நவராத்திரி: வீட்டில் பூஜை செய்வது எப்படி?

263

நவராத்திரி நாட்களில் வீட்டில் அவசியம் பூஜை செய்யுங்கள். வீடு சிறிதாக உள்ளதே, இடம் இல்லையே என்று நினைக்காதீர்கள். மனம் இருந்தால் போதும், மங்களகரமாக பூஜை செய்யலாம்.

நவராத்திரிநவராத்திரி நாட்களில் வீட்டில் அவசியம் பூஜை செய்யுங்கள். வீடு சிறிதாக உள்ளதே, இடம் இல்லையே என்று நினைக்காதீர்கள். மனம் இருந்தால் போதும், மங்களகரமாக பூஜை செய்யலாம்.

முதலில் பூஜை செய்யும் இடம், அல்லது ஏற்கனவே சாமி படங்கள் இருக்கும் இடத்தினை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் நீர் தெளித்து புனிதமாக்குங்கள்.
மாலை அமாவாசை அன்று சாமி படங்களை நன்கு துடைத்து மஞ்சள், சந்தனம், குங்குமம் இடுங்கள். இவற்றில் பூக்களை வையுங்கள். குத்து விளக்கோ, காமாட்சி விளக்கோ, அகல் விளக்கோ நன்கு சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம், சந்தனம் இடுங்கள். நெய் விட்டு விளக்கேற்றுவது மிகச் சிறந்தது. நெய்யினை சுத்தமான ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனை சுடுநீரினுள் வைத்தால் உருகிவிடும். நேராக அடுப்பில் வைத்து சூடு செய்யாதீர்கள். நெய் ஊற்றிய பின்பு திரியை அதில் அனைத்து விளக்கு ஏற்றுங்கள்.

விளக்கிற்கு பூ சூட்டுங்கள், ஊது வத்தி, சாம்பிராணி ஏற்றுங்கள். வீடும் சுத்தமாக இருக்க நீங்களும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள். எல்லா மொழிகளும் அழகானவையே. சமஸ்கி ருதத்திற்கு தேவ பாஷை என்ற பெயர் உண்டு. அம்பிகையை போற்றி அநேக ஸ்லோகங்கள் சமஸ்கிருத மொழியில் உண்டு. ஆனால் அதனை தவறாக உச்சரிக்கக் கூடாது.

எனவே நல்ல தமிழ் பாடல்கள், அபிராமி அந்தாதி போல் உள்ளன. அவைகளில் உங்களால் முடிந்ததனை 5 நிமிடம் கூட படியுங்கள். ஆரம்பிக்கும் பொழுது கணபதி யினை வணங்கி, குருவினை வணங்கி பின்னர் அம்பிகை வழி பாட்டினை செய்ய வேண்டும். பூஜையில் நைவேத்தி யமாக சர்க்கரை பொங்கல், கலந்த சாதம் பாயசம், வடை என செய்வது சம்பிரதாயம்.

2 வெற்றிலை, 1 பாக்கு, 2 மஞ்சள் கிழங்கு, உங்களால் முடிந்த பழம், முடிந்தால் தேங்காய் உடைத்து நைவேத்தியம் செய்யுங்கள். நினைவில் கொள்ளுங்கள். பழங்களோ மிக உயர்ந்த நைவேத்தியம், ஏனெனில் பழங்கள் மிகவும் சுத்தமானது. வேண்டிய நாளன்று தேங்காய் உடைக்கலாம் தேங்காய் உடைத்து வழிபடுவது மன கஷ்டங்களை உடைக்கும் என்ற தொரு நம்பிக்கை உண்டு. சுத்தமான நீர் கொண்டு நைவேத்தியங்களை மூன்று முறை சுற்றி தரையில் நீரை விட்டு விடுங்கள். ஆரத்தி எடுப்பதில் நெய் தீபம் கொண்டு தீப ஆரத்தி செய்யலாம். மாலையில் சுத்தமான தட்டில் நீர் விட்டு சுண்ணாம்பு, மஞ்சள் கலந்து ஆரத்தி எடுத்து வாசலில் கோலத்தின் மேல் விட்டு விடலாம்.

முடிந்தவரை அரிசி மாவு கோலமே போடுங்கள். ஒரு கொத்து மாவிலையினை வீட்டின் முனைப்பில் தொங்க விடுவது வீட்டின் பண்டிகையினைக் குறிக்கும். அது போலத்தான் கோலத்தில் செம்மண் இடுவதும் வீட்டின் விசேசத்தினைக் குறிக்கும்..

பெண்கள் நவராத்திரி துவங்கும் முன்பு வீட்டிலேயே மருதாணி அரைத்து இட்டுக் கொள்ளலாம். கண்ணாடி வளை யங்கள் அணியலாம். இவை மனதினை உற்சாகமாய் வைக்கும். பண்டிகை துவங்கும் முன்பே அசைவ உணவு உண்பவர்கள் அதனை நிறுத்தி விடலாமே.

அது போன்று பூஜை அறையில் இயன்றவர்கள் அலங்கார தோரண மின் விளக்குகளை வைக்கலாம். ஒரிருவருக்கு மஞ்சள், சிவப்பு, பச்சை நிறத்தில் சட்டை துணி வைத்துக் கொடுக்கலாம். பொரி, கடலை, வெல்லம், அவல் ஆயுத பூஜை அன்று செய்யப்படும் நைவேத்தியங்களில் சிறந்தது.

பூஜை சாமான்களில் வெள்ளியாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள். செம்பு மிக சக்தி வாய்ந்தது. கலசமாக வைத்து பூஜை செய்பவர்கள் கலச நீரினை பூஜை முடிந்த பிறகு வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். அன்றாடம் ஒரு சுண்டல் என்பது உங்கள் பொருளாதாரம், நேரத்தினைப் பொறுத்து அமையட்டும்.

பொதுவில் மந்திரங்களை உபதேசம் பெற்றே சொல்ல வேண்டும் என்பது விதி. எனவே அவரவர் குடும்ப வழக்கப்படியே செய்வது நல்லது. மவுனமான மனதால் அம்பிகையை வேண்டுவதும், பூஜிப்பதும் மிகச் சிறந்த பலன் அளிக்கும் என்பது முன்னோர் அறிவுரை என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள்.