நாக தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

186

நாக தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியிலுள்ள இரும்பாடி என்ற ஊரில் உள்ள கோயில் காசி விஸ்வநாதர் திருக்கோயில். இந்தக் கோயிலில் காசி விஸ்வநாதர் மூலவராக காட்சி தருகிறார். விசாலாட்சி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். வில்வம் தான் கோயிலின் தல விருட்சம். பங்குனியில் மூன்று நாள் பிரம்மோற்சவம், மாசி மகம், மாசி சிவராத்திரி, திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் இந்த கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

மேலும், அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும் செய்யப்படுகிறது. காசி விஸ்வநாதர் உயரம் குறைந்த நிலையில் காட்சி தருகிறார். அவருக்கு எதிரில் உள்ள நந்தி பகவான் உயிர்ப்புடன் காட்சி தருவது மிகச் சிறப்பாக கருதப்படுகிறது. இந்தக் கோயிலில் உள்ள கிணற்று நீர் தீர்த்தம் இன்று வரையிலும் வற்றாமல் இருக்கிறதாம்.

போரில் வெற்றி பெறுவதற்கு மராட்டிய மாவீரன் சிவாஜி இந்தக் கோயிலுக்கு வந்து காசி விஸ்வநாதரை வழிபட்டு சென்றுள்ளார். பங்குனி மாத திருவிழா நடைபெறும் போது காசி விஸ்வநாதர் நெற்றியில் நேரே சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை பரப்பி பூஜை செய்கிறார். இந்தக் கோயிலில் அம்மன் பாம்படம் அணிந்திருப்பது சிறப்பம்சம்.

இந்தக் கோயிலில் காசி லிங்க நர்த்தன கிருஷ்ணன், பறக்கும் வடிவிலான பஞ்சநாக சிலைகள் அமைந்திருப்பது மேலும் சிறப்பாக உள்ளது. வேண்டிய காரிய நிறைவேறியதும் சுவாமிக்கு பால், இளநீர், தயிர், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், விவசாய தானியங்களும் படைக்கப்படுகிறது.

நாக தோஷம் நீங்க பஞ்ச நாகத்திற்கு பால் ஊற்றி சிறப்பு அபிஷேகங்கள் செய்து அர்ச்சனைகள் செய்யப்படுகிறது. திருமணத் தடை நீங்கியவர்கள் சுவாமிக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து புது வஸ்திரம் சாற்றியும் வழிபாடு செய்கின்றனர். தென் மாவட்ட கிராமப் பகுதிகளில் தண்டட்டி (தந்தட்டி) எனப்படும் பாம் படத்தை மூதாட்டிகள் காதில் அணிந்திருப்பார்கள்.

ஆனால், இதனை அணிந்து கொள்வதற்கு பெரிய துவாரம் போட வேண்டும். இந்த ஆபரணம் நீண்ட காலத்திற்கு முன்பே பயன்பாட்டில் உள்ளது. இதனை நிரூபிக்கும் வகையில் சிவபெருமானின் மனைவியான பார்வதி தேவி முதியவர் கோலத்தில் பாம் படம் அணிந்து இந்தக் கோயிலில் காட்சி தருகிறாள்.

மதுரையை பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்த போது இரும்பூரில் அவர்களது படை பலத்திற்கு தேவையான ஆயுதங்களை தயாரிக்கும் பணிகளைச் செய்து வந்தனர். அப்போது கவனக்குறைவு காரணமாக சில வீரர்கள் தங்களது உடல் உறுப்புகளை இழக்க நேரிட்டது. ஆயுதங்கள் தயாரிக்கும் போதும், போர் புரியும் போதும், வேட்டையாடும் போது வீரர்களுக்கு ஏற்படும் இழப்புகளை தவிர்ப்பதற்காகவும், வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் சிவனிடம் முறையிட காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர்.