நல்லவர்களின் தொடர்பு என்ன பலன் தரும்?
விஸ்வாமித்திரர் ஒரு யாகம் செய்யத் தீர்மானித்தார் அந்த யாகத்தின் முடிவில் இருப்பதையெல்லாம் தானம் கொடுத்து விடவேண்டும் என்பது முறை. அதை அனுசரித்து விஸ்வாமித்திரர், தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் கொடுத்துக்கொண்டிருந்தார். அதை அறிந்த வசிஷ்டர், விஸ்வாமித்திரர் கொடுக்கும் தானத்தைத் தானும் பெறுவதற்காக வந்தார்.
வசிஷ்டரின் வருகையை அறிந்த விஸ்வாமித்திரர், மனம் மகிழ்ந்து வசிஷ்டருக்குத் தானம் கொடுத்தார். தானம் பெற்ற வசிஷ்டரும் அமைதியாகத் திரும்பினார்
சில நாட்கள் ஆகின விஸ்வாமித்திரர் செய்ததைப் போலவே தானும் ஒரு யாகம் செய்ய எண்ணினார் வசிஷ்டர். நல்லவர்களின் நல்ல தீர்மானம் அல்லவா உடனடியாகச் செயல்பாட்டிற்கு வந்தது. ஆம் வசிஷ்டர் யாகம் செய்தார். யாகத்தின் முடிவில் தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் செய்யத் தொடங்கினார். தகவல் அறிந்த விஸ்வாமித்திரர், வசிஷ்டர் தானம் கொடுக்கிறார் என்றால் அது விசேஷம்தான் நாமும் போய் அதைப்பெற வேண்டும் என்று புறப்பட்டு வந்தார்.
ஆனால், விஸ்வாமித்திரர் வருவதற்குள்ளாக வசிஷ்டர் தன்னிடம் இருந்த அனைத்தையும் தானம் கொடுத்து முடித்து விட்டார். அதை அறிந்ததும் விஸ்வாமித்திரர் கொதித்தார் ஆ! வசிஷ்டரே! நீர் என்னை அவமானப்படுத்திவிட்டீர்.
தானம் வாங்க வந்த என்னை வெறுங்கையுடன் அனுப்ப எண்ணி விட்டீர் போலிருக்கிறது என்றார். அவரை அமைதிப்படுத்திய வசிஷ்டர் விஸ்வாமித்திரரே! கோபம் வேண்டாம் பொருட்கள் இல்லா விட்டால் என்ன நல்லவர்களுடன் சேர்ந்திருந்த சத்சங்க சாவகாசப் பலன் ஒரு நாழிகை (24 – நிமிடங்கள்) என்னிடம் உள்ளது. அதில் கால் பங்கை உங்களுக்குத் தருகிறேன் என்றார். அதைக் கேட்டதும் விஸ்வாமித்திரர் மேலும் கோபப்பட்டார். அப்போதும் வசிஷ்டர் கோபப்படவில்லை. சரி விஸ்வாமித்திரரே! நீங்கள் போய் உலகுக்கெல்லாம் ஔி கொடுக்கும் சூரியனையும் பூமியைத் தாங்கும் ஆதிசேஷனையும் நான் அழைப்பதாகச் சொல்லி அழைத்து வாருங்கள் என்றார்.
சற்று யோசித்த விஸ்வாமித்திரர் சரி. போய்த்தான் பார்ப்போமே என்று எண்ணிப் புறப்பட்டார். போனவர் ஆதிசேஷனிடம் தகவலைச்சொல்லி அழைத்தார். ஆதிசேஷன் சுவாமி! நான் வந்து விட்டால் என் வேலையை யார் செய்வது எனக் கேட்க விஸ்வாமித்திரர் சூரியனிடம் போய்த் தகவலைச் சொல்லி அழைத்தார். சூரியபகவானோ சுவாமி உங்களுடன் நான் வந்தால் என் வேலையை யார் செய்வார்கள். உலகம் இருண்டு போய்விடாதா எனச் சொல்லி மறுத்தார்.
விஸ்வாமித்திரர் திரும்பி வந்து நடந்தவற்றை வசிஷ்டரிடம் சொன்னார் உடனே வசிஷ்டர் அப்படியா சரி ஒரு நாழிகை சத்சங்க சாவகாசப் பலன் என்னிடம் இருப்பதாகச் சொன்னேன் அல்லவா அதில் கால் பங்கை ஆதிசேஷனுக்கும் கால் பங்கை சூரிய பகவானுக்கும் அளிக்கிறேன். இப்போது போய்க்கூப்பிடுங்கள் என்றார்.
விஸ்வாமித்திரரும் போய் ஆதிசேஷனிடமும் சூரிய பகவானிடமும் தகவல் சொல்லி அழைத்தார். அவர்கள் இருவரும் உடனே வந்து விட்டார்கள். முதலில் மறுத்த நீங்கள் இப்போது வருகிறீர்களே எப்படி? இப்போது மட்டும் உங்கள் வேலையை யார் செய்வார்கள் எனக் கேட்டார். வசிஷ்டர் அளித்த கால் பங்கு சத்சங்க
சாவகாசப் பலன் எங்கள் வேலையைச் செய்யும் என்று ஆதிசேஷனும் சூரியபகவானும் பதில் அளித்தார்கள்.
விஸ்வாமித்திரருக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. சத்சங்க சாவகாசப் பலன் அதாவது நல்லவர்களின் கூட்டுறவு-சேர்க்கை எப்படிப்பட்ட சக்தி படைத்தது என்பதை உணர்ந்தார். அப்புறம் என்ன விஸ்வாமித்திரர் பணிவோடு வசிஷ்டரிடம் இருந்து கால் பங்கு சத்சங்க சாவகாசப் பலனைப்பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பினார்.
திரும்பிய விஸ்வாமித்திரர் தன் ஆசிரமத்தை நெருங்கும்போது ஆசிரம வாசலில் மகாவிஷ்ணுவைப் போலத் தோற்றம் கொண்ட இருவர் இருப்பதைப் பார்த்தார். அவர்களை நெருங்கி விஸ்வாமித்திரர் கேட்பதற்குள் அவர்களே விஸ்வாமித்திரரை நெருங்கி வந்து, சுவாமி!
நாங்கள் பகவானின் ஏவலர்கள். பகவான் ஸ்ரீராமராக அவதாரம் செய்யப் போகிறார். அப்போது சீதா தேவிக்கும் ஸ்ரீராமருக்கும் திருமணம் செய்து வைக்கும் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. பகவான் அறிவித்து விட்டு வரச் சொன்னார். எல்லாம் சத்சங்க சாவகாசப்பலன் என்று சொல்லிச் சென்றார்கள்.
அதன்படியே யாக சம்ரட்சணம் என்ற பெயரில் ஸ்ரீராமரையும் லட்சுமணனையும் விஸ்வாமித்திரர் அழைத்து சென்றார். சீதா கல்யாணமும் நடந்தது.