நினைத்த காரியம் நடக்க பெருமாளுக்கு துளசி அர்ச்சனை வழிபாடு!

189

நினைத்த காரியம் நடக்க பெருமாளுக்கு துளசி அர்ச்சனை வழிபாடு!

வேலூர் மாவட்டம் திருப்பாற்கடல் என்ற ஊரில் உள்ளது பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக பிரசன்ன வெங்கடேச பெருமாள் காட்சி தருகிறார். தாயார், அலர்மேல் மங்கை அருள் பாலிக்கிறார்.

சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்பதை உணர்த்துவதைப் போன்று சிவபெருமானின் ஆவுடையில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். பொதுவாக பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அது வழியாக உற்சவ மூர்த்தி வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். ஆனால், இந்தக் கோயிலில் மட்டும் சொர்க்க வாசலுடன் சேர்த்து 3 வாசல் உள்ளது. வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டு மூலவரை நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.

இந்தக் கோயில் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. கோயில் பிரகாரத்தில் ஆண்டாள், பாமா, ருக்மணியுடன் நவநீத கிருஷ்ணன், பக்த ஆஞ்சநேயர், 9 நாக தேவதைகள், அஷ்ட நாக கருடாழ்வார் உள்ளனர். கோயிலுக்கு எதிரில் புண்டரீக தீர்த்தம் உள்ளது.

திருவோணம் நட்சத்திரக்காரர்களின் குணம்:

பெரியவர்களிடம் மதிப்பும், மரியாதையும் கொண்டிருப்பார்கள். எப்போதும் தெய்வ பக்தியும் இருக்கும். பொது விஷயங்களில் கலந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவார்கள். பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் மேலோங்கும். நிலபுலன்களை அதிகம் கொண்டிருப்பார்கள்.

தோஷங்கள் நீங்க வழிபாடு:

திருவோண நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க பிரசன்ன வெங்கடேச பெருமாளை வழிபாடு செய்கின்றனர். கல்வியில் சிறந்து விளங்கவும், காது, மூக்கு, தொண்டை (இஎன்டி மருத்துவர்கள்) தொடர்பான மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், ஆடியோ சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் என்று பலரும் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து கொள்கின்றனர்.

நினைத்த காரியம் நடக்க வழிபாடு:

திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு நெய்விளக்கேற்றி, துளசி அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். திருமணத் தடை நீங்க 108 விரளி மஞ்சளை மாலையாக கோர்த்து தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு.

தல பெருமை:

திருவோண நட்சத்திர தலம்:

பெருமாளின் திருவோண நட்சத்திரம் மற்றும் சிவபெருமானின் திருவாதிரை நட்சத்திர ஆகிய நட்சத்திரங்கள் மட்டுமே திரு என்ற அடைமொழியை கொண்டுள்ளது. சந்திர பகவான் பெற்ற சாபம் காரணமாக அவனது கலைகள் அனைத்தும் தேயத் தொடங்கியது. இதனால், இவனது 27 நட்சத்திர மனைவியருள் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி வருந்தமடைந்தாள்.

இதையடுத்து, இந்தக் கோயிலுக்கு வந்து பிரசன்ன வெங்கடேச பெருமாளை வேண்டி தவமிருந்தாள். இவளது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவனது தோஷத்தை போக்கினார். அன்று முதல் இந்தக் கோயில் திருவோண நட்சத்திரத்திற்குரிய தலமானது.

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ ரோகிணி அஸ்தம் ஆகிய சந்திரனுக்குரிய நாளிலோ, மூன்றாம் பிறை நாளிலோ பெருமாளுக்கு அபிஷேகம் அர்த்தனை செய்து வழிபட்டால் கல்வி அறிவு வளரும். திருவோணம் பெருமாளுக்குரிய நட்சத்திரம் என்பதால் அனைத்து நட்சத்திரக்காரர்களும் தங்களது வேண்டுதல் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.

சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்பதை உணர்த்துவதைப் போன்று சிவபெருமானின் ஆவுடையில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். சிவனும், பெருமாளும் ஒன்றாகவே அருள் பாலிப்பதால் இந்தக் கோயிலில் பிரதோஷம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பெருமாளின் 108 திவ்யதேசத்தில் 107ஆவது தலமான திருப்பாற்கடலை உடலுடன் சென்று பார்க்க முடியாது. இந்தக் குறை நீங்கவே பெருமாள் இந்த திருப்பாற்கடலில் அருள்பாலிக்கிறார். ஆகையால் இங்குள்ள பெருமாளை தரிசித்தால் 107 ஆவது திவ்ய தேசமான திருப்பாற்கடல் பெருமாளை தரிசித்த பலன் கிடைக்கும்.

பொதுவாக பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அது வழியாக உற்சவ மூர்த்தி வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். ஆனால், இந்தக் கோயிலில் மட்டும் சொர்க்க வாசலுடன் சேர்த்து 3 வாசல் உள்ளது. வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டு மூலவரை நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.

தல வரலாறு:

பெருமாள் கோயிலுக்கு புண்டரீக மகரிஷி யாத்திரை சென்றார். நாராயண சதுர்வேதிமங்கலம் என்ற தலத்தில் அவர் நுழைந்ததும் அங்கு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தார். அய்யய்யோ பெருமாள் கோயிலுக்கு வருவதற்குப் பதிலாக சிவன் கோயிலுக்குள் நுழைந்து விட்டோமோ என்று கூறிக் கொண்டு வெளியே வந்தார். அப்போது சிவபெருமான் ஒரு முதியவர் வேடத்தில் அங்கு வந்து, ரிஷியே நீங்கள் உள்ளே சென்று வந்தது பெருமாள் கோயில் தான் என்றார். ஆனால், அதற்கு மகரிஷி மறுப்பு தெரிவித்தார்.

இதற்கு உடனே மகரிஷியை மூலஸ்தனத்திற்குள் அழைத்துச் சென்ற முதியவர் அங்கிருந்த ஆவுடையின் மேல் ஏறி நின்று பெருமாளாக பிரசன்னமாகி, சிவன் வேறு, விஷ்ணு வேறு கிடையாது. இருவரும் ஒருவரே என்றார். மேலும், அமர்ந்த கோலத்திலும், கிடந்த கோலத்திலும் தரிசனம் தந்தார். அதோடு, ரிஷியே, உங்களால் திருப்பாற்கடலுக்கு சென்று இந்த 3 கோலங்களிலும் தரிசிக்க முடியாது. இதன் காரணமாக இந்த 3 கோலங்களிலும் உங்களுக்கு நான் இங்கு தரிசனம் தருகிறேன். ஆதலால், இந்த தலம் இன்று முதல் திருப்பாற்கடல் என்று அழைக்கப்படும் என்று அருளினார்.

புண்டரீக மகரிஷிக்காக பெருமாள் பிரசன்னமானதால் (தோன்றியதால்) இந்தக் கோயிலில் உள்ள பெருமாள், பிரசன்ன வெங்கடேச பெருமாள் என்று ஆனார். இவருடன், அலர்மேலு மங்கை தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.