நாட்டியத்தில் சிறந்து விளங்க வழிபட வேண்டிய கோயில்!

159

நாட்டியத்தில் சிறந்து விளங்க வழிபட வேண்டிய கோயில்!

கடலூர் மாவட்டம் தீர்த்தனகிரி என்ற ஊரில் உள்ள கோயில் சிவகொழுந்தீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் சிவகொழுந்தீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். ஒப்பிலாநாயகி, நீலாயதாக்‌ஷி ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். கொன்றை மரமே தல விருட்சமாக திகழ்கிறது. திருத்தணை நகர் இந்த தலத்தின் புராண பெயராக விளங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் வைகாசியில் 13 நாள் பிரம்மோற்சவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் ஆகிய நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இத்தல இறைவன் மீது பங்குனி மாதம் 20, 21, 22 ஆகிய 3 நாட்கள் சூரிய ஒளி விழுகிறது. விவசாயம் செழிக்கவும், நாட்டியத்தில் சிறந்து விளங்கவும் இந்தக் கோயிலில் வேண்டிக் கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் அருகில் பெருமாள், பிரம்மன் இருவரும் சிவனை வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர். நிருத்த விநாயகர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். அருகில் நான்கு பூத கணங்கள் அவரை வணங்கியபடி இருக்கிறது. சிவபெருமான் உணவு சாப்பிட்ட கொன்றை மரம் கோயில் பிரகாரத்தில் இருக்கிறது. இத்தலத்தில் தல விநாயகர் – வலம்புரி விநாயகர் கோயிலில் 3 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

பலி பீடம், கொடி மரம், நந்தி மண்டபம் ஆகியவற்றை கடந்து சென்றால் 3 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் எழில் மிஞ்சுகிறது. உள்ளே நேராக பிரதோஷ நந்தி வீற்றிருக்கிறார். மகாமண்டபம், ஸ்நபன மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என சுவாமி சன்னதி அமைந்துள்ளது. தென் திசை நோக்கியுள்ள நடராஜப் பெருமான் அன்னை சிவகாமியோடு பக்தர்களுக்கு தரிசனம் தந்தருள்கின்றார்.

இந்தக் கோயிலில் நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். அவருக்கு கீழே திருமால் தனது ஆயுதமான சங்கை வாயில் வைத்து ஊதியபடியும், பிரம்மா மத்தளம் வாசித்தபடியும் இருக்கின்றனர். திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவபெருமான் நடனமாடும் இந்தக் காட்சியை காண்பது என்பது அரிதான ஒன்று.

நடனம், இசை பயில்பவர்கள் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வேண்டிக் கொள்கின்றனர். இதனால், கலைகளில் சிறப்பிடம் பெறலாம். விஷ்ணு துர்க்கை கோஷ்டத்தில் இல்லாமல் தனிச் சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.

இத்தலத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி வேறெங்கும் இல்லாத வகையில் இரு கால்களையும் மடக்கிய நிலையில் பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பொதுவாக தட்சிணாமூர்த்தி தனது இட து காலை மடக்கி வலது காலை கீழே ஊன்றிய நிலையில், அந்த வலது காலடியில் முயலகன் இருப்பார். ஆனால், இந்த நிலையில், முயலகனும் இல்லை. நான்கு சீடர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

விவசாய தம்பதியர்கள் உணவு படைத்த போது அதனை சிவபெருமான் தனது இரு கால்களையும் மடக்கி அமர்ந்து சாப்பிட்டதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தெட்சிணாமூர்த்தி இந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரிடம், வேண்டிக் கொண்டால் உணவிற்கு பஞ்சமே வராதாம். மேலும், விவசாயமும் செழிக்கும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோயிலில் சிவபெருமான், சுயம்பு லிங்கமாக சதுரவடிவ பீடத்துடன் காட்சி தருகிறார். சிவன் நிலத்தை உழுவதற்கு பயன்படுத்திய நீர் இறைத்த கலம் தற்போதும் இருக்கிறது. அம்பாள் ஒப்பில்லா நாயகி தனி சன்னதியில் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். இவளை, கருந்தடங்கன்னி, நீலாம்பிகை ஆகிய பெயர்களிலும் அழைக்கின்றனர்.

