தீராத நோய் தீர சென்று வழிபட வேண்டிய கோயில்!

101

தீராத நோய் தீர சென்று வழிபட வேண்டிய கோயில்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகும். இத்தலத்தில் முருகப் பெருமான் தன் இச்சாசக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்துகொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருப்பதுடன், இங்கு வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும் தந்தருள்கின்றார்.

அமைவிடம்:

திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து மும்பை செல்லும் ரயில்பாதை வழியில், அரக்கோணத்துக்கு வடக்கே 13 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து வடமேற்கே 84 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருத்தணி. “தொண்டை நாடு” என்று அழைக்கப்படும் பகுதியில் திருத்தணி அமைந்திருப்பதாக தமிழ் நூல்கள் கூறுகின்றன.

தொண்டை நாட்டின் தலைநகரமாகிய காஞ்சிபுரம் தெற்கிலும், விரிஞ்சிபுரம் – வள்ளிமலை – சோளிங்கபுரம் ஆகியவை மேற்கிலும், திருவாலங்காடு கிழக்கிலும், திருக்காளத்தி – திருப்பதி வடக்கிலும் சூழ்ந்திருக்க, அவற்றுக்கு மத்தியில் நடுநாயகமாகத் திருத்தணிகைத் தலம் அமைந்துள்ளது.

தணிகை:

முருகப் பெருமான், தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட் டாக நிகழ்த்திய சிறுபோரும்முடிந்து, தணிந்து அமர்ந்த தலம் என்பதால் தணிகை எனப் பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

தேவர்களின் அச்சம் தணிந்த இடம் இது. முனிவர்கள் காம வெகுளி மயக்கங்களா கிய பகைகள் தணியும் இடம் இது. அடியா ர்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும், இதற்குத் தணிகை என்று பெயரமைந்ததாகவும் கூறப்படுகிறது.

தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் (பொறை) என்பதும் ஒரு பொருளாதலின், அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம் திருத்தணிகை என்று கொள்ளுதலும் பொருந்தும்.

திருத்தணிகை மலை

இத்தலத்தில், முருகப் பெருமான் மலை மீது எழுந்தருளி வீற்றிருக்கின்றார். ஒரு தனி மலையின் சிகரத்து உச்சியில், கோயில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முருகன் எழுந்தருளி விளங்கும் மலையின் இருபுறங்களிலும், மலைத் தொடர்ச்சிகள் பரவிப் படர்ந்துள்ளன.

வடக்கே உள்ள மலை சிறிது வெண்ணிற மாக இருப்பதனால் “பச்சரிசி மலை” என்றும், தெற்கே உள்ள மலை கருநிறம் வாய்ந்திருப்பதனால் “பிண்ணாக்கு மலை” என்றும் கூறப்படுகின்றன.

திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே சுமார் இரண்டு கி.மீ. தொலைவில் மலையடிவாரம் உள்ளது.

“சரவணப் பொய்கை” என வழங்கும் புகழ் மிக்க “குமார தீர்த்தம்” என்னும் பெரிய திருக்குளம், மலையடிவாரத்தில் உள்ளது. மலையேறும் யாத்திரீகர்களும், பக்தர்க ளும் பெரும்பாலும் இதில் நீராடியே செல் வர். இத்தீர்த்தத்தை சுற்றிப் பல மடங்கள் உள்ளன. அதனால் இப்பகுதிக்கு “மட கிராமம்” என்று பெயர் வழங்குகிறது.

திருக்குளத்தின் தென்மேற்கு மூலையில், மலையடிவாரம் இருக்கின்றது. திருக்குள த்தின் கிழக்கு கரையிலிருந்து மலையை ப் பார்த்தால், வளைவாக இடம்பெற்ற ஒரு மாலை போலவும், மூவுருவம் எடுத்த ஒரு பரம்பொருள் போலவும், மூன்று மலைகள் விளங்கும். அவற்றின் மத்தியில் திருமுரு கன் திருக்கோயில் நடுநாயகமாகச் சிறந்தோங்கி விளங்குவது மிகவும் அழகு நிறைந்த காட்சியாகும்.

