பணப்பிரச்சனை தீர்ந்து திருமணம் நடக்க வழிபட வேண்டிய கோயில்!

97

பணப்பிரச்சனை தீர்ந்து திருமணம் நடக்க வழிபட வேண்டிய கோயில்!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி என்ற ஊருக்கு அருகில் உள்ளது சிவபுரிப்பட்டி என்ற கிராமம். பெயரிலேயே சிவனின் நாமத்தைக் கொண்டுள்ள அற்புதமான கிராமம். இந்தக் கிராமத்தில் சுயம்பிரகாசேசுவரர் கோயில் கொண்டுள்ளார். உடன், தர்மசம்வர்த்தினி அம்பிகையும் வீற்றிருக்கிறாள்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில். இந்தக் கோயிலை சோழன் முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டது என்று கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது. முக்கிய துறைமுகங்களாக திகழ்ந்த தொண்டி மற்றும் முசிறியை இணைக்கும் பாதையில் அமைந்த கோயில் இது.

சோழ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் இந்தக் கோயிலை பராமரித்து வந்துள்ளனர். கல்வெட்டுகளின்படி இந்த ஊரானது நிருபசேகர சதுர்வேதி மங்கலம் என்றும் சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

இந்த கோயிலில் சிவபெருமான் தென்புறமும், அம்பாள் வடபுறமும் எழுந்தருளியிருக்கின்றனர். ஐந்தரை அடி உயரத்துடன் கூடிய நந்தி பகவானும் இங்கு அருள் பாலிக்கிறார். தல விருட்சமாக வன்னி மரம் அமைந்துள்ளது.

சிவதுர்கை மற்றும் விஷ்ணு துர்கை ஆகியோரது சந்நிதியும் அமைந்துள்ளது. தோஷங்கள், தடைகள், பொருளாதார பிரச்சனை  காரணமாக திருமணம் தடைபட்டு வரும் பக்தர்கள், இங்குள்ள சிவ துர்கையை மனமுருகி வழிபட்டு வந்தால் தோஷங்கள், தடைகள், பொருளாதார பிரச்சனை அனைத்தும் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

மேலும், இந்தக் கோயிலில் விநாயகர், சண்டிகேஸ்வரர், கால பைரவர், வடுக பைரவர், யோக நரசிம்மர், சரபேஸ்வரர், நாகர், சப்த கன்னியர் ஆகியோர் தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர். சிவனுக்குரிய நாட்களில் இந்தக் கோயிலுக்கு வந்து தீபங்கள் ஏற்றி வைத்து, சுயம்பிரகாசேசுவரர் மற்றும் தர்மசம்வர்த்தினியை வழிபட திருமணத் தடை, கடன், சொத்து முதலான பிரச்சனைகளும் தீரும் என்பது நம்பிக்கை.