நிலப்பிரச்சனையை தீர்த்து வைக்கும் உமா மகேஸ்வரர் கோயில்!

67

நிலப்பிரச்சனையை தீர்த்து வைக்கும் உமா மகேஸ்வரர் கோயில்!

நாகப்பட்டினம் மாவட்டம் கோனேரிராஜபுரம் என்ற ஊரில் உள்ள கோயில் உமாமகேஸ்வரர் (பூமிநாதர்) கோயில். இந்தக் கோயிலில் உமாமகேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். அங்கவள நாயகி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். திருநல்லம் மற்றும் திருவல்லம் என்பதே இந்த ஊரின் புராணப் பெயராக இருந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகம் மற்றும் மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா நடக்கிறது. இத்தல இறைவன் நான்கரை அடி உயர சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். ஒரே கொப்பில் 13 தளம் உள்ள வில்வ இலை கோயில் தல விருட்சமாக உள்ளது.

சிவன் சன்னதி கோஷ்டத்தின் பின்புறம் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருமே அருள்பாலிக்கிறார்கள். இந்தக் கோயிலானது, ராஜராஜ சோழனின் பாட்டி கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன் மாதவியால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. வைத்தியநாதருக்கு என்று தனி கோயில் உள்ளது. இத்தலத்தில் உள்ள விநாயகர் அரசமர விநாயகர் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்டதுவாரபால விமானம் எனப்படும்.

சகல விதமான நோய்களும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாதரை வழிபட்டால் குணமாகும் என்பது தீராத நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக வெண் குஷ்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. வீடு கட்டுவதில் சிக்கல், நிலப்பிரச்சனை உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமண தடை உள்ளவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், வியாபாரத்தில் பிரச்சனை உள்ளவர்கள், திங்கள் கிழமையில் இங்குள்ள சிவனுக்கும் பார்வதிக்கும் அபிஷேகம் செய்து வசுதரா என்ற யாகம் செய்தால் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. திரிபுரத்தை எரித்த திரிபுரசம்ஹாரமூர்த்தி இத்தலத்தில் தனியாக அருள்பாலிக்கிறார். இவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் எம பயம், எதிரிகளின் தொந்தரவு விலகும் என்பது நம்பிக்கை.

படிப்பில் மந்தநிலையில் இருப்பவர்கள், ஞாபக சக்தி வேண்டுபவர்கள், இங்குள்ள ஞான குழம்பு தீர்த்தம் சாப்பிட்டால் சிறந்த பலன் உண்டு. பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நிவர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

துர்கை மேற்கு பார்த்து அருள் பாலிக்கிறாள். எமதர்மன் திருக்கடையூரில் ஏற்பட்ட பயத்தை போக்க இந்த துர்கையை வழிபாடு செய்துள்ளான். ஒரே மூலஸ்தானத்தில் 6 விநாயகர் சபையாக அருள் பாலிக்கிறார்கள். நந்தி பகவான் இந்தக் கோயிலில் வழிபாடு செய்துள்ளதாக புராணம் கூறுகிறது. ஆகையால் பிரதோஷ காலத்தில் இந்தக் கோயிலில் வழிபாடு செய்தால் ஒன்றுக்கு பல மடங்கு பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அஷ்டதிக் பாலகர்கள் இங்கு வழிபாடு செய்ததன் நினைவாக கோயில் விமானத்தின் மேல் அஷ்டதிக் பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள். 16 சித்தர்கள் இந்தக் கோயிலில் வழிபாடு செய்துள்ளனர். இங்கு மூன்று சண்டிகேஸ்வரர் காட்சி தருகின்றனர். பெருமாள் தாரை வார்த்து கொடுக்க சிவபார்வதி திருமணக் காட்சியை அகத்தியர் இங்கு தரிசனம் செய்துள்ளார்.

பூமாதேவி இங்கு வழிபாடு செய்திருக்கிறாள். எனவே இத்தல இறைவனுக்கு பூமிநாதர் என்ற பெயரும் உண்டு. வரகுணபாண்டியன் என்ற மன்னனுக்காக சிவனும், பார்வதியும் பஞ்சலோகத்தால் ஆன குழம்பை குடித்து சுயம்பு மூர்த்தியாக நடராஜர் சிவகாமி அம்மனாக காட்சி கொடுத்துள்ளனர். மதுரை, உத்திரகோசமங்கை, கோனேரிராஜபுரம் ஆகிய தலங்களிலும் நடராஜருக்கு திருவீதிவுலா கிடையாது.

பிரமாண்டமாக நடமாடும் இத்தல நடராஜருக்கு மனிதருக்கு இருப்பது போன்றே ரோமம், மச்சம், ரேகை, நகம் ஆகியவை அனைத்து அம்சங்களும் இருப்பது சிறப்பம்சமாகும். இப்பகுதி மக்களுக்கு நடராஜர் ஆலயம் என்றால் தான் தெரிகிறது. இங்குள்ள சனிபகவான் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். நளனும் அவனது மனைவி தமயந்தியும் திருநள்ளாறு செல்லும் முன் இத்தலத்தில் வழிபாடு செய்து அனுக்கிரகம் பெற்றுள்ளனர்.

எனவே மற்ற தலங்களில் கருப்பு ஆடை அணிந்திருக்கும் சனி, இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு வெள்ளை எள்ளால் ஆன எண்ணிக்கையில் தீபம் போட வேண்டும். சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. அகத்தியர் வழிபட்ட தலம்.

ஒரு நாள் புரூரவஸ் என்ற மன்னனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. இந்த நோயால் மிகவும் வருந்திய மன்னன், நோய் தீருவதற்காக பல திருத்தலங்கள் சென்று வழிபட்டான். கடைசியில் காவிரி தென்கரையில் உள்ள இத்தலம் வந்து வழிபாடு செய்ததும் அவனுக்கு நோய் தீர்ந்தது. மிகுந்த மகிழ்ச்சியடைந்த மன்னன் கோயிலுக்கு காணிக்கையாக சிவசன்னதி விமானத்தை பொன் தகட்டால் வேய்ந்தான். அத்துடன் வைகாசி விசாக தினத்தில் திருவிழா நடக்கவும் ஏற்பாடு செய்தான் என்பது வரலாறு.