தோல் தொடர்பான பிரச்சனை தீர வழிபட வேண்டிய கோயில்!

99

தோல் தொடர்பான பிரச்சனை தீர வழிபட வேண்டிய கோயில்!

கோயம்புத்தூர் மாவட்டம் பெருமாநல்லூர் என்ற ஊரில் உள்ள கோயில் கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில். இந்தக் கோயிலில் கொண்டத்துக்காளியம்மன் (குண்டத்தம்மன்) மூலவராக காட்சி தருகிறாள். உற்சவராகவும் கொண்டத்துக்காளியம்மன் திகழ்கிறாள். இந்த ஊருக்கு பெரும்பழனம் என்பதே புராணப்பெயராக இருந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோயிலில் குண்ட திருவிழா, பங்குனியில் 11 நாள் திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அம்பாள் சன்னதிக்கு இடதுபுறம் முத்துக்குமரன் தனது கழுத்தில் சொருகிய வாளை கையில் பிடித்தபடி, அருள்காட்சி தருவது வேறு தலங்களில் இல்லாத சிறப்பாகும். இத்தல விநாயகர் பால விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் படைக்கின்றனர். சுற்றுப்பிரகாரத்தில் சப்தகன்னியர், குதிரைகளுடன் முனியப்பன், கருப்பராயர் ஆகியோர் அருள்புரிகின்றனர்.

கோயிலுக்கு எதிரே சற்று தொலைவில் எல்லைக்காவல் தெய்வமாக கருப்பசாமி வீற்றிருக்கிறார். சுற்றுவட்டார மக்களால் குல தெய்வமாக வணங்கப்படும் இங்கு குண்டத்திருவிழா சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. அந்தக் குண்டத்தில் இறங்குபவர்கள் வீரமக்கள் என்ற சிறப்பு பெயருடன் அழைக்கின்றனர். குடும்ப பிரச்சனை தீரவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், விவசாயம் செழிக்கவும், தோல் சம்பந்தப்பட்ட பிணிகள் தீரவும் இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.

குண்டம் இறங்குதல், பால்குடம் எடுத்தல், அக்னிச்சட்டி, அங்கபிரதட்சணம், குண்டத்தில் உப்பு, மிளகு, கரும்பு போடுதல் ஆகியன தோல் நோய் தீர்ந்திட காளிக்குரிய சிங்க வாகனத்தின் மீது வெற்றிலை பாக்கு வைத்து வணங்கப்படுகிறது. மன்னர் காலத்திற்கு பின்னர், வழிவழியாக மக்கள் கொண்டத்துக்காளி அம்மனை வழிபட்டு குண்டம் இறங்கி வந்தனர்.

இந்தப் பகுதியை வெள்ளையர்கள் ஆண்டு வந்த போது குண்டம் இறங்கும் விழாவிற்கு தடை விதித்தனர். ஆனால், தடையை மீறி பக்தர்கள் குண்டம் இறங்கச் சென்றனர். அப்போது அங்கு வந்த வெள்ளைக்காரத்துரை பக்தர்கள் குண்டத்தில் இறங்க முடியாதபடி அதில் அரக்கை ஊற்றினர். இதனால் மனம் கலங்கிய திரளான பக்தர்கள் வருந்தியபடியே அம்பாளைத் துதித்து அனைவரும் குண்டத்தைச் சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் இடையே புகுந்த பன்றி குண்டத்தில் இறங்கி ஓடி திருவிழாவை தொடங்கி வைத்ததைக் கண்டு அதிர்ந்த வெள்ளைக்காரத்துரைக்கு கண்பார்வை மங்கியது.

பன்றி வடிவில் வந்தது அம்பிகை என பக்தர்கள் கூறவே தனது தவறை உணர்ந்த அவர், பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதித்தனர். அதன் பிறகு அவருக்கு கண் பார்வை கிடைத்தது. இப்பகுதி பழனங்கள் (வயல்வெளி) நிறைந்த பழமையான பகுதியாக இருந்ததால் இந்த ஊர் பெரும்பழனம் என்றும், பெரும்பழனாபுரி என்றும் அழைக்கப்பட்டு காலப்போக்கில் பெருமாநல்லூர் என்று பெயர் பெற்றது. கூத்தனூர் என்ற பெயரும் உண்டு.

இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் கொண்டத்துக்காளியம்மன் 7 பேராக அவதரித்த அம்பாள் சகோதரிகளில் ஒருவராக 8 கைகளில் ஆயுதங்களையும், கல்வியையும் ஏந்தி, லட்சுமி, காளி, சரஸ்வதி என்று மூன்று அன்னையர்களின் அம்சமாக அருள்பாலிக்கிறாள். இந்தப் பகுதியை சேர மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் போரில் வெற்றி மட்டுமே பெற வேண்டும் என்பதற்காக தங்கள் குருநாதரிடம் ஆலோசனை கேட்டனர்.

அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய குருநாதர் போரில் வெல்ல படைபலம் மட்டுமின்றி காளியின் அருள்பலமும் வேண்டும் எனக்கூறி அவளுக்கு கோயில் அமைத்து களப்பலி கொடுத்து போருக்கு சென்றால் எளிதில் வெல்லலாம் என்றார். அதன்படி மன்னர்கள் இந்த இடத்தில் காளிதேவிக்கு தனியாக கோயில் கட்டினர். அதன் பிறகு அண்டை நாடுகள் மீது படையெடுத்துச் செல்லும் முன்பு காளியை வணங்கி பெரிய குண்டம் ஒன்றில் வேள்வி வளர்த்து அதில் வீரர் ஒருவரை பலி கொடுத்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.