தீராத நோய் தீர சென்று வர வேண்டிய கோயில்!
புதுச்சேரியில் உள்ள மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவிலுக்கு சென்று வந்தால் காசிக்கு சென்று வந்ததற்கான புண்ணியமும் பலன்களும் கிடைக்கும்.
மனித வாழ்வில் அனைத்தையும் ஆண்டு முடித்துவிட்டு இறந்த பின்னர் மோட்சத்தை அடைய வேண்டும் என்றால் காசிக்கு சென்று வர வேண்டும் என்ற நம்பிக்கை இந்துக்களிடையே நிலவுகிறது. ஆனால் பொருளாதாரம், உடல்நலம் போன்ற பல காரணங்களால் அனைவராலும் காசிக்கு செல்ல முடிவது இல்லை. இதோ அதற்கான வழி, ஸ்ரீ கங்கை வராக நதீஸ்வரர் கோயிலுக்கு சென்று வந்துவிடுங்கள்.
ஸ்தல வரலாறு:
முன்னொரு காலத்தில் இறந்தவர்களின் அஸ்தியை புனித நதியான கங்கையில் கரைப்பதற்காக சிலர் இந்த வழியாக சென்று கொண்டிருந்தனராம். அவர்கள் திருக்காஞ்சியைக் கடக்கும் போது அவர்கள் வைத்திருந்த அஸ்தி பூவாக மாறியதாம். காசியை விடவும் இந்த ஸ்தலம் வீசம் அதிகம் கொண்டது என அசரிரியும் கேட்டதாம்.
உடனே அவர்கள் காசிக்கு செல்லும் முடிவை கைவிட்டு இங்கேயே அஸ்தியை கரைத்தனராம். அன்றிலிருந்து இந்த ஸ்தலம் காசிக்கு நிகரானது என்று போற்றப்பட்டு வருகிறது. இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் எம்பெருமானும் தேவியும் தங்களை மனமுருகி வேண்டும் பகதர்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் கொடுத்து அருள் பாலிக்கின்றனர் என்ற நம்பிக்கையும் இங்கே நிலவுகிறது.
காசிக்கு இணையாக தெய்வீகத் தன்மை வாய்ந்த திருத்தலம்:
வடக்கு நோக்கி உத்தரவாகினியாக சங்கராபரணி பாய்வதால், இந்த ஆறு கங்கைக்கு நிகராகவும், இந்தத் தலம் காசிக்கு நிகரான தலமாகவும் போற்றப் படுகிறது. சங்கராபரணி என்னும் வராக நதியின் கரையில் கோவில் கொண்டிருப்பதாலும் இந்தத் திருத்தலத்து இறைவன் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார்.
மேலும் இந்த இறைவன் அகத்திய மகரிஷியால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பெற்றவர் என்பதால், இந்தக் கோவில் அகத்தீஸ்வரம் என்னும் பெயரிலும் போற்றப்படுகிறது. கருவறையில் வீற்றிருக்கும் 16 பட்டைகள் கொண்ட ஷோடச லிங்கமாக சிவபெருமான் இங்கு வரும் பக்தர்களுக்கு காசிக்கு சென்று வந்ததற்கான புண்ணியத்தை வாரி வழங்குகிறார். இந்த 16 பட்டைகளும் 16 செல்வத்தைக் குறிக்கின்றன.
காசியைப் போன்றே அமைப்பு கொண்ட திருக்காஞ்சி திருத்தலம்:
காசியில் ஸ்ரீ விசாலாட்சி, ஸ்ரீ அன்னபூரணி ஆகியோர் அருள்வது போலவே, காசிக்கு நிகரான திருக்காஞ்சி தலத்திலும் ஸ்ரீ காமாட்சி, ஸ்ரீ மீனாட்சி ஆகியோர் அருட்காட்சி தருகின்றனர். கங்கை வராக நதீஸ்வரர் சந்நிதியின் வலப்புறம் அன்னை காமாட்சி, தெற்கு நோக்கி திருக்காட்சி தர, அன்னை மீனாட்சி தனியாகக் கிழக்கு நோக்கி திருக்காட் சி தருகிறாள். மேலும் ஸ்ரீ விநாயகர், வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமான், ஸ்ரீ விஷ்ணு துர்கை, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ பைரவர், ஸ்ரீ லட்சுமிவராகப் பெருமாள், ஸ்ரீ அகத்தியர், நவகிரகங்கள் ஆகிய தெய்வங்களின் சந்நிதிகளும் உள்ளன.
சர்வ தோஷம் நீக்கும் கங்கை வராக நதீஸ்வரர்:
இந்த கோவிலின் அருகே ஓடும் புண்ணிய நதியான சங்கராபரணியில் குளித்துவிட்டு இந்த தலத்தில் வீற்றிருக்கும் இறைவனை வழிபட்டால் முன்னோர்களின் சாபமாகிய பித்ரு தோஷம் நீங்க பெருவதோடு வாழ்வில் அனைத்து செல்வங்களும் சேரும்.
இந்த கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஷோடசலிங்கத்தை வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். நீண்ட நாள் திருமணம் ஆகாதோர், பிள்ளைப்பேறு வேண்டுபவர், கல்வி, செல்வம் போன்ற அனைத்தும் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் அப்படியே நடக்க வைக்கிறாராம் ஸ்ரீ கங்கை வராக நதீஸ்வரர்.
திருக்காஞ்சி கோயிலின் தனிச்சிறப்புகள்:
மேற்கு திசை நோக்கி அமர்ந்துள்ள சிவ பெருமான் சென்னையில் உள்ள திருவான்மியூர், ஆந்திர மாநிலத்தில் உள்ள காலஹஸ்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மற்றும் இந்த ஊரான திருகாஞ்சி ஆகிய தலங்களில் மட்டுமே உண்டு. இந்தக் கோயிலில் பௌர்ணமி தோறும் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், திருமுறை பாராயணங்களுடன் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது
இந்தக் கோயிலில் பௌர்ணமி தோறும் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், திருமுறை பாராயணங்களுடன் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
நவராத்திரி நாள்களில் அம்பிகை இருவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரங்களும், விஜயதசமி நாளில் அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாரிவேட்டைக்குச் செல்லும் வைபவமும் விமரிசையாக நடைபெறும்.
ஒவ்வொரு மாசி மாதத்திலும் இங்கு மாசி மக பெருவிழா வெகு விமர்சியாக நடைபெறும். இங்கு நடைபெறும் தீர்த்தவாரியைக் காண மக்கள் கூட்டம் அலை மோதும். மேலும் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் சங்கராபரணி ஆற்றங்கரையில் கங்கா ஆரத்திபோன்று ஆரத்தி நடைபெறுகிறது. இதனைக் காண சனிக்கிழமையில் அங்கு மக்கள் கூட்டம் குவியும்.
ஆலயம் அமைந்துள்ள இடம்:
இந்த திருத்தலம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த வேதங்களைக் கொண்ட வேதபுரி என்று போற்றப்படும் வில்லியனூரில் அமைந்துள்ளது. வில்லியனூரை புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ஊர்களில் இருந்து எளிதில் அணுகலாம். திருக்காஞ்சி வில்லியனூர் நகரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.