நந்தனருக்காக நந்தியை வழிவிடச் செய்த சிவபெருமான்!

68

நந்தனருக்காக நந்தியை வழிவிடச் செய்த சிவபெருமான்!

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புன்கூர் என்ற ஊரில் உள்ளது சிவலோகநாதர் கோயில் கோயில். இந்தக் கோயிலில் சிவலோகநாதர் மூலவராகவும், சவுந்திரநாயகி, சொர்க்க நாயகி தாயாரகவும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். கோயிலின் தல விருட்சமாக புங்க மரம் விளங்குகிறது.

வைகாசி விசாகம் 10 நாட்கள், பிரம்மோற்சவ விழாவில் 10 நாட்களும் சுவாமி வீதி உலா வரும். தீபாவளி, பொங்கல், தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். நந்தனாருக்காக சிவபெருமான் நந்தியை விலகி இருக்க சொன்ன தலம்.

கோயிலின் தல விருட்சம் புங்கமரம் என்பதால், இந்த ஊருக்கு திருப்புன்கூர் என்று பெயர் வந்தது. நாக தோஷம், பூர்வ ஜென்ம தோஷம் ஆகியவை நீங்க இந்த கோயிலில் வழிபாடு செய்தால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

இந்தக் கோயிலில் புற்று வடிவாய் வீற்றியிருக்கும் மூலவர் சிவலோகநாதரை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்கும். மன அமைதி கிடைக்கும். மேலும், வேலை வாய்ப்பு, உத்தியோக உயர்வு, தொழில் விருத்தி ஆகியவற்றிற்காகவும் இந்தக் கோயிலில் வழிபாடு செய்கின்றனர். இந்தக் கோயிலில் வழிபாடு செய்யும் பக்தர்களின் வேண்டுதல்களை சிவலோகநாதர் நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார் என்பது ஐதீகம்.

புற்று வடிவாய் அமைந்துள்ள சிவலோகநாதருக்கு வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு புனுகு சட்டம் சாற்றப்படுகிறது. சுவாமி மீது திருக்குவளை சாற்றி பக்தர்கள் பூஜைகள் நடத்துகிறார்கள். நாக தோஷத்தினால் திருமணமாகாதவர்கள் தங்கத்தில் நாகத் தகடு செய்து கோயில் உண்டியலில் போடுகின்றனர். அப்படி செய்வதன் மூலமாக திருமணத் தடை நீங்கி உடனே திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் உள்ள மூர்த்திகளான சுவாமி, அம்பாள், பிள்ளையார், முருகன், அகஸ்தியர் ஆகியோருக்கு பஞ்ச அர்ச்சனைகள் செய்து பூர்வ ஜென்ம பாவங்கள் விலகப் பெறுகிறார்கள். அம்பாளுக்கு புடவை சாற்றி, அபிஷேகம் செய்தும், சந்தனக்காப்பு சாற்றியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம். புங்க மரம் நிறைந்த காட்டுப் பகுதியில் இந்தக் கோயில் இருந்ததால் இந்தக் கோயிலுக்கு புங்கூர் கோயில் என்று பெயர் வந்தது. புங்க மரம் காட்டுப் பகுதியில் இறைவன் புற்று வடிவமாக உள்ளார்.

இத்தலத்தில் முதலில் புற்று வடிவிலான லிங்கம் தான் தோன்றியுள்ளது. அதன் பிறகு நந்தி வந்துள்ளது. புற்று வடிவமாக மூலவர் இருப்பதால், ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையில் இரவு 8.30 மணிக்கு குவளை எடுத்துவிட்டு புனுகு சட்டம் சாற்றி வழிபடுகிறார்கள். சுவாமிக்கும், அம்பாளுக்கும் அழகில் யார் சிறந்தவர் என்ற போட்டி வந்து விடுகிறது. போட்டியின் போது பூலோகத்தில் ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து 3 முடிச்சு போட்டு கீழே போடுகிறேன். அது எங்கு எந்த இடத்தில் கீழே விழுகிறதோ அங்கு அழகில் சிறந்தவள் என்று ஒப்புக் கொள்கிறேன் என்று சுவாமி சொல்ல அதற்கு அம்பாளும் சம்மதிக்கிறாள்.

