நோய்கள் குணமாக அர்த்தாரீஸ்வரர் வழிபாடு!

53

நோய்கள் குணமாக அர்த்தாரீஸ்வரர் வழிபாடு!

திருநெல்வேலி மாவட்டத்தில்  உள்ளதிருத்தலம் வாசு தேவநல்லூர். இங்கு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. சிவன்  பாதி, அம்பாள்பாதியாக  அருள் வழங்கும் சிந்தாமணிநாதர் என்னும் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

மூலவர்: சிந்தாமணிநாதர் (அர்த்தநாரீஸ்வரர்).

அம்மன்: இடபாகவல்லி.

தலவிருட்சம்: புளி.

தீர்த்தம்: கருப்பை நதி.

பழமை: 500-1000 வருடங்களுக்கு முன்.

ஊர்: வாசுதேவநல்லூர்

மாவட்டம்: திருநெல்வேலி

தல வரலாறு:

பிருங்கி என்பவர் சிவம் வேறு, சக்தி வேறு என்ற எண்ணத்தில் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். பார்வதி, சிவனிடம் பிருங்கிக்கு உண்மையை உணர்த்தும் படி சொல்லியும் அவர் கேட்கவில்லை. எனவே அவள், சிவனைப் பிரிந்து பூலோகம் வந்தாள். ஒரு புளிய மரத்தின் அடியில் தவமிருந்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தன்னுள் ஏற்றுக் கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். அர்த்தநாரீஸ்வரரை சிந்தாமணிநாதர் என்று அழைக்கின்றனர்.

இப்பகுதியில் சிவ பக்தியுடையரவிவர்மன் என்ற மன்னன்  ஆண்டு வந்தான். இவனது  மகன் குலசேகரன் தீராத நோயால் அவதிப்பட்டான். மகன் குணமடைய சிவனை வேண்டினான் மன்னன். ஒருநாள் அவனைச் சந்தித்த சிவனடியார் ஒருவர், இத்தலத்து சிவனிடம் வேண்ட நோய் நீங்கும் என்றார். அதன்படி மன்னன் இங்கு வந்து வணங்க, மகனின் நோய் குணமானது. பின்பு மன்னன் அர்த்தநாரீஸ்வரருக்கு பெரிய அளவில் கோவில் கட்டினான்.

தல சிறப்பு:

சுவாமி அமைப்பு: அர்த்தநாரீஸ்வரரின் தலையில் கங்கை இருக்கிறாள். சிவனுக்குரிய வலப்பாகத்தில் சந்திரனும், அம்பாளுக்கு பின்புறம் ஜடையும் உள்ளது. சிவப் பகுதி கரங்களில் சூலம், கபாலமும், காதில் தாடங்கமும் இருக்கிறது.

அம்பாள் பகுதியிலுள்ள கைகளில் பாசம், அங்குசம், பூச்செண்டும், காதில் தோடும் உள்ளன. சுவாமி பகுதி காலில் தண்டம், சதங்கையும், அம்பாள் பகுதி காலில் கொலுசும் இருக்கிறது. சுவாமி பாகத்திற்கு வேஷ்டியும், அம்பாள் பாகத்திற்கு சேலையும் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது. அம்பாள் பகுதியை இடபாக வல்லி என்கின்றனர்.

அன்னாபிஷேக சிறப்பு: பிருங்கி மகரிஷி, இங்கு உற்சவராக இருக்கிறார். ஆனி பிரம்மோற்ஸவத்தின் போது சிவனையும் அம்பாளையும் அருகருகில் வைப்பார்கள். பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வழிபடும் வகையில் பாவனை செய்வார்கள்.

புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள நதியில் நீராடி அம்பிகையை வழிபட கரு உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே இந்த நதி, கருப்பை ஆறு (கருப்பாநதி) என்று அழைக்கப்படுகிறது.

புளிய மரங்கள் நிறைந்த வனத்தில் சிவன் காட்சி தருவதால், சிந்தாமணிநாதர் என்று அழைக்கப்படுகிறார். புளிய மரத்திற்கு  சிந்தை மரம் என்றும் பெயர் உண்டு. இத்தலத்தின் விருட்சமும் புளியமரம் ஆகும். இம்மரத்தின் பழங்கள் இனிப்பு, புளிப்பு என இரட்டைச் சுவையுடன் இருப்பது சிறப்பம்சம். பிரிந்திருக்கும் தம்பதியர்  இங்கு வேண்டிக் கொள்ள மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.

இங்கு மூலவர் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகிறார். இங்குள்ள புளிய மரத்தின் பழங்கள் இனிப்பு, புளிப்பு  என இரட்டைச் சுவையுடன் இருப்பது சிறப்பம்சம்.

பிரார்த்தனை:

பிரச்சனையால் பிரிந்திருக்கும் தம்பதியர், அர்த்தநாரீஸ்வரரிடம் வேண்டிக் கொள்ள மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.