பணக்கஷ்டம் தீர வழிபட வேண்டிய கோயில்!

146

பணக்கஷ்டம் தீர வழிபட வேண்டிய கோயில்!

வேலூர் மாவட்டம் சிங்கிரி கோயில் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில். கிபி 1337 முதல் 1363 ஆம் ஆண்டு வரை ஆட்சிபுரிந்த முதலாம் சம்புவராய மன்னர் இராச நாராயணன் என்பவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளதாக கிபி 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, கிபி 1426ஆம் ஆண்டு விஜயநகர மன்னரின் கல்வெட்டில் இந்த ஊரானது ஓபிளம் என்றும், இந்த பெருமாளை சிங்கப் பெருமாள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். நாளடைவில் சிங்கிரி கோயில் என்று அழைக்கப்பட்டுள்ளது.

வரலாறு:

பல்லவராயர் காலத்தில் ராஜவர்மனின் கனவில் வந்து தனக்கு கோயில் கட்டும்படி பெருமாள் கூறியுள்ளார். இதையடுத்து, பெருமாள் கூறியதைப் போன்று ராஜவர்மனும் பெருமாளுக்கு கோயில் கட்டினார். மலைமேல் இருக்கும் நரசிம்மரின் ராஜகோபுரமானது கோயிலுக்கு பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலானது மலைகள் சூழ்ந்த பகுதியில் 80 அடி உயரமும் 100 படிகள் கொண்ட மலையின் உச்சியில் அமைந்துள்ளது.

முதலில் 50 படிகள் ஏறியவுடன் பால ஆஞ்சநேயர் தரிசனம் கிடைக்கும். உயரே சென்றால், மலை உச்சியில் கோயில் கருவறையில் 4 அடி உயர ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 4 திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். அதில். மேல் இரு திருக்கைகளில் சங்கு சக்கரமும், இடது கையை தனது மடியின் மீது வைத்தும், வலது கையால், தனது வலது திருமடியில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி தாயாரை தழுவிய வண்ணம் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

கருவறைக்கு எதிரில் கருடன் காட்சியளிக்கிறார். இந்தக் கோயில் பெருமாள் அவுபள நாயனார் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக பெருமாளின் இடது மடியில் தான் மகாலட்சுமி தாயார் வீற்றிருப்பார். ஆனால், இந்தக் கோயிலில் பெருமாளின் வலது திருமடியில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது சிறப்பம்சமாகும்.

இந்தக் கோயிலில் தமிழ் விழாக்கள், பண்டிகைகள், ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி ரதசப்தமி, வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதி சுவாதி நட்சத்திரத்தன்று ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயிலில் திருமஞ்சனம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கிரி கோயில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்தால் வேண்டிய வரன் கிடைக்கும். மனக் கஷ்டம் தீரும், மேலும் பணக்கஷ்டமும் தீரும் என்பது ஐதீகம்.