அருணகிரிநாதர் தனது பாடலில் “அழகுத் திருத்தணிமலை” என்று புகழ்ந்து போற்றி யிருக்கின்றார். திருமுருகனுக்கு இணை யான தெய்வங்கள் எதுவும் இல்லை என் பது போலவே, திருத்தணிகைக்குச் சமமா ன தலமும் வேறெந்த தலமும் இல்லை எனலாம்.

தணிகைக்கோயிலின் பழமை

திருத்தணிகை முருகன் திருக்கோயில், மிகவும் தொன்மை வாய்ந்தது. முருக பக்தரான அருணகிரிநாதர், அறுபத் து மூன்று திருப்புகழ்ப் பாடல்களால் இத்த லத்தினைப் பெரிதும் போற்றித் துதித்துள் ளார். அதனால் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பே, இத்தலமும் கோயிலும் புகழோங் கித் திகழ்ந்திருந்தன என்பது திண்ணம்.

தவிர, சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில் “மலர்களி ல் தாமரை மலர் போலவும், நதிகளில் கங் கை நதி போலவும், தலங்களில் காஞ்சிபு ரம் போலவும், மலைகளிலெல்லாம் சிறந் தோங்கித் திகழ்வது திருத்தணிகையே” என்று பாடியுள்ளார்.

சுமார் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளு க்கு முன்னர் வாழ்ந்த திருநாவுக்கரசர், திருப்புறம்பயம் தலத்துத் திருத்தாண்டக த்தில் “கல் மலிந்தோங்கும் கழுநீர்க்குன்றம்” என்று திருத்தணிகையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தேவேந்திரன் இங்கு முருகப் பெருமானை நீலோற்பவம் என்னும் கழுநீர் மலர்கொண்டு பூசித்தான் என்பது தலவரலாறு.

திருவிழா:

மாசி பெருந்திருவிழா வள்ளி கல்யாணம் பத்து நாட்கள் திருவிழா. இத்திருவிழா இத்தலத்தில் பெரிய அளவில் நடத்தப்படுகிறது. இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனின் அருள் பெறுவர். சித்திரைப் பெருந் திருவிழா; தெய்வானை உற்சவம் பத்து நாட்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொள்கின்றனர்.

ஆடிக் கிருத்திகை அன்று பத்து லட்சம் காவடிகள் எடுத்து வருவது மிகப் பிரம்மா ண்டமானதைக் காணப்பெறலாம். அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரத்தன்று கர்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும், வட தமிழகத்தில் இருந்து பக்தர்கள் வரும்போது திருத்தணியே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கும். இத்தலத்தில் இது ரொம்பவும் விசேஷமான திருவிழா ஆகும்.

இவை தவிர கிருத்திகை அன்றும் தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ தினங்களிலும் வாரத்தின் செவ்வாய்க்கிழமைகளிலும் பக்தர்கள் வெள்ளமென திரள்வது உண்டு.

விசேஷசமான ஆடிக் கிருத்திகை:

முருகப் பெருமானை இந்திரன், ஆடிக் கிருத்திகையன்று பூஜை செய்து வழிபட்டதாக ஐதீகம். எனவே, இத்தலத்தில் இவ்விழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழாவின் போது சுவாமி, அடிவாரத்திலுள்ள சரவணப் பொய்கைக்கு எழுந்தருளுகிறார்.

இந்திரன் கல்ஹார புஷ்பம் என்னும் மலரை முருகனுக்குச் சூட்டி வழிபட்ட தலமென்பதால், இங்கு அதிகளவில் மலர்க் காவடி செலுத்துகின்றனர். (மலர்க்காவடி இங்கு வாடகைக்கு தாராளமாக கிடைக்கும்).

தலச்சிறப்பு

வருடத்தின் நாட்களைக் குறிக்கும் விதமாக 365 படிகளுடன் அமைந்த கோயில் இது. ஒரு லட்சம் ருத்ராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபம் இங்கு உற்சவர் சந்நிதியாக உள்ளது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது வீடு அமர்ந்த நிலையில் உள்ள தலம். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்துவிட்டு வந்து அமர்ந்து கோபம் தணிந்த தலம்.

அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறது. சுவாமி சாந்த சொரூபமாக காணக் காட்சி தருகிறார்.

