நோயுற்ற கால்நடைகள் குணமாக வழிபட வேண்டிய பெருமாள் கோயில்!

47

நோயுற்ற கால்நடைகள் குணமாக வழிபட வேண்டிய பெருமாள் கோயில்!

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கல்லங்குறிச்சி கிராமம். இந்த ஊரில், ஒன்பது நிலை கோபுரத்துடன் கூடிய பரந்துவிரிந்த ஆலயத்தில் இருந்து கலியுக வரதராஜ பெருமாள் அருள்புரிகிறார். இவ்வாலயம் திருமாலின் வரலாற்றுடன் தொடர்புடைய கோவிலோ, திருமாலின் நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்றோ, பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயமோ அல்ல. திருமாலின் சாதாரண பக்தர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கோவில்.

ஆலயம் உருவான கதை:

சுமார் 300ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த ஆலயம். முன்னொரு காலத்தில் கோபாலன் என்பவர் வாழ்ந்து வந்தார். சீதளவாடி என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தனது தாய்மாமன் ஊரான கடுகூரில் சில காலம் வசித்தார். பின்னர் தனக்காக ஒரு வீடு கட்டிக்கொள்ள விரும்பிய அவர், கடுகூர் அருகே உள்ள மேல்பாடி என்ற ஊரின் தென்பகுதியில் இருந்து காடுகளை வெட்டி, மேடு பள்ளம் திருத்தி தனக்கும், தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கும் வீடுகளைக் கட்டிக் கொண்டதுடன், வேளாண் நிலங்களையும் உருவாக்கி உழுது பயிரிடத் தொடங்கினார். கோபாலன் உருவாக்கிய இவ்வூருக்கு, ‘கோபாலன் குடிக்காடு’ என்று பெயர் ஏற்பட்டது.

தற்போது இது கோப்பிலங்க குடிகாடு என்று அழைக்கப்படுகின்றது. வேளாண் பணி செய்தநேரம் போக மீதி நேரத்தை மாடுகள் வளர்ப்பில் கோபாலன் செலவிட்டார். இதனால் அவரிடம் பெரிய மாட்டு மந்தை உருவானது. கோபாலனுக்குப் பின்னர் மாடுகளை பராமரிக்கும் பொறுப்பை அவரது மகன் மங்கான் ஏற்றுக்கொண்டார். ஒருநாள் மேய்ச்சலுக்குப் போன மாட்டு மந்தையிலிருந்து கருவுற்ற நிறைமாத பசு ஒன்று காணாமல் போகின்றது. பசுவை பல இடங்களிலும் தேடிய மங்கான் சோர்ந்துபோய் தேடும் முயற்சியைக் கைவிடுகிறார்.

மூன்றாம் நாள் இரவு மங்கானின் கனவில் தோன்றிய துறவி ஒருவர், ‘அன்பனே! வருந்தாதே! மேற்குபுறம் உள்ள காட்டில் இரண்டு மைல்களுக்கு அப்பால், ஆலமரத்திற்கும், மகாலிங்க மரத்திற்கும் இடையே பசு நிற்கிறது. காலையில் அங்குச்சென்றால் பசுவைக் காண்பாய்’ என்று கூறி மறைந்தார்.பொழுதுபுலர்ந்ததும் மங்கான் தன் பண்ணையாட்களுடன் அந்த இடத்திற்குச் சென்றார்.

அங்கு காணாமல் போன பசு, தன் கன்றுடன் நின்று கொண்டிருந்தது. பசுவின் அருகில் ஒரு கம்பம் சாய்ந்து கிடந்தது. அதன் மீது பசு பால் சொரிந்திருந்தது. இதைக் கண்டு ஆச்சரியம் கொண்ட மங்கான், பசுவையும், கன்றையும் ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

அன்றிலிருந்து ஏழாவதுநாள் அவர் கனவில் மீண்டும் துறவி தோன்றினார். ‘எண்ணாயிரம் ஆண்டுகள் யோகம் செய்வோர்கூட காணக் கிடைக்காத பெரும்பொருளை அறியாது வந்த பேதையே! பொய்ப்பொருளாம் பசுவை அழைத்துக்கொண்டு, மெய்ப் பொருளாம் என்னைக் கைவிட்டு வந்துவிட்டாயே. என்னே உன் அறியாமை!

உன் முன்னோருக்கும், எனக்கும் உள்ள தொடர்பை அறியவில்லை. சீதளவாடியில் வாழ்ந்து திருமாலை வணங்கிய உன் முன்னோர், அந்தப் பெருமாளுக்குக் கோவில் கட்ட எண்ணி, கற்கம்பம் ஒன்றை கொண்டு வந்தனர். ஆனால் வழியில் வண்டி அச்சு முறிந்ததால், உடைந்த கம்பத்தை அங்கேயே விட்டு வந்து விட்டனர். அந்த கம்பமே நீ கண்டது. கம்பத்தை நிலைநிறுத்தி நாளும் என்னை வணங்கு. கலியுக மக்களை காக்க வந்தவன் நான் என்பதை உணர்ந்து கொள்’ என்று கூறி மறைந்தார்.

