தெய்வ கடாட்சம் நிலைக்க சிவன் சூல விரதம்!

131

தெய்வ கடாட்சம் நிலைக்க சிவன் சூல விரதம்!

சிவபெருமான் மும்மூர்த்திகளில் ஒருவர். சைவ சமயத்தின் முழு முதல் கடவுள். பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருள் என்பதால், பரமசிவன் என்று அழைக்கப்படுகிறார். சிவன் என்பதற்கு சிவந்தவன் என்றும், வடமொழியில் சிவம் என்பதற்கு முழுமையானது, மங்களகரமானது என்று பொருள் உண்டு.

சைவர்கள் சிவபெருமானுக்கு 8 வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். மேலும், இந்த 8 வகையான விரதங்களை வழிபடுவதன் மூலமாக சிவனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது சைவர்களின் நம்பிக்கை.

சிவனுக்குரிய 9 விரதங்கள்:

  1. பிரதோஷ விரதம்
  2. சோமவார விரதம்
  3. உமா மகேஸ்வர விரதம்
  4. திருவாதிரை விரதம்
  5. மகாசிவராத்திரி விரதம்
  6. கல்யாண விரதம் (கல்யாண சுந்தரர், கல்யாண சுந்தர விரதம்)
  7. பாசுபத விரதம்
  8. அஷ்டமி விரதம்
  9. கேதாரகௌரி விரதம்

இந்த 9 முக்கியமான விரதங்களை ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம். தற்போது சூல விரதம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

சூல விரதம்:

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று சூல விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரத முறையை கடைபிடித்து பரசுராமன் பலமிக்க கார்த்தவீரிய ராஜனை அழித்தார். விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் இந்த விரதத்தை பின்பற்றி தலைவலி, வயிற்றுவலி நீங்கப் பெற்றனர்.

இந்த விரதம் கடைபிடிக்கும் போது காலை மற்றும் பகலில் சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்து ஏழை எளிய மக்களுக்கு தான தர்மங்கள் செய்ய வேண்டும். அதன் பின் சிவனடியார்களுடன் சேர்ந்து ஒரு வேளை உணவு உண்ண வேண்டும். இந்த விரத முறையை பின்பற்றினால் எதிரிகள் மறைவர். கொடிய நோய் அகலும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

சிவனின் முக்கிய படைக்கலன்களில் ஒன்று திரிசூலம். இதற்கு முத்தலைச் சூலம் என்றும் பெயர் உண்டு. இது தவிர அஸ்திரங்களுக்கு எல்லாம் தலையாயது என்பதால் இதனை அஸ்திர ராஜன் என்றும் குறிப்பிடுகின்றனர். மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை அகற்றி ஞானத்தை அளிக்க வல்லது. காசியை திரிசூலம் தாங்கிக் கொண்டிருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இப்படி சிறப்பு வாய்ந்த திரிசூலத்தை தை மாதம் சூல விரத நாளில் சிவபெருமானாக பாவித்து வழிபடுவதால், குடும்பத்தில் செல்வ கடாட்சம் என்றும் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.