தீராத நோய் தீர லட்சுமி நரசிம்மர் வழிபாடு!

56

தீராத நோய் தீர லட்சுமி நரசிம்மர் வழிபாடு!

சுமார் ஆயிரம் வருடம் பழமையான இந்த நரசிம்மர் கோவில், சேலம் மாவட்டம் நங்கவள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ளது.

ஆலயத்தின் சிறப்பு:

இங்குள்ள வைணவ தலங்களில் இது மிகவும் புகழ்பெற்றது. நரசிம்மர் சுயம்புவாக இங்கு காட்சியாளிகின்றார். இங்கு சிவன் சிலைகளும் உண்டு, சைவ, வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டான ஒரு தலம். 75 அடி ராஜ கோபுரத்தோடு காட்சி அளிக்கும் இக்கோவிலில் பல கடவுளர்களுக்கு தனி தனியே கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவில் சோமேசுவரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு சிவனும், பெருமாளும் ஒரு சேர இருப்பதால் இப்பெயர் வந்தது.

ஆலயத்தின் புராண கதை:

ஏறக்குறைய ஆயிரம் வருடம் முன்பு ஆந்திர பகுதியில் இருந்து சேலம் பகுதிகளில் குடியேறிய தொட்டிய நாயக்கர்கள் அதிகமாக பசுமாடுகளை வளர்த்து வந்தனர். இவர்களில் தொட்டிய நங்கை என்ற பெண் ஒரு கூடையுடன் மாடு மேய்க்க செல்கையில் கூடை கனத்தது. கூடையினுள் பார்க்க ஒரு சாளக்ராம வடிவக் கல்லினைக் கண்டாள்.

அக்கல் எப்படி வந்தது என்று தெரியாமல் அதனை தூக்கி எறிந்து விட்டாள். சற்று நேரத்தில் மறுபடியும் கூடை கனக்க அதில் திரும்பவும் அக்கல் இருந்ததைக் கண்டாள். பயந்து போன அவள் மறுபடியும் அக்கல்லினை ஒரு குளத்தில் போட்டு சென்றுவிட்டாள்.

பிறகு ஊருக்கு திரும்பிய அவள் அன்றாட வேலைகளை செய்துகொண்டு இருக்க அவ்வூரில் ஒரு பெண்ணுக்கு சாமி வந்து, தான் லட்சுமி என்றும் உங்களுடன் பெல்லாரி என்னும் பகுதியில் இருந்தே உங்களுடனே வந்துவிட்டேன் என்றும் உன்னோடு கல்வடிவில் வந்தது தான் தான் என்றும், எனக்கு உங்கள் ஊரில் கோவில் அமைத்து வழிபட்டால் உங்களை என்றும் குறைவில்லாமல் காப்பேன் என்றும் கூறியது.

அதன்பிறகு அக்கல்லினை ஒரு புற்றில் ஊர்மக்கள் கண்டு எடுத்தனர்.கூரையினால் சிறிய அளவில் கோவிலமைத்து வழிபட்டு வந்தனர். இக்கோவில் பிறகு கம்பளத்து பாளைய கட்டுப்பாட்டில் வந்ததும் இக்கோவில் நல்ல வளர்ச்சி அடைந்து கோபுரங்கள் அமைக்கப்பட்டன.

தோல் நோய்களை சரிசெய்யும் புற்று மண்:

இங்கு லட்சுமி மற்றும் பெருமாள் சிலைகள் அமைக்கப்பட்டு லட்சுமி நரசிம்மர் என்று பெயர் வழங்கினர்.கருவறையில் உள்ள சிலைகளுக்கு அக்காலகட்டத்தில் பால் அபிசேகம் செய்து கற்பூர தீபம் காட்டும் முன்னரே புற்று மண் வந்து சிலைகளை மூடிவிடுமாம். இதனால் இங்குள்ள புற்றினை மறைத்து வைத்துள்ளனர். இப்புற்றில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அது நிரம்பாது என்கின்றனர். இப்புற்று மண்ணினை தோல் நோய்கள் உள்ளோர் எடுத்து பூசினால் உடனே சரியாகிவிடும் என்பது நம்பிக்கை.

இந்த நரசிம்மரை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்:

தீராத நோய்கள், தோல் சமந்தமான நோய்கள், கடன் பிரச்சனை, குழந்தை பாக்கியம் முதலான அனைத்து வேண்டுதல்களுக்கும் இங்கு வந்து வழிபட்டால் தீரும் என்று நம்பப்படுகிறது.