நவராத்திரி 10ஆவது நாள்: விஜயதசமி – பூஜை மற்றும் பலன்!
நவராத்திரிக்கு துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும்
நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கமே, நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவதுதான். துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறை சக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு என்கிறார்கள்.
துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10 -வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும்.
துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும். லட்சுமியை வணங்கினால் பொன், பொருள், நல்ல ஒழுக்கம், உயர்ந்த பண்பாடுகள், கருணை, மனிதநேயம், நல்ல சிந்தனைகள் கிடைக்கும். சரஸ்வதியை வழிபட்டால் ஞானம், உயர்ந்த கல்வி, கலைகளில் தேர்ச்சி கிடைக்கும்.
Also Read This: விஜயதசமி ஏன் கொண்டாட வேண்டும்?
இந்த மூன்று சக்திகளும் நவராத்திரியின் 9 நாட்களும் எந்தெந்த வடிவில் நமக்கு காட்சி தருகிறார்கள்? அவர்களை எப்படி வணங்க வேண்டும்? என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? அதனால் என்ன பலன் கிடைக்கும்? என்பன போன்றவற்றை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். 9 நாட்களும் இதன்படி பூஜைகள் செய்தால் அளவற்ற பலன்களை பெறலாம்.
பத்தாவது நாள்:05.10.2022
வடிவம்: அம்பிகை. இவளுக்கு விஜயா என்ற பெயரும் உண்டு (ஸ்தூல வடிவம்)
திதி: தசமி
பலன்: புரட்டாசி மாதம் சுக்ல பட்சமியே விஜயதசமி. மூன்று சக்திகளும், தீய சக்தியை அழித்து, வெற்றி கொண்டு அனைவருக்கும் நன்மைகளை அள்ளித் தந்து அருள் பாலிக்கும் சுபநாள். இன்று தொடங்கும் எல்லா காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும்.
நைவேத்தியம்: பால் பாயாசம், காராமணி சுண்டல், இனிப்பு வகைகள். பூக்கள்: வாசனைப் பூக்கள்.
சுண்டல் நிவேதனம்:
நவராத்திரியில், அம்பாளுக்கு விதவிதமான சுண்டல், பாயாச வகைகள் நிவேதனம் செய்யப்படுகிறது. அறிவியல் ரீதியாகவும் இதற்கு காரணம் உண்டு. தேவர்களுக்கு சிவன் விஷ்ணு அமிர்தம் தந்து அவர்களை காத்தது போல, பூமி உயிர்வாழ “மழை என்னும் அமிர்தத்தைத் தருகிறார்கள்.
இதனால் பூமி “சக்தி பெறுகிறது. அந்த சக்தி எனும் பெண்ணுக்கு, பூமியில் விளைந்த விதவிதமான தானியங்கள் பக்குவப்படுத்தப்பட்டு நிவேதனம் செய்யப்பட்டது. அதில் சுண்டல் பிரதான இடம் பெற்றது. நவராத்திரி காலமான புரட்டாசி, ஐப்பசியில் அடைமழை ஏற்படும். இதனால் தோல்நோய் போன்றவை அதிகமாகும். இதைப் போக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு.