தீராத நோய் தீர பால் கிணறு தீர்த்தம் வழிபாடு!

46

தீராத நோய் தீர பால் கிணறு தீர்த்தம் வழிபாடு!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் மூலிகைகள் நிறைந்த சித்தர்கள் வாழ்ந்த மலை தான் செக்கர் கிரி. இந்த மலையில் சுப்பிரமணிய சுவாமி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். 108 படிகள் ஏறிச் சென்று தான் முருகப் பெருமானை தரிசிக்க முடியும். பல இடங்களிலிருந்து வந்த சித்தர்கள் இந்த மலையில் தங்கி சுவாமிக்கு பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்தக் கோயிலில் லாடசுவாமி சித்தர் சிலை உள்ளது. இதில், ஜடாமுடியுடனும், கையில் கமண்டலத்துடனும், கழுத்தில் உத்திராட்சை மாலைகளுடனும் காட்சியளிக்கிறார். மலைக்கோயிலில் பால் கிணறு ஒன்று இருக்கிறது. இதில், தண்ணீர் பால் போன்று இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கோடை காலத்திலும் கிணறு வற்றாமல் இருக்குமாம்.

தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பால் கிணற்றிலுள்ள நீரை அருந்தினால், நோய் குணமாகும் என்பது ஐதீகம். இந்தக் கோயிலில் பிரசாதமாக கஞ்சி வழங்குவது விஷேசமாக சொல்லப்படுகிறது. கோயிலில் கொடுக்கப்படும் பிரசாத கஞ்சியை அருந்துகின்ற கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்று சொல்லப்படுகிறது.

சுப்பிரமணிய சுவாமி சன்னதிக்கு மேல் பகுதியில் ஒரு பாறை குகையில் ஆஞ்சநேயர், ராமர் ஆகிய தெய்வங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆஞ்சநேயர் ஜெயந்தியன்று இந்தக் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது. கோயிலுக்கு முன் பகுதியிலுள்ள ஆவுடையம்மன் சன்னதிக்கு முன்பாக காளி கோயில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. அதோடு, அன்னதான கஞ்சியும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.