடவே இராவணனை மணந்தாள். இராவணன் – மண்டோதரி திருமணம் உத்தரகோசமங்கை கோயிலில் நடந்துள்ளது. இவர்களது திருமணத்தை மங்களேச்சுவரர் தான் நடத்தி வைத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

வலைவீசி விளையாண்ட படலம்:

திருவிளையாடல் படத்தில் வரும் கடைசிக் கதைதான் இந்த வலைவீசி விளையாண்ட படலம். தற்போது கோயில் வாசல் உள்ள இட த்தில் தான் அப்போது கடல் இருந்துள்ளது. இங்கு தான் சிவபெருமான் வலை வாணனாக உருவெடுத்து சுறாவை அடக்கியுள்ளார். அதன் பின் அவர் மணந்த மீனவ பெண் தான் மங்கேசுவரி. தான் மணந்த மங்களேசுவரிக்கு இறைவன் ஆனந்த தாண்டவத்தை ஆடிக் காட்டியுள்ளார். மேலும், பிரணவ மந்திரத்தின் பொருளையும் மங்களேசுவரிக்கு உபதேசமும் செய்துள்ளார்.

அதாவது, உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்று அழைக்கப்படுகிறது. உத்திரம் என்பது உபதேசம். கோசம் என்பது இரகசியம். அதாவது பிரணவ மந்திரம். மங்கைக்கு உபதேசித்ததால் இந்த இடம் உத்தர கோசமங்கை என்றானது.

கோயில் அமைப்பு:

இந்த கோயிலின் முதல் பிரகாரத்தில் நின்ற கோலத்தில் முருகப் பெருமானும், 2ஆவது பிரகாரத்தில் ஆறு திருமுகம், பன்னிரண்டு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி புரிகிறார். பொதுவாக தாழம் பூ கொண்டு எந்த சிவன் கோயில்களிலும் அர்ச்சனை செய்யமாட்டார்கள். ஆனால், இந்தக் கோயிலில் தாழம் பூ கொண்டு அர்ச்சனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தான் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மார்கழி மாதம் திங்கள் அன்று வரும் திருவாதிரை நாட்களில் நடராஜர் சந்தனக் காப்பிட்ட கோலத்தில் தரிசனம் தருவார்.

நடராஜர் சந்தனக் காப்பு:

மார்கழி மாத திருவாதிரைக்கு முதல் நாள் பழைய சந்தனம் களையப் படும். 32 வகை அபிஷேகங்கள் அதி அமர்க்களமாக நடக்கும். அன்று இரவே புதிய சந்தனம் சாத்தப் படும். ஆண்டு முழுவதும் நடராஜர் (ஆடல்வல்லான்) திருமேனி மீது இருந்த சந்தனம் களையப்பட்ட பின், அந்த சந்தனத்தை பெற்றுக் கொள்ள பக்தர்கள் வரிசையாக நிற்பார்களாம். காரணம், அந்த சந்தனம் மருத்துவக் குணம் கொண்டது. தீராத நோய்களையும் தீர்க்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.