அதுபடி, சுவாமி தர்ப்பையை கீழே போட அந்து வந்து விழுந்து பஞ்சலிங்கமாக ஆகிவிடுகிறது. அந்த பஞ்ச லிங்கங்கள் இங்கு உள்ளது. அதனுடைய மகிமை என்னவென்றால் திருமண வரம், நாகதோஷ நிவர்த்தி இவைகளைத் தரக்கூடியதாக பக்தர்களால் வணங்கப்படுகிறது.

நந்தனாருக்காக சிவபெருமான் நந்தியை ஒதுங்கியிருக்கச் சொன்ன தலம். எல்லாக் கோயில்களிலும் நந்திக்கு நாக்கு இருக்கும். ஆனால், இங்கிருக்கும் நந்திக்கு நாக்கு இருக்காது. துவார பாலகர்கள் எல்லாக் கோயில்களிலும் நேராக இருப்பர். ஆனால், இந்தக் கோயிலில் தலை சாய்த்து இருப்பர். சுவாமியை தரிசிக்க நந்தனார் என்ற பக்தன் வந்துள்ளார் என்று கூறியதால் இவ்வாறு அமைந்துள்ளது.

குளம் வெட்டிய பிள்ளையார் என்பவர் இங்கு பிரசித்தம். நந்தனார் சிவபெருமானை தரிசிப்பதற்கு முன்னதாக அவர் குளித்துவிட்டு வர வேண்டும் என்பதற்காக பிள்ளையார் பூதங்களைக் கொண்டு ஒரே இரவில் குளம் வெட்டினார் என்று வரலாறு கூறுகிறது.

மேல ஆதனூர் என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் நந்தனார். இவர், தீவிரமான சிவபக்தர். சிதம்பரத்திலுள்ள நடராஜப் பெருமானை தரிசிக்க ஆவல் கொண்டிருந்தார். ஆனால், கூலி வேலை செய்து பிழைத்து வந்த அவரால், நடராஜப் பெருமானை உடனடியாக சென்று பார்க்க முடியவில்லை.

அவர் வேலை பார்க்கும் இடத்திலும் அவருக்கு அனுமதி இல்லை. எனினும், நாளைக்கு போகலாம், நாளைக்கு போகலாம் என்று இருந்தார். அதனால், அவருக்கு திருநாளைப்போவார் என்ற கூட பெயர் உண்டு. ஒரு நாள் அவர் சிதம்பரம் செல்வதற்கு முதலாளி அனுமதி கொடுத்து அவரும் புறப்பட்டார். அப்போது சிதம்பரம் செல்கையில் திருப்புன்கூர் தலத்திற்கு வந்தார்.

அவர் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக கோயில் வாசலில் நின்று உள்ளே எட்டி எட்டி பார்க்கிறார். ஆனால், சுவாமி தெரியவில்லை. முன்னால் இருக்கும் பெரிய நந்தி மறைத்துக் கொண்டிருந்தது. என்ன செய்வேன் இறைவா என்று மனமுருகி வருந்தினார்.

மலை போன்று நந்தி படுத்திருக்கிறதே என்று பாடினார். துவார பாலகர்கள் மூலவரிடம் நந்தனார் வந்திருக்கிறார் என்று கூற சிவபெருமான் நந்தனாரின் பக்தியை மெச்சி தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் நந்தியை சற்றே விலகி இருக்குமாறு பணித்தார். இறைவன் சொல்படி, நந்தி விலக இறைவன் நந்தனாருக்கு காட்சி கொடுத்தார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலமே இந்தக் கோயில்.