ஒரு காலத்தில் சிவபெருமானுக்கு திணைப்பயிரை நைவேத்தியமாக படைக்கும் பழக்கம் இருந்துள்ளது. ஆனால், சரியான பராமரிப்பு இல்லாததால் அந்தப் பழக்கம் நாளடைவில் மறைந்துவிட்டது. திணைப்பயிரை விளையச் செய்த தலம் என்பதால், இந்த ஊருக்கு திருத்திணை என்ற பெயர் வந்தது. சிவன் பணியாளாக வந்து வேலை செய்த கோயில் என்பதால், இந்தக் கோயிலில் திணைப்பயிரை நைவேத்தியம் செய்து வழிபட்டால் பணி உயர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.

சிவனது உதவியாளராக இருந்து அவரது கணக்கெடுக்கும் பணியைச் செய்யும் சண்டிகேஸ்வரர் பல கோயில்களில் தனித்து தியான நிலையில் இருப்பார். ஆனால், இந்தக் கோயிலில் மனைவி சண்டிகேஸ்வரியுடன் காட்சி தருகிறார். இவர், தனது பணி வேலைக்கு மனைவியை உதவியாக வைத்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.

இந்தக் கோயிலுக்கு முன்பாக ஜாம்புவதடாக தீர்த்தம் உள்ளது. முன் வினைப் பயனாக ஜாம்பு (கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இந்த தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்கி சாபவிமோட்சனம் பெற்றாராம். இதனால், இந்த தீர்த்தம் அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்.

ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் சிவன் மீது அன்பு கொண்ட விவசாய தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். தினமும் சிவபெருமானின் பக்தருக்கு உணவளித்துவிட்டு அதன்பின்பு இருவரும் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு நாள் சிவபெருமான், அவர்களது பக்தியை சோதிக்க எண்ணினார். அதற்காக, எந்த சிவபக்தரையும் அவர்களது வீட்டு பக்கம் செல்லாதபடி செய்தார்.

யாரும், வரவில்லை என்ற நிலையில், விவசாயி, தனது மனைவியுடன் தோட்டத்தில் பணியாளர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்று பார்க்க வந்தனர். ஆனால், அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. ஆகையால், நீண்ட நேரம் இருவரும் அங்கேயே காத்திருந்தனர். அப்போது முதியவர் ஒருவர் அங்கு வந்தார். அவரிடம், விவசாயி தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கூறினான்.

முதியவரோ, நான் உழைக்காமல் எதுவுமே சாப்பிட மாட்டேன். எனவே உனது தோட்டத்தில் எனக்கு ஏதேனும் வேலை கொடு. அதற்கு கூலியாக வேண்டுமானால், நீ கொடுக்கும் உணவை நான் சாப்பிடுகிறேன் என்று அந்த முதியவர் கூறினார். விவசாயும் அதற்கு ஒத்துக் கொண்டு தனது தோட்டத்தை உழும்படி கூறினான். முதியவர் வயலில் உழுதார்.

தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று உணவு எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு வந்தனர். அப்போது, தோட்ட த்தில் விதைக்கப்பட்டிருந்த திணைப்பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. இதைக் கண்டு ஆச்சரியமடைந்த விவசாயி, தான் கொண்டு வந்த உணவை அருகிலிருந்த கொன்றை மரத்தடியில் அமர்ந்து முதியவருக்கு சாதம் பரிமாறினான்.

முதியவர் சாப்பிட்டு முடித்த பின்பு, அவரிடம், எப்படி ஒரே நாளில் திணைப்பயிர்கள் விளைந்தது? என்று விவசாயி கேட்டான். விவசாயி கேட்டுக் கொண்டிருக்கும் போதே முதியவர் மறைந்தார். இதையடுத்து, சிவபெருமான், அந்த விவசாயிக்கு காட்சி கொடுத்து, தானே முதியவராக வந்ததாக கூறினார். இதில், மனமகிழ்ந்த விவசாயி, சிவபெருமானை இங்கேயே எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டான். சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.