தேவேந்திரன், யானையை (ஐராவதம்) தெய்வானைக்கு கல்யாணப் பரிசாகத் தந்த தலம். இங்கு மூலஸ்தானத்துக்கு முன்பாக மயிலுக்கு பதிலாக யானை உள்ளது.

முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடி போன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞான சக்திதரராக காட்சி தருகிறார். இவரிடம், மற்ற கோயில்களில் காணப்படும் வேல் கிடையாது.

முருகன் இங்கு யானை வாகனத்துடன் காட்சி தருகிறார். அதிலும் இத்தலத்தில் உள்ள யானை வாகனம், சன்னதியின் வெளியே பார்த்தபடி இருப்பது விசேஷமான தரிசனம்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த நக்கீரர் என்னும் நல்லிசைப் புலவர் பெருமான், முருகனைப் பற்றித் திருமுருகாற்றுப்படை என்னும் சிறந்த துதி நூலைப் பாடியிருக்கின்றார்.

அதன்கண் திருப்பரங்குன்றம், திருச்சீர லைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன் குடி (பழனி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர் ச்சோலை என்னும் ஆறு திருத்தலங்களும், முருகனின் ஆறுபடை வீடுகள் என்று சிறப்பாகப் போற்றப்பெறும்.

இவற்றுள் குன்றுதோறாடல் என்பது முருகன் எழுந்தருளி விளங்கும் மலைத்தலங்கள் எல்லாவற்றையுமே குறிக்குமாயினும், திருத்தணிகை தலத்தையே தனிச்சிறப்பாகக் குறிக்கும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

முருக பெருமான் தன் கிரியாசக்தியாகிய தெய்வானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்துகொண்டதுபோல், திருத்தணிகையில் தன் இச்சாசக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருநது அருள்கின்றார். திருத்தணிகையின் சிறப்புக்கு இதுவே  பெருங்காரணமாகும்.

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், கந்தப்ப தேசிகர், கச்சியப்ப முனிவர், கச்சியப்ப சிவாசாரியர், அருணகிரிநாதர் ஆகிய அருட்பெருஞ் சான்றோர்கள் பலரும், திருத்தணிகை முருகனைப் பெரிதும் புகழ்ந்துப் பாடியுள்ளனர்.

வள்ளலார் பெற்ற அருள்

பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த வடலூர் இராமலிங்க அடிகளார், திருத்தணி முருகப் பெருமானை நினைந்து உருகி அப்பெருமானையே ஞான குருவாகக் கொண்டார்.

வள்ளலார் இளம் வயதிலேயே கண்ணா டியில் திருத்தணி முருகப் பெருமானின் காட்சி கிடைக்கப்பெற்றவர். இதனால், பிரார்த்தனை மாலையில் திருத்தணி முருகனை போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.

பல லட்சக்கணக்கான மக்கள், திருத்தணி கை முருகனைத் தம் குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு நலம் பெற்று வருகின்றனர்.ன்முருகப் பெருமான் திருச்செந்தூரில், அசுரர்களுடன் போரிட்டு வென்றதன் அடிப்படையில் முருகத் தலங்களில், கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரம் விமரிசை யாக நடத்தப்படும்.

ஆனால் முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. அன்று முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. அதற்காக, ஆயிரம் கிலோ பூக்களை இதற்காகப் பயன்படுத்துகிறார்கள்.

கஜவள்ளி

திருமாலின் மகள்களான அமுதவல்லி, சுந்தரவல்லி இருவரும் முருகனை மணக்கவேண்டி தவமிருந்தனர். இவர்களில் அமுதவல்லி, தெய்வானை என்ற பெயரில் இந்திரனிடமும், சுந்தரவல்லி வள்ளியாக நம்பிராஜனிடமும் வளர்ந்து முருகனை மணந்தனர்.

சகோதரிகளான இவ்விருவரும் வேறில்லை என்பதன் அடிப்படையில் இங்கு வள்ளியும் தெய்வானையும் ஒரே அம்பிகையாக “கஜவள்ளி’’ என்னும் பெயரில் அருள்கி றாள். இவள் வலது கையில் வள்ளிக்குரிய தாமரையும், இடக்கையில் தெய்வானைக் கு உரிய நீலோத்பவ மலரும் வைத்திருக்கிறாள். தங்கத் தேர் புறப்பாடு இல்லாத வெள்ளிக்கிழமைகளில், இவள் கிளி வாகனத்தில் எழுந்தருளுகிறாள்.