விடியற்காலை எழுந்த மங்கான், தான் கனவில் கண்ட காட்சியை ஊர் மக்களிடம் கூறினார். அனைவரும் கற்கம்பம் இருந்த இடத்திற்கு சென்றனர். தூணை தூக்கி நிறுத்தி பாலாபிஷேகம் செய்தனர்.

கலியுக வரதராஜ பெருமாள்:

கற்கம்பத்தையே, கலியுகம் காக்க வந்த இறைவனாக, ‘கலியுக வரதராஜ பெருமாள்’ என்று பெயரிட்டு வழிபடத் தொடங்கினர். 1751-ல் இருந்து கோயில் கட்டும் பணி தொடங்கப்பட்டு பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றது. உற்சவர் சிலைகளையும் செய்து வைக்கப்பட்டன. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் நண்பகலில் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. அன்று முழுநேரமும் கோவில் நடை திறந்திருக்கும்.

ஆலயத்தின் திருவிழா:

சித்திரையில் சித்திரா பவுர்ணமி, அட்சயதிருதியை, வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, விநாயகர் சதுர்த்தி, மாதத்தின் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள், புரட்டாசி நவராத்திரி, விஜயதசமி, சரஸ்வதி பூஜை, திருவோண நட்சத்திரம், தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி, அனுமன் ஜெயந்தி, தைப்பொங்கல், பூசம், மாசியில் மகம் என வருடம் முழுவதும் உற்சவங்கள் நடத்தப்படுகின்றன.

விழா உற்சவ காலங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பெறுவதும், வெள்ளிகருட வாகனத்தில் உற்சவர் உலாவருவதும் நடைமுறையில் உள்ளது. இவையாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல பங்குனி அல்லது சித்திரை மாதத்தில் வரும் ஸ்ரீராமநவமி தொடங்கி பத்து நாட்கள் பிரமோற்சவம் நடக்கிறது.

இதுசமயம் நடத்தப்படும் தேர் மற்றும் தெப்பத் திருவிழாவைக் காணவும், முக்கிய நிகழ்வான ஏகாந்த சேவையைக் காணவும் பல்லாயிரக் கணக்கானோர் இவ்வாலயத்திற்கு வருகை புரிகின்றனர். இந்த பத்து நாளின்போது வெள்ளியாலான சூரியவாகனம், சிம்மவாகனம், கருடவாகனம், நாகவாகனம், யானைவாகனம், குதிரைவாகனம், வெண்ணெய்தாழி, படிச்சட்டம், கண்ணாடி பல்லக்குகளில் சுவாமி புறப்பாடாகிறார். தேரோட்ட வைபவத்தில் பெருமாளும் ஆஞ்சநேயரும் தனித்தனி தேர்களில் பவனி வருகின்றனர்.

தெப்போற்சவம்:

திருக்குளத்தில் தெப்போற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. பிரமோற்சவத்துக்கு அடுத்தப்படியாக புரட்டாசி மாதத்து சனிக்கிழமைகளில் நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் காண ஏராளமானோர் இவ்வாலயத்தில் கூடுகின்றனர். குறிப்பாக புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையின்போது நள்ளிரவில் சுவாமியை தரிசிக்க லட்சக் கணக்கானோர் இங்கு வருகை தருகின்றனர்.

உருவம் இல்லாத மூலவர்:

இவ்வாலயத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் ஆஞ்ச நேயர் தாங்கிபிடித்துக் கொண்டிருப்பது போன்ற அமைப்புள்ள, 12 அடி கம்பத்தூண் மூலவராய் இருப்பதுதான். இதைத்தவிர வேறு சிலைகளோ உருவமோ ஏதும் இல்லை. தாயாருக்கு தனித்த உருவமோ, சன்னிதியோ கிடையாது. பெருமாளுடன் தாயார் இணைந்திருப்பதாக ஐதீகம் நிலவுகின்றது. மூலவர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்க, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் இருந்து தெற்குபார்த்து அருள்பாலிக்கிறார் கலியுக வரதராஜ பெருமாள் என்னும் திருநாமம் கொண்ட உற்சவர். தலவிருட்சம் மகாலிங்க மரம்.

அமைவிடம்:

அரியலூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புரட்டாசி மாதத்து சனிக்கிழமைகள் குறிப்பாக மூன்றாவது சனிக்கிழமை நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைக்காக நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரியலூர் ரயில் நிலையத்தின் அருகில் ஆலயம் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.