நாக தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!
திருநெல்வேலி மாவட்டம் புளியரை என்ற ஊரில் உள்ள கோயில் சதாசிவமூர்த்தி கோயில். இங்கு சதாசிவமூர்த்தி மூலவராகவும், சதாசிவம் உற்சவராகவும் காட்சி தருகிறனர். சிவகாமி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். புளியமரமே இங்கு தல விருட்சமாக திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 10 நாட்கள் இங்கு திருவிழா நடக்கிறது. இது தவிர குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, மகா சிவராத்திரி, நவராத்திரி, ஆடிப்பூரம் ஆகிய நாட்களிலும் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
அதிசயம்:
இந்தக் கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். பொதுவாக சிவன் கோயிலில் தட்சிணாமூர்த்தி, கோயிலின் தெற்கு பிரகாரத்தில் தெற்கு பார்த்தவாறு காட்சி தருவார். ஆனால், இந்தக் கோயிலில் மூலவருக்கும், நந்திக்கும் நடுவில் தட்சிணாமூர்த்தி காட்சி தருவது அதிசயமாக பார்க்கப்படுகிறது.
சிவனுக்கு வலது பின் திசையில் நவநீதகோபாலர், சுற்றுப்பிரகாரத்தில் சதாசிவமூர்த்தி, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரன், சுப்பிரமணியர், பைரவர், நாகர், சந்திரன் மற்றும் சப்த கன்னிகள் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். என்னதான் இது சிவன் கோயிலாக இருந்தாலும், இங்கு தட்சிணாமூர்த்திக்கே சிறப்பு. காரணம், அவர் நந்தி பகவானுக்கும், சிவனுக்கும் இடையில் காட்சி தருவது தான். இங்குள்ள விநாயகர் தெப்பக் குள விநாயகர் என்ற திருநாமத்துடன் காட்சி தருகிறார். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும், வேலை கிடைக்கவும், வியாபாரங்களில் சிறந்து விளங்கவும், நட்சத்திரம் மற்றும் நாக தோஷங்கள் நீங்கிடவும் இந்தக் கோயிலில் வேண்டிக் கொள்கின்றனர். அப்படி நாம் வேண்டிக் கொண்ட அனைத்து காரியங்களும் நடந்திட சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனைகள் செய்யப்படுகிறது.
பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கும், அம்பாளுக்கும் புது வஸ்திரம் சாற்றி குரு பகவான், தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றியும், முல்லைப் பூ மலர் கொண்டும், தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்தும் கோடி தீபம் ஏற்றி வைத்தும், சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.
பொதுவாக சிவன் கோயிலில் தட்சிணாமூர்த்தி, கோயிலின் தெற்கு பிரகாரத்தில் தெற்கு பார்த்தவாறு காட்சி தருவார். ஆனால், இந்தக் கோயிலில் மூலவருக்கும், நந்திக்கும் நடுவில் தட்சிணாமூர்த்தி காட்சி தருவது அதிசயமாக பார்க்கப்படுகிறது. இதுபோன்று வேறு எந்த சிவன் கோயிலிலும் காணப்படுவதில்லை. கோயிலுக்குள் நுழைய 27 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த 27 படிக்கட்டுகள் 27 நட்சத்திரங்களாக கருதப்படுகின்றன.
ஜாதக தோஷம் உள்ளவர்கள் 27 நட்சத்திரங்களாக கருதப்படும் இந்த 27 படிகளில் ஏறிச் சென்று சிவனை தரிசனம் செய்தால், தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. புளியமரத்தின் அடியில் சிவன் காட்சி தந்ததால் இந்த ஊரானது புளியரை என்று அழைக்கப்படுகிறது. மேலும், சிறிய சிருங்கேரி என்ற சிறப்பு பெயரையும் இந்த ஊர் கொண்டுள்ளது. சிவன் கோயிலாக இருந்தாலும், தட்சிணாமூர்த்திக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆகையால், ஒவ்வொரு வியாழக் கிழமையும் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலானது குரு பரிகார தலமாகவும் திகழ்கிறது.
சதாசிவமூர்த்திக்கு வலதுபுறம் அருள்பாலிக்கும் அம்பாள் சிதம்பரத்திலிருந்து கொண்டு வரப்பட்டமையால் சிவகாமி அம்பாள் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறாள். சமண மதம் மேலோங்கியிருந்த காலகட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. இதனால், சிவபக்தர்கள், நடராஜர் சிலையை எடுத்துக் கொண்டு தெற்கே வந்தனர். திரிகூடாசல மலை எனப்படும் குற்றாலத்தைக் கடந்து புளியமரங்கள் நிறைந்த வனத்தை அடைந்தனர்.
சுவாமியை அங்கிருந்த பெரிய புளியமரத்தின் பொந்தில் மறைத்து வைத்தனர். ஆனால், சுவாமியின் சிலையானது அந்த மரத்தின் உரிமையாளரது கண்ணில் தென்பட்டது. இதையடுத்து, தினந்தோறும் அவர் நடராஜர் சிலையை வணங்கி வந்தார். அப்படியிருக்கும் போது ஒரு நாள் சிலையை மறைத்து வைத்த பக்தர்கள் ஒரு நாள் நடராஜர் சிலையை தேடி வந்தனர். புளிய மரத்தின் உரிமையாளர் நடராஜர் சிலை காணாமல் போய்விட்டது என்று கூறி வருந்தினார்.
சுவாமியை வேண்டி, மீண்டும் அதே இடத்தில் சுவாமியை எழுந்தருள வேண்டும் என்று வேண்டினார். இதையடுத்து, சுவாமி லிங்க வடிவில் அங்கே சுயம்புவாக தோன்றினார். அப்படி தோன்றிய இறைவனை சதாசிவம் என்று அழைத்தனர். இது குறித்து அறிந்து கொண்ட அந்தப் பகுதி மன்னர் அந்த இடத்தில் கோயில் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.