நாக சதுர்த்தி, பஞ்சமி சிறப்பு வழிபாடு!

40

நாக சதுர்த்தி, பஞ்சமி சிறப்பு வழிபாடு!

நாக சதுர்த்தி என்றால் ராகு கேதுவுக்கு உரிய அற்புதமான நாள்தான். ஆனாலும் இந்த நாளில் விநாயகப் பெருமானை வணங்குவதே வளம் சேர்க்கும். ஆடி மாதத்தில் வருகிற நாக பஞ்சமியும் நாக சதுர்த்தியும் விசேஷமானவை. ஆனாலும் ஐப்பசி மாத சுக்ல பட்சத்தில் வருகிற நாக சதுர்த்தியிலும் விநாயகரை வணங்கலாம்.

தென் மாநிலங்களில் குறிப்பாக ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நாக சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சதுர்வாக சிந்தாமணி என்ற நூலில் நாக சதுர்த்தி விரதம் கடைப்பிடிக்க வேண்டிய முறை குறித்து கூறப்பட்டுள்ளது.

பாற்கடலை கடைந்தபோது வெளிவந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் பருகியதை நினைவு கூற இவ்விரதம் மேற்கொள்ளப்படுவதாக கூறுவர். பெண்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக மேற்கொள்ளும் விரதம் இது. கேதுவின் பெயரால் மேற்கொள்ளப்படும் விரதம் எனவே இன்று கேதுவின் அதி தேவதையான கணபதியை மஞ்சள் கலந்த அரிசி மற்றும் மஞ்சள் தடவிய பஞ்சால் ஆன கஜ வஸ்திரம் அணிவித்து பூஜை செய்வர்.

கர்நாடகா மாநிலத்தில் நாக சதுர்த்தியன்று தம்பிட்டு எனப்படும் உணவு நைவேத்தியம் செய்யப்படும். அரிசியை ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து அத்துடன் துருவிய வெல்லம் ஏலக்காய் சேர்த்து இந்த தம்பிட்டு தயாரிக்கப்படும்.

பெண்கள் இத்தினத்தில் உப்பில்லாத உணவு உண்பர். எண்ணெயில் பொறித்த உணவு சாப்பிடுவதில்லை. அன்று தயாராகும் உணவுக்கு தாளிப்பு கூட சேர்க்கப்படுவதில்லை. சண்முக காயத்ரியை 108 முறை கூற நாக தோஷம் பரிகாரமாகும் என்பது நம்பிக்கை. காலையில் வீட்டில் வெள்ளியில் செய்த நாகவிக்ரகத்திற்கு காய்ச்சாத பாலால் அபிஷேகம் செய்து வாசனை மிக்க பூக்களால் அர்ச்சனை செய்து வஸ்திரம் அணிவித்து பால் பழம் உலர் பழங்களை படைப்பர். மாலை வால்மீகம் எனப்படும் புற்றுக்கு சென்று அங்கே நாகங்களுக்கு பால் முட்டையை நிவேதனம் செய்வர். புற்றுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு பூக்களால் பூஜிப்பர். இன்று வாசலில் நாகத்தை கோலமாக வரைவர்.

நம் உடல் புற்றையும் அதிலுள்ள குண்டலினி சக்தி புற்றிலுள்ள நாகத்தையும் குறிப்பதாகும். அன்றைய தினத்ஹ்டில் மஹாபாரதம் படிப்பதும் உண்டு. இதை ஆந்திராவில் அலுவல சதுர்த்தி என்றும் குறிப்பிடுவர். இயற்கையோடு ஒன்றிய வாழ்வு வாழ நம் முன்னோர்கள் ஏற்படுத்திய விரதம் இது.

தற்காலத்தில் பாம்புகளை இம்சிக்காமல் நாக பிரதிமைகளை மட்டுமே பூஜிப்பது நல்லது. மழைக் காலம் ஆதலால் பாம்புகள் தங்கள் உறைவிடத்தில் இருந்து வெளியே வரும். அவ்வாறு வரும் நாகங்கள் தங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக இப் பருவத்தில் நாக வழிபாடு செய்யப்படுகிறது

இந்து சமயத்தில் பாம்புக்கும், கருடருக்கும் முக்கிய பங்கு கொடுக்கப்படுகிறது. ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாக சதுர்த்தியாவும், வளர்பிறை பஞ்சமி நாக பஞ்சமியாகவும் கடைபிடிக்கப்படுகிறது. சனிக்கிழமையன்று கருட ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் விரதமிருந்து நாகர் புற்றுக்கு பாலூற்றி வழிபட நாக தோஷங்கள் நீங்கி திருமணம் நடைபெறும் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பாம்பென்றால் படையும் நடுங்கும் அதே போல பாம்பு கிரகங்களான ராகு கேது தோஷத்தினால் பலவித தடைகளும் ஏற்படுகின்றன. நாக பஞ்சமி நாளில் விரதமிருந்து நாக தெய்வத்தை வழிபட தோஷம் விலகி திருமணம் கைகூடும், கணவன் ஆயுள் அதிகரிக்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும், தடைபட்ட காரியம் தடையில்லாமல் நிறைவேறும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும், குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கவும், ஜாதகத்தில் உள்ள நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் விலகவும் நம்முடைய வீட்டிலேயே நாக சதுர்த்தி, நாக பஞ்சமி கருட பஞ்சமி விரதங்களைக் கடைபிடிக்கலாம்.

