நோய்கள் நீங்க செய்யும் பெருமாள் அபிஷேக தீர்த்தம்!

67

நோய்கள் நீங்க செய்யும் பெருமாள் அபிஷேக தீர்த்தம்!

விருநகர் மாவட்டம் காரிசேரி என்ற ஊரில் உள்ள கோயில் அருள்மிகு லட்சுமி நாராயணர் கோயில். இந்தக் கோயிலில் லட்சுமி நாராயணர் மூலவராகவும், லட்சுமி அம்மன் தாயாரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி ஏகாதசி நாளில் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது.

மூலவரது சிலையானது நவபாஷாண சிலை என்பது சிறப்பம்சம். மிகச்சிறிய கோயிலாக இருந்தாலும், நவபாஷாணத்தில் பெருமாள் சிலையை பார்ப்பது அரிது என்பதாலும், கீர்த்தி பெரிது என்பதாலும் சனிக்கிழமையில் மக்கள் வந்து செல்கின்றனர். மார்கழி திருவோண நட்சத்திர நாளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. சனிக்கிழமைகளில் நவக்கிரக தோஷ பரிகாரத்திற்கு யாகம் நடத்துகின்றனர்.

பொதுவாக விரதம் இருப்பவர்கள் ஒரு வாரம், ஒரு மண்டலம் என்று குறிப்பிட்ட நாட்கள் விரதமிருந்து சுவாமியை வழிபடுகின்றனர். ஆனால், இங்கு மார்கழி மாதத்தில், திருவோண நட்சத்திரத்திற்கு முன்பு 28 நாட்கள் விரதமிருந்து பின்பு லட்சுமி நாராயணரை வணங்குகிறார்கள். அப்படி செய்வதன் மூலமாக கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை அருந்துவதால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து துளசி அர்ச்சனை செய்கின்றனர்.

பெருமாள் 4 கரங்களுடன் வலது காலை மடித்து லட்சுமி தாயாரை மடியில் வைத்து அணைத்த கோலத்தில் காட்சி தருகிறார். பிரகார தெய்வங்கள் இல்லை. முன்னோரு காலத்தில் வத்திராயிருப்பு அருகிலுள்ள சதுரகிரி மலை மகாலிங்க சுவாமி கோயிலில் சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்கள், நவபாஷாணத்தில் லட்சுமி நாராயணர் சிலை செய்து வழிபட்டு வந்தனர்.

அப்போது, வெள்ளப்பெருக்கு ஏற்படவே சிலையானது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காரிசேரி பகுதியில் கரை ஒதுங்கியது. சிலையை எடுத்த மக்கள், இந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.