புத்தாண்டில் படிபூஜை

வருடத்தின் நாட்களைக் குறிக்கும் விதமாக, 365 படிகளுடன் அமைந்த கோயில் இது.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது, புத்தாண் டில் ஆங்கிலேயர்களைச் சந்தித்து வாழ் த்து கூறுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பழக்கத்தில் இருந்து மக்களை ஆன்மிக வழியில் திருப்ப, முருக பக்தரான வள்ளிமலை சுவாமிகள் 1917-ல், புத்தாண்டில் படிபூஜை செய்து முருகனை வழிபடும் வழக்கத்தைக் கொண்டுவந்தார்.

புத்தாண்டுக்கு முதல் நாள் இரவில் ஒவ் வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி பூஜித்து, ஒரு திருப்புகழ் பாடப்படுகிறது. அனைத்து படிகளுக்கும் பூஜை செய்த பின்பு, நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு முருகனுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டில் ஆயிரத்தெட்டு பால்குட அபிஷேகம் நடக்கும்.

வெந்நீர் அபிஷேகம்

மூலஸ்தானத்துக்குப் பின்புறம் உள்ள சுவரில் குழந்தை வடிவில், ஆதி பாலசுப் பிரமணியர் இருக்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்துக்கு முன்பு இங்கு எழுந்தருளியிருந்தார்.

மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், அவர் மீதுகொண்ட அன்பினால், வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.

நோய் தீர்க்கும் சந்தனம்:

திருத்தணியில் முருகனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சாதாரண சந்தனம் சாத்துவதில்லை. முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில் அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது.

இந்த சந்தனத்தை பக்தர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளாமல், நீரில் கரைத்து குடித்துக்கொள்வர். இதனால் உடலிலுள்ள பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. விழாக்காலங்களில் மட்டுமே இந்த சந்தன பிரசாதம் கிடைக்கும்.

நேர்த்திக்கடன்:

மொட்டை போடுதல், எடைக்கு எடை நாணயம் வழங்கல், பொங்கல் படைத்தல், சுவாமிக்கு சந்தனக்காப்பு, பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், அன்னதானம் வழங்குதல், நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திக்கடன்களாக உள்ளது.

திருமணத்தடை உள்ளவர்கள் இத்தலத்து கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணம் செய்கின்றனர். இதற்கு கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்தினால் நடத்தி வைக்கிறார்கள். வசதி படைத்தவர்கள், கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.

சித்திரை, மாசியில் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. சித்திரையில் தெய்வானை திருமணமும், மாசியில் வள்ளி திருமணமும் நடக்கிறது. திருமணத்தில் நம்பிராஜன் தம்பதியர் பங்கேற்கின்றனர். பள்ளியறை பூஜையின்போது ஒருநாள் தெய்வானையும், ஒருநாள் வள்ளியுமாக முருகனுடன் அருள் செய்கின்றனர்.

வள்ளியை யானை ரூபத்தில் பயமுறுத்திய விநாயகர், ஆபத்சகாய விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். முருகன், வேடன் வடிவில் சென்று வள்ளியை மணந்ததால், பிரம்மோற்ஸவத்தின் ஆறாம் நாளில் புலி வாகனத்திலும், பின்பு யானை வாகனத்திலும் எழுந்தருளுகிறார்

இத்தல முருகனின் அருளை முஸ்லிம் பக்தர் ஒருவரும் பெற்றிருக்கிறார். தற்போதும் விழாக்களில், முருகன் புறப்பாடாகும் வேளையில், முஸ்லிம் ஒருவர் முரசு வாத்தியம் இசைப்பது வழக்கம்.

திருத்தணி அறுபடை வீட்டில் ஐந்தாம்  படை வீடு ஆகும். இங்கு வள்ளியைத் திருமணம் செய்துக் கொண்டு அமைதியாக முருகன் ஆட்சி அளிக்கிறார்.  இந்த படை வீட்டில் சினம் தணிந்து முருகன் காட்சி அளிப்பதால் திருத்தணி என பெயர் பெற்றுள்ளது.  இதனால் இங்கு சூரசம்ஹாரம் நடப்பது இல்லை.