தீராத நோய் தீர அரச மரம் வழிபாடு!

21

தீராத நோய் தீர அரச மரம் வழிபாடு!

அரச மரம் நேர்மறை ஆற்றலை அளிக்கக் கூடிய ஒன்று. அரச மரத்தை சுற்றினால், அறிவு வளரும். பிள்ளையார் கூட அரச மரத்தடியில் தான் அமர்ந்துள்ளார். அரச மரத்தடியில் அமர்ந்தால் மனம் தெளிவடையும். அரச மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தாலோ, மந்திரங்கள் சொன்னாலோ நிறைய நன்மைகள் உண்டு. இவ்வளவு ஏன், புத்தர் கூட அரச மரத்தடியில் அமர்ந்து தான் ஞானம் பெற்றார் என்று கூட வரலாறு கூறுகிறது.

கீதையில் கண்ணபிரான், மரங்களுக்குள் நான் அரச மரமாகவே இருக்கிறேன். அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் மகா விஷ்ணுவும், நுனிப் பகுதியில் பரமசிவனும் வாசம் செய்கிறார்கள். மும்மூர்த்திகளின் சொரூபமாக இந்த அரச மரம் விளங்குகிறது. அதனால் தான் அரச மரத்திற்கு பூஜை செய்வது, பிரதட்சணம் செய்வது, துன்பத்திற்கு காரணமான பாவங்களை நீக்கி நல்ல அறிவை பெற்று தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அப்படிப்பட்ட அரச மரத்தை வலம் வரும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம் இதோ…

ஸ்லோகம்:

மூலதோ பிரம்ம ரூபாய

மத்யதோ விஷ்ணு ரூபினே

அக்ரத: சிவ ரூபாய

விருட்ச ராஜ யதே நம:

அரச மரத்தை வலம் வரும் பொழுது இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே வலம் வர வேண்டும். இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி, 108 முறை அரச மரத்தை வலம் வந்தால் தீராத நோய்கள் அனைத்தும் தீரும். ஆசைப்பட்ட விஷயங்கள் எல்லாமே நடக்கும்.

அரச மரத்தை சுற்றி விட்டு அடி வயிற்றை தொட்டுப் பார்த்தாளாம் என்பது பழமொழி…இந்த பழமொழி எதற்கு சொல்கிறார்கள் என்றால், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் அரச மரத்தை சுற்றி வந்தால், குழந்தை பாக்கியம் இல்லாத தோஷம் நீங்கி, குழந்தைப் பாக்கியம் கிடைக்கப் பெறும் என்பது தான்.

சூரியன் உதயமாவதற்குள்ளாக காலை 10.40 மணி வரையிலும் சூரியனின் கிரகணங்கள் அரச மரத்தின் மீது விழுகிறது. அப்பொழுது அதிலிருந்து வரும் காற்றை சுவாசிப்பதன் மூலமாக நமது உடலுக்கு நன்மையை தரும். காலை 10.40 மணிக்குள்ளாக அரச மரத்திற்கு பூஜை செய்து வழிபடுவது சிறந்தது.

ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8.20 மணிக்குள்ளாக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரச மரத்தை 108 முறை சுற்றி வர வேண்டும். இதன் மூலமாக, தீராத நோய் தீரும். சனிக்கிழமை மட்டும் அரச மரத்தை தொட்டு வணங்க வேண்டும். ஆனால், மற்ற கிழமைகளில் அரச மரத்தை தொட்டு வணங்க கூடாது.

எந்தெந்த கிழமைகளில் அரச மரத்தை சுற்றினால் என்ன பலன்:

திங்கள் – மங்களம் உண்டாகும்.

செவ்வாய் – தோஷங்கள் விலகும்

புதன் – வியாபாரம் பெருகும்

வியாழன் – கல்வி வளரும்

வெள்ளி – சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்

சனி – கஷ்டங்கள் விலகி லட்சுமியின் அருள் கிடைக்கும். தீராத நோய் தீரும்.