படிப்பறிவு இல்லாதவர்கள் வழிபட வேண்டிய கோயில்!

168

படிப்பறிவு இல்லாதவர்கள் வழிபட வேண்டிய கோயில்!

தஞ்சாவூர் மாவட்டம் இன்னம்பூர் என்ற பகுதியில் அமைந்துள்ளது எழுத்தறிநாதர் கோயில். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரை தலங்களில் அமைந்துள்ள 45ஆவது சிவ தலமாகும். இது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம்.

துர்வாசரின் சாபம் பெற்ற ஐராவதம் காட்டு யானையாகி இத்தல இறைவனை வணங்கி சாபம் நீங்கப்பெற்றது. யானை வரும் வகையில் பெரிய கர்ப்ப கிரகம் இங்கு மட்டுமே உள்ளது. இங்குள்ள விமானம் கஜப்ருஷ்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஐராவத யானையால் உருவாக்கப்பட்ட ஐராவதத்தீர்த்தம் கோயிலுக்கு எதிரில் உள்ளது.

அகத்திய முனிவர் இங்கு வழிபட்டு இலக்கணங்களை கற்றார். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு, பேனா, பென்சில், நோட்டு, புத்தகம் ஆகியவற்றை இறைவனிடம் வைத்து வணங்கிவிட்டு எடுத்துச் செல்வதுண்டு.

பேச்சுத்திறமை இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால், புத்திச்சாலியாக வருவார்கள் என்பது நம்பிக்கை. 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு செம்பருத்தி பூவை தட்டில் பரப்பி வைத்து அதில் எழுதுவதற்கு எழுத பயிற்சி கொடுக்கப்படுகிறது. குழந்தை இல்லாத தம்பதியினர் இந்த கோயிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்து வழிபட குழந்தை பாக்கியம் உண்டாகும்.

பிரார்த்தனை நிறைவேறியதும், சாமிக்கு வஸ்திரங்கள் சாற்றி அபிஷேகங்கள் செய்யலாம். அம்பாளுக்கு திருமாங்கல்ய பூஜை செய்யலாம்.

சரிவர பேச்சு வராத குழந்தைகள், பேசத் தயங்கும் குழந்தைகள், படிப்பு வராத குழந்தைகள் இந்தக் கோயிலில் அர்ச்சனை செய்தால் நன்மை உண்டாகும். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னதாக இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வது கல்வியில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். இந்தக் கோயிலில் அம்பாள், திருமணக் கோலத்தில் காட்சி தருகிறாள். இவளை நித்தியகல்யாணி என்று அழைக்கின்றனர். திருமணமாகாத பெண்கள் இந்த நித்தியகல்யாணி அம்மனை வழிபட்டு வர நல்ல கணவன் அமையப் பெறலாம் என்பது ஐதீகம். மற்றொரு அம்பாள் சுகந்த குந்தல அம்பாள். திருமணத்தில் விருப்பம் இல்லாத பெண்கள் தவக்கோலத்தில் காட்சி தரும் சுகந்த குந்தல அம்பாளை வணங்கி வழிபட்டு வரலாம்.

இன்னன் என்றால் சூரியன் என்று பொருள். இன்னன் நம்பூர் என்பது தற்போது இன்னம்பூர் என்று மாறியது. ஆவணி மாதம் 31, புரட்டாசி 1, 2, பங்குனி மாதம் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சூரிய ஒளியானது சாமி மீது விழுகிறது. இதனை சூரிய பூஜை என்கின்றனர். சூரியன் இந்தக் கோயிலில் வழிபட்டு அதிக ஒளியை பெற்றார். ஆதலால், இனன் என்ற பெயருண்டு. சிவபெருமானை சூரியன் நம்பி வழிபட்டதால் இனன் நம்பு ஊர் என்று பெயர் ஏற்பட்டு நாளடைவில் இன்னம்பூர் என்றானது.

இந்தப் பகுதியை சோழமன்னன் ஆண்டு வந்தார். இந்தக் கோயிலின் வரவு செலவு கணக்குகளை சுதன்மன் என்ற ஆதி சைவர் ஒருவர் கவனித்து வந்தார். மேலும், கோயிலின் கணக்கு வழக்குகளை மன்னனிடம் ஒப்படைத்து வந்தார். ஒரு கட்டத்தில் சுதன்மன் மீது மன்னனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. நேர்மையான தன் மீது இப்படியொரு பழி வந்துவிட்டதே என்று வருத்தமடைந்த சுதன்மன், இந்தக் கோயிலின் இறைவன் சிவபெருமானிடம் முறையிட்டார்.

மறுநாள், இறைவன் சிவபெருமானே சுதன்மன் வடிவில் தோன்றி மன்னனிடம் சென்று முறையான கணக்குகள் குறித்து விளக்கமளித்தார். சுதன்மன் கனவில் தோன்றிய இறைவன் மன்னனிடம் கணக்குகளை சொல்லிவிட்டதாக கூறினார். இதனால், மனமகிழ்ந்த சுதன்மன், நேராக மன்னனை சந்திக்க சென்றார். மேலும், இறைவன் தனது கனவில் வந்து கணக்குகளை ஒப்படைத்துவிட்டதாக கூறிவிட்டு சென்றதாக மன்னனிடம் கூறினான் சுதன்மன்.

இதனால், வருத்தப்பட்ட மன்னன், சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டார். அதோடு, சிவபெருமானுக்கு கோயில் எழுப்பினார். சிவனுக்கு எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. அட்சரம் என்றால் எழுத்து என்று பொருள். இங்குள்ள லிங்கம் சுயம்புவாக தோன்றியதால், தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.