துன்பம் நீங்கி மன நிம்மதி கிடைக்க பைரவர் வழிபாடு!

65

துன்பம் நீங்கி மன நிம்மதி கிடைக்க பைரவர் வழிபாடு!

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லுக்குறிக்கை என்ற ஊரில் உள்ள கோயில் காலபைரவர் கோயில். இந்தக் கோயிலில் காலபைரவர் மூலவராக காட்சி தருகிறார். இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு காலத்திலும், தேய்பிறை அஷ்டமியிலும் பக்தர்கள் வந்து வழிபட்டு பயனடைகின்றனர்.

இந்தக் கோயிலில் காலபைரவர் சிலைகள் இரண்டு உள்ளன. கோயில் நுழைவு வாயிலில் நந்தி இருக்கிறது. நோய்கள், வறுமை, துன்பம் நீங்கி நன்மை உண்டாகவும், திருமணம் நடக்க வேண்டியும், புத்திர பாக்கியம் வேண்டியும், எதிரி பயம் இல்லாதிருக்க வேண்டியும் பைரவரிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் பைரவருக்கு பூஜை செய்து வழிபாடு செய்கின்றனர். சனி பகவானின் குரு தான் பைரவர். காசியில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட சனீஸ்வரன், காசியின் காவல் தெய்வமான பைரவரை எண்ணி தவம் புரிந்து பிறகு மெய்ஞானம் பெற்றார் என்று வரலாறு கூறுகிறது.

பைரவரின் 64 அம்சங்களில் அஷ்ட பைரவர் (எட்டு அம்சங்கள்) மிகவும் விசேஷம். கால பைரவருக்கு திரிசூலம் ஆயுதம். காசியில் கால பைரவரையும், சிதம்பரத்தில் சொர்ண பைரவரையும் வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. கலைகளை ஆட்டுவிக்கும் கடவுளாக கருதப்படும் பைரவர் காலபைரவர் பிரம்மனின் தலையை தனது நகத்தால் கிள்ளி எறிந்து தனது திருவிளையாடலை நிகழ்த்தினார்.

கல்லுக்குறிக்கையில் ஆஞ்சநேயர் மலை, பைரவர் மலைக்கு இடையே படேதலாவு ஏரிக்கரையோரம் மலையடிவாரத்தில் ரம்மியான சூழலில் காவல் தெய்வமான கால பைரவர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் கால பைரவர் எதிரி பயம் நீக்கி மன அமைதியை தந்தருள்கிறார்.

பழங்காலத்தில் ரிஷிகளும், முனிவர்களும் எங்கு சென்றாலும் சிவனின் அம்சமாக விளங்கும் காலபைரவரின் மூலமந்திரத்தை ஜெபித்து எந்தவித பயமும் இல்லாமல் இருப்பர். அதனால், தான் காலபைரவர் கோயிலை கிருஷ்ணகிரியை ஆட்சி செய்த மன்னர்கள் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

பழம்பெரும் மிக்க இந்த காலபைரவரை கம்மம் பள்ளி, பச்சிகானப்பள்ளி, ஆலப்பட்டி, நக்கல் பட்டி, நெல்லூர், கொல்லப்பட்டி என நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.