தீராத வழக்குகளும் தீர வழக்கறு தும்பிக்கை ஆழ்வார் வழிபாடு!

108

தீராத வழக்குகளும் தீர வழக்கறு தும்பிக்கை ஆழ்வார் வழிபாடு!

சென்னை மாவட்டம் வடபழனியில் உள்ளது ஆதிமூலப் பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் ஆதிமூலப் பெருமாள் மூலவராக காட்சி தருகிறார். உற்சவர் கஜேந்திர வரதராஜப் பெருமாள். தாயார், ஆதிலட்சுமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் பிரதி மாதம் ஏகாதசி, திருவோணம் நட்சத்திரம் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் வேலவனுடன் மாமன் மாலவன் இருக்கும் கோயில்கள் பல உள்ளன. திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் தெய்வானையை மணமுடிக்கும் போது பவளக் கனியாக பெருமாளாகவும், செந்தூரில் திருக்கோயில் பிரகாரத்தில் செந்தில் கோவிந்தனாகவும், பழமுதிர்சோலையில் முருகப் பெருமான் காட்சி தர அடிவாரத்தில் சுந்தராஜப் பெருமாளாகவும் திருமால் அருளாட்சி செய்கிறார்.

கோயில் வளாகத்தின் வட கிழக்குப் பகுதியில் பரந்து விரிந்த பசுமையான அரசும் வேம்பும் இணைந்த இயற்கை சூழலை இதமாக்குகிறது. இதுவே ஆலயத்தின் தல விருட்சமாக உள்ளது. இந்த அரசமரத்தைச் சுற்றிலும் சந்தான கோபாலன், வழக்கறு தும்பிக்கை ஆழ்வார், வல்ல கல்யாண சர்ப்பம், கர்ப்பஸ்வபினி தாயார், சல்லாப நாகங்கள் என்று பல மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இங்கு உற்சவ மூர்த்தியாக கஜேந்திர வரதராஜப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். மூலவருக்கு எதிரில் பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருட பகவான் வீற்றிருக்க அர்த்த மண்டபத்தின் உள்ளே வடக்கு நோக்கி சிறிய திருவடியான வரத ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

தெற்கு சன்னதியில் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மணவாளர், பாமா ருக்குமணி, சமேத கிருஷ்ணர் ஆகியோரது திருவுருங்கள் காணப்படுகின்றன. சுவாமி விமானத்துக்கு வலதுபுறம் தனிக்கோயிலில் விமானத்தின் கீழ் கருவறையில் ஆதிலட்சுமி தாயார் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

திருமணமாகாதவர்கள் இந்தக் கோயிலில் வேண்டிக் கொள்ள விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். திருமணம் கை கூடியபின், ஒரு நன்னாளில் புதுமண தம்பதியினராக வலம் வந்து ஆதிமூலம் வீற்றிருக்கும் ஆலயத்திற்குள்ளாக அடியெடுத்து வைத்து இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

திருமணமாகாதவர்கள் ஒவ்வொரு செவ்வாய் கிழமை என்று 16 வாரம் இந்தக் கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும். முதல் 3 வாரம் 3 கல்யாண மாலை கொண்டு வந்து பெருமாளுக்கு சாற்றி, ஒரு மாலையை பிரசாதமாக பெற்றுக் கொண்டு அதனை கழுத்தில் அணிந்து கொண்டு 12 முறை ஆலயத்தை சுற்றி வலம் வர வேண்டும். தாயார் சன்னதியில் சங்கல்பம் செய்து 12 முறை வலம் வந்து 16 வாரம் என்று ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் விரலி மஞ்சள் கணக்கில்லாமல் கொண்டு சென்று மாலையாக தொடுத்து தாயாருக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

16ஆவது வாரம், 3 கல்யாண மாலை கொண்டு சென்று தாயாருக்கு சமர்ப்பித்து சங்கல்பம் பூர்த்தி செய்ய வேண்டும். திருமணம் கை கூடியவுடன் தம்பதி சமேதராய் கோயிலுக்கு வந்து பெருமாள் தாயாரை வணங்க வேண்டும்.

நிரந்தரமான வேலை கிடைக்க, சத்ரு தொல்லை விலக, மரண பயம் நீங்க, சங்கடங்கள் தீர, கடன் பிரச்சனையிலிருந்து விடுபட, தீராத நோய் தீர, வியாபாரம் அபிவிருத்தியடை பெருமாள் சன்னதியில் பிரார்த்தனை செய்து வழிபடுகின்றனர். இந்தக் கோயிலில் உள்ள வழக்கறு தும்பிக்கை ஆழ்வார், தீராத வழக்குகளையும் தீர்த்து வைப்பவராக திகழ்கிறார். கணவன் மனைவிக்கிடையில் உள்ள கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை அதிகரிக்க சல்லாப நாகங்கல்ளை வழிபடுகின்றனர்.

குழந்தை வரம் கிடைக்க சந்தான கண்ணனை 27 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். அதாவது ரோகிணி நட்சத்திர நாளன்று காலையில் விரதமிருந்து தொட்டில் கண்ணன், புஷ்பம், அவல், வெண்ணெய், பழங்கள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, 2 செவ்வாழை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஆதி மூலப் பெருமாள் கோயிலுக்கு வர வேண்டும். தொட்டில் கண்ணனை அர்ச்சகரிடம் கொடுத்து கண்ணன் திருவடியில் வைத்து பூஜித்து அதனை மடியில் வாங்கிக் கொண்டு, அரச மரத்தடியில் உள்ள சந்தான கண்ணனை 27 முறை வலம் வர வேண்டும்.

பிறகு கண்ணனை தொட்டிலில் வைத்து கட்டி சந்தான கோபாலனுக்கு பால் பாயாசம் நிவேதனம் செய்து அதனை பக்தர்களுக்கு கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனை தொடர்ந்து 12 ரோகிணி நட்சத்திர நாளில் செய்து வர குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

அமர்ந்த திருக்கோலத்தில் இடது திருவடியை மடித்து வைத்து வலது திருவடியை தொங்கவிட்டு தாமரை மலர் மீது வைத்தபடி அருள்கிறார். மேலும், சங்கு சக்கரம் ஏந்தியும் வரத அஸ்த முத்திரையுடனும் புன்னகை மிளிர காண்போரை கவர்ந்திழுக்கும் தோற்றத்தில் இவர் வீற்றிருக்கிறார்.