நாக பஞ்சமி புராண கதை பிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு நான்கு மனைவிகள். அவர்களில், கத்ரி என்பவளிடத்தில் பிறந்தவர் நாகர். தாய் சொல்லைக் கேட்காததால், தீயில் விழுந்து இறக்கும்படி தாய் கத்ரி சாபம் கொடுத்தாள். அந்த சாபத்தினால், பல நாகங்கள் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின்போது அக்கினியில் வீழ்ந்து இறந்தன. அஸ்தீகர், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து, நாகர்களுக்குச் சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் இந்த நாக பஞ்சமி தினம்.

தடைகள் நீங்கும் சிலரது ஜாதகத்தில் நாக தோஷங்கள் இருக்கும். கால சர்ப்ப தோஷத்தின் காரணமாக சிரமப்பட்டு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். தோஷம் இருப்பவர்கள் நாக சதுர்த்தி, நாக பஞ்சமி விரதம் கடைபிடிப்பதன் மூலம் தடைகள் நீங்கி புத்திர பாக்கியம் கிடைக்கும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.

தோஷங்கள் நீக்கும் நாக சதுர்த்தி வழிபாடு நாக சதுர்த்தி நாளில் வீட்டில் பூஜை செய்து வழிபடலாம். சிறிய வெள்ளி அல்லது செம்பில் செய்த நாகருக்கு வீட்டிலேயே பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, பூக்களால் அர்ச்சனை செய்யலாம், பால் பாயசம் நிவேதனம் செய்து வழிபடலாம். இதன் மூலம் நாக தோஷங்கள் நீங்கி குழந்தைகளுக்கும், கணவருக்கும், சகோதரர்களுக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பெரிய அளவில் அபிஷேகம் செய்ய முடியாவிட்டாலும் நாகர் படத்தின் முன்பு ஒரு டம்ளர் பால் வைத்து வழிபாடு செய்யலாம். இதன் மூலம் தலைமுறை தலைமுறையாக இருக்கும் பாவங்கள் கூட நீங்கி விடும் என்பது நம்பிக்கை.

நாகர்களை வணங்குவோம் நாக சதுர்த்தி தினமான 1/8/2022 திங்கட்கிழமை நாகர்களின் புராணத்தை படித்து நாகராஜா காயத்ரி மந்திரம் கூறி வழிபட தோஷங்கள் நீங்கும். “ஓம் சர்பராஜாய வித்மஹே நாகராஜாய தீமஹி தன்னோ னந்தஹ் ப்ரசோதயாத்” என கூறி நாகர்களை வணங்க வேண்டும். சர்பங்களுக்கெல்லாம் தலைவனான நாக ராஜனே உங்களை வணங்குகிறேன். நித்தமும் உங்களை நினைக்கும் இந்த அடியேனுக்கு ஆசி வழங்கி அருள்புரிய வேண்டுகிறேன். என்று வேண்டிக்கொண்டால் ராகு தோஷமும் நாக தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகளும் நீங்கும்.

பட்சி ராஜா கருடன் நாக சதுர்த்திக்கு அடுத்த நாள் வருவது கருட பஞ்சமி விரதம். கருடன் என்று போற்றப்படும் பறவையை பட்சி ராஜா அதாவது பறவைகளின் தலைவன் என்று சொல்வார்கள். சாஸ்திர சம்பிரதாயங்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள ஒரு விசேஷமான பறவை. பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வாரின் மகத்துவம் சொல்லில் அடங்காது. அவருக்கென்றே கருடபஞ்சமி என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கருட தரிசனம் கருட பஞ்சமி நாளில் பெண்கள் விரதமிருந்து கருடனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மகப்பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாக தோஷங்கள் விலகி வாழ்வில் வளம் பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

கூட்டு பிராத்தனை நாக சதுர்த்தியை முன்னிட்டு நாளை கருடபஞ்சமி செவ்வாய்க்கிழமை குழந்தை வரம் வேண்டியும், ஆண் பெண் திருமணம் வேண்டியும், மேலும் நற்பலன்கள் பெறவும் நாகரையும், கருடனையும் வேண்டி யாகங்கள் நடைபெறுகின்றன.

இதில் நாக தோஷம் நீங்குவதற்கும், பக்ஷி தோஷங்கள் அகலவும், வாகன விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், ராகு கேது கிரங்கள் மற்றும் பிற நாக தோஷங்கள் விலக வேண்டியும், குடும்பத்தில் சுபிட்சம் உருவாகவும், பிறக்கும் குழந்தைகள் அறிவும் வீரமும் உடையவர்களாக விளங்கவும், ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட கூட்டு பிரார்த்தனையும் செய்து வழிபாடு செய்யலாம்.