துயரம் நீங்கி, மன அமைதி கிடைக்க சிவலோகநாதர் வழிபாடு!

47

துயரம் நீங்கி, மன அமைதி கிடைக்க சிவலோகநாதர் வழிபாடு!

திருப்புன்கூர்: புங்க மரத்தடியின் கீழே சிவபெருமான் தரிசனம் கொடுப்பதால் திருப்புன்கூர் என்று இத்தலம் வழங்கப்படுகிறது. திருநாளைப் போவார் நாயனார் (நந்தனார்) தம்மை நேராக தரிசனம் செய்து வணங்கும் பொருட்டு இத்தலத்து இறைவன் சிவலோகநாதர் தமக்கு முன்னால் அமர்ந்திருந்த நந்தியை சிறிது விலகி இருக்குமாறு செய்தருளிய தலம் திருப்புன்கூர்.

எல்லா சிவன் கோயில்களிலும் உள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரியும்படி இருக்கும். ஆனால் நந்தனாருக்காக விலகிய இங்குள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரிவதில்லை. இங்குள்ள நந்திகேஸ்வரர் மிகவும் அழகிய வேலைப்பாடுடன் ஒரே கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்ட சிறப்புடையதாகும். மேலும் இத்தலத்தில் ஆலயத்தின் மேற்புறம் உள்ள ரிஷப தீர்த்தம் நந்தனாருக்காக விநாயகர் ஒரே இரவில் வெட்டிய குளம் என்ற பெருமையுடையதாகும்.

திருநாவுக்கரசு சுவாமிகள் ஆளுடைய பிள்ளையாருடன் திருக்கோலக்காவை வணங்கி அவரிடம் விடைகொண்டு, திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், திருநீடூர் தொழுது செல்லுங்கால் திருநீடூரில் திருப்புன்கூர்த் தலத்தையும் இணைத்து திருப்பதிகம் பாடினார். ஒருமுறை சுந்தரரும் அவரது நண்பருமான ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் இத்தலத்திற்கு வருகை புரிந்தனர்.

அச்சமயம் திருப்புன்கூரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பல காலமாக மழையின்றி இருந்ததால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். இப்பகுதியை அரசாண்டு வந்த மன்னரிடம் 12 வேலி நிலம் ஆலயத்திற்குக் கொடுத்தால் மழை பெய்யும் என்று சுந்தரர் கூற அரசனும் சம்மதித்தான். அதன்படி சுந்தரர் பதிகம் பாடி மழை பெய்யச் செய்தருளி 12 வேலி நிலமும், பிறகு விடாது பெய்த மழையை நிறுத்த 12 வேலி நிலமும் மன்னனிடம் பெற்று இந்த திருப்புன்கூர் கோயிலுக்குச் சேர்த்தார். இந்த வரலாற்றை சுந்தரர் “அந்தணாளன் உன அடைக்கலம் புகுந்த” என்று தொடங்கும் தனது பதிகத்தின் இரண்டாவது பாடலில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

ஆலய முகவரி: அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், திருப்புன்கூர், திருப்புன்கூர் அஞ்சல், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், PIN – 609112. இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.