நினைத்த காரியம் நிறைவேற, துன்பங்கள் தீர அனுமன் ஜெயந்தி விரதம்!

145

நினைத்த காரியம் நிறைவேற, துன்பங்கள் தீர அனுமன் ஜெயந்தி விரதம்!

அனுமனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரும் அமாவாசை திதியும், மூலம் நட்சத்திரமும் கூடிய திருநாளன்று சிறப்பாக அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அனுமன் ஜெயந்தி நாளான இன்று ஒவ்வொரு அனுமன் கோயிலிலும் வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

இந்த நாளில் அனுமனுக்கு விரதமிருந்து அனுமனை வழிபாட்டு வந்தால் துன்பங்கள் தீரும். அதோடு, நாம் நினைக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்பது ஐதீகம்.

இராமாயணத்தில் சிவனின் அம்சமாக அவதரித்தவர் தான் அனுமன் என்று புராணங்கள் சொல்கின்றன. ஆகையால், அனுமனை வழிபடுபவர்களுக்கு சிவன் மற்றும் பெருமாள் ஆகியோரது ஆசி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. சீதையை கடத்திச் சென்ற ராவணனின் இருப்பிடத்தை கண்டறிந்து சொன்னவர். ராவணனுடன் நடந்த யுத்தத்தில் லட்சுமணனின் உயிரைக் காப்பாற்ற சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து வந்தவர் தான் அனுமன்.

இப்படி ராமனுக்கு பலமாக இருந்த அனுமனை அவரது ஜெயந்தி நாளில் அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அனுமனுக்கு அவரது நாமத்தை சொல்லி வழிபடுவதை விட, ராமனின் நாமத்தைச் சொல்லி வழிபடுவதே அதிகளவில் பலன் தரும். ஏனென்றால், ராமனின் தீவிரமான பக்தராக இருந்தவர் அனுமன். மேலும், அனுமனுக்கு வடை மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு சாற்றியும் வழிபாடு செய்யலாம்.

அனுமன் ஜெயந்தி நாளில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு ராம நாமம் சொல்லி அனுமனை வழிபட வேண்டும். மேலும், அன்றைய நாளில் உணவருந்தாமல், அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று துளசி மாலை, வடை மாலை, வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்யலாம். வீட்டிலுள்ள அனுமனின் பட  த்திற்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து வணங்க வேண்டும். மேலும், அவரது வாலில் தான் சக்தி அதிகம் இருக்கும் என்பதால், அவரது வாலிலும் சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து வணங்கி வழிபட வேண்டும்.

ஒரு நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், மதிய வேளையில் மட்டும் உணவு எடுத்துக் கொள்ளலாம், மாலையில் ராம நாமம், அனுமனின் அஷ்டோத்திரங்கள், மந்திரங்கள் சொல்லி வழிபட வேண்டும். மறுநாள் காலையில் துளசி தீர்த்தம் அருந்தி அனுமன் ஜெயந்தி விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.