தீராத நோய், பாவங்கள் போக்கும் விபூதி பிரசாதம்!

53

தீராத நோய், பாவங்கள் போக்கும் விபூதி பிரசாதம்!

சென்னை திருவான்மியூர் பகுதியில் அருள்மிகு மருந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சிவ பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தல விநாயகரின் திருநாமம் விக்னேஸ்வரர். இந்த கோயிலில் நைவேத்தியமாக பொங்கல் படைக்கப்படுகிறது.

மூலவருக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கி விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த விபூதி பிரசாதத்தை உண்டால் தீராத நோய்களும் தீரும். பாவங்கள் நீங்கும். சிவபெருமான் காட்சி கொடுத்த வன்னி மரத்தை சுற்றி வழிபட்டு வர முக்தி கிடைக்கும்.

தன்னை வணங்கி திருந்திய வால்மீகிக்கு சிவன் வன்னி மரத்தடியில் காட்சி தந்தார். இதையடுத்து, வால்மீகி இறைவனிடம் வேண்டியதற்கேற்ப அவரது பெயரில் இந்த தலம் விளங்குகிறது. கோயில் பிரகாரத்தில் அகத்தியர், வால்மீகிக்கு சிவன் காட்சி தந்த வன்னி மரம் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது அகத்தியருக்கு காட்சி தந்த வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், ஒவ்வொரு நாளும், இந்த கோயிலில் அதிகாலையில் கோபூஜையும் செய்யப்படுகிறது. அதன்பிறகு தான் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மூலவருக்கு, வான்மீகிநாதர், வேதபுரீஸ்வரர், அமுதீஸ்வரர், பால்வண்ணநாதர் ஆகிய பெயர்கள் உள்ளது.

திருவான்மியூர் வந்த அகத்திய முனிவர் சிவபெருமானை வணங்கி வழிபட்டு அவரை நினைத்து தவம் புரிந்தார். அவருக்கு வன்னி மரத்தடியில் காட்சி தந்தார் சிவபெருமான். அப்போது, உலகில் தோன்றியுள்ள நோய்களுக்குரிய மருந்துகள் மற்றும் மூலிகைகளின் தன்மைகள் குறித்து உபதேசம் செய்தார். இதன் காரணமாக, திருவான்மியூர் தல சிவபெருமான் மருந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

அபயதீட்சிதர் என்ற பக்தர் ஒருவர் சிவபெருமானை கண்டு வழிபட வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அபயதீட்சிதரால் சிவபெருமானை காண வரமுடியவில்லை. சிவபெருமானுக்கு பின்புறம் பகுதியிலிருந்து வந்ததால் அவரால் சிவபெருமானின் முதுகை மட்டுமே தரிசிக்க முடிந்துள்ளது.

இதனால், வருத்தமடைந்த அபயதீட்சிதர் சிவபெருமானே, உன்னை கண்டு தரிசிக்க வந்த எனக்கு இப்படியொரு சோதனையா? உன் முகம் கண்டு தரிசனம் செய்ய எனக்கு அருள மாட்டாயோ? என்று வேண்டிக் கொண்டார். தனது பக்தன் வேண்டியதைத் தொடர்ந்து பக்தனுக்காக மேற்கே திரும்பி காட்சி தந்தார். இதனால், இந்த கோயிலில் மட்டும் சிவபெருமான் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள் திரிபுரசுந்தரி சுவாமிக்கு பின்புறமாக தெற்கு நோக்கி அருள் புரிகிறார். மேலும், முருகன், விநாயகர் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றனர்.

வசிஷ்ட முனிவர் சிவ பூஜை செய்தார். இதற்காக, இந்திரன் தன்னிடமிருந்த காமதேனுவை அனுப்பி வைத்தார். ஆனால், வசிஷ்ட முனிவர் சிவ பூஜை செய்த கொண்டிருந்த போது காமதேனு பால் சுரக்க தாமதம் செய்துள்ளது. இதனால் கோபமடைந்த வசிஷ்ட முனிவர் காமதேனுவின் புனிதத்தன்மை இழந்து காட்டுப்பசுவாக மாற சாபமிட்டார்.

முனிவரின் சாபத்தால், காட்டுப்பசுவாக திரிந்த காமதேனு சிவனிடம் சென்று தனக்கு விமோட்சனம் கிடைக்க வேண்டி, வன்னி மரத்தடியில் சுயம்பு லிங்கமாக உள்ள சிவன் மீது பால் சுரந்து சாப விமோட்சனம் பெற்றது. இதனால், இறைவன் பால்வண்ணநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

கொள்ளையனாக இருந்த வால்மீகி ஒரு கட்டத்தில் திருந்த வேண்டும் என்று எண்ணி இங்குள்ள சிவபெருமானை வணங்கி வந்தார். ஒருமுறை சிவபெருமானை தரிசனம் செய்ய வந்த போது, காமதேனு அவரைக் கண்டு பயந்து ஓடியது. அப்போது, சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ள லிங்கம் மீது தெரியாமல் மிதித்ததால் சிவபெருமானின் மேனியில் தடம் பதிந்தது. இன்றும் கூட காமதேனு தெரியாமல் மிதித்த கால்தடமானது சுவாமியின் தலை மற்றும் மார்பில் இருக்கிறது.