பயம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

34

பயம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

திருப்பூர் மாவட்டம் திருப்பூரில் உள்ள கோயில் சக்தி விநாயகர் கோயில். இந்தக் கோயிலில் சக்தி விநாயகர் மூலவராக காட்சி தருகிறார். சித்திரைக்கனி, சங்கடஹர சதுர்த்தி, ஆயுதபூஜை, ஆடி பெருக்கு, நவராத்திரி மற்றும் புத்தாண்டு நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் சனிப்பெயர்ச்சி அன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

நாமக்கல், பழநிக்கு அடுத்தபடியாக அம்மன் மடியில் விநாயகர் காட்சி தருவது சிறப்பு. தமிழ்நாட்டில் 3ஆவது இடம் இங்கு தான், லிங்கோத்பவருக்கு எதிரே வில்வம் அமையப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கிழக்கு பார்த்து அம்மன் சிலை உள்ளது. அம்மனுக்கு வலது புறம் தட்சிணாமூர்த்தி, இடது புறம் துர்க்கை, பின்புறம் லிங்கோத்பவர் அவருக்கு எதிரே தல விருட்சமான வில்வ மரம் உள்ளது.

ஈசான மூலையில் நவக்கிரகம் உள்ளது. கன்னி மூல கணபதி, சுப்ரமணியருக்கு தனி சன்னதி உள்ளது. திருமணம் நடக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், தொழில் சிறந்து விளங்கவும், பயம் நீங்கவும் இந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர். தங்களது வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சோடஷதிரவியங்களால் அபிஷேகம் செய்தும், தேங்காய் உடைத்தும், பட்டுப்புடவை சாற்றியும், திருமாங்கல்யம் அளித்தும் தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் என்பதால் திருப்போர் என்றானது. கோயில் அமைந்துள்ள இடம் தியாகி குமரன் காலனி. திருப்பூரில் 40 ஆண்டுகளுக்கு முன் தனலட்சுமி மில் செயல்பட்டு வந்தது. இங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் குடியிருக்க 1972ல் வீட்டு மனைகள் கட்டப்பட்டன. திருப்பூர் குமரன் நினைவாக தியாகி குமரன் காலனி என்று பெயரிடப்பட்டது. நாளடைவில் குமரன் காலனி என்றாகிவிட்டது.

கோயிலுக்கு பின்புறம் நந்தவனம் அமைந்துள்ளது. அங்கே கருநாக (சர்ப்பம்) பாம்பு உள்ளது. பக்தர்கள் அம்மனின் சக்தி வடிவமாக கருதுகின்றனர். கடந்த 1971 ஆம் ஆண்டு விநாயகர் கோயில் அமைந்தது. கோயில் கட்ட வந்த ஸ்தபதி வித்தியாசமாக சிலை செய்து வைத்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார். கோயில் நிர்வாகிகள் தந்தரகிரி மலையிலுள்ள சாம்பசிவ அய்யர் என்பவரிடம் குறி கேட்டுள்ளனர்.

அவர், சக்தியின் மடியில் விநாயகர் வைத்து மிகவும் சிறப்பானது என்று கூறியிருக்கிறார். சந்தேகம் காரணமாக 3 முறை குறி கேட்டும் ஒரே பதில் தான் வந்துள்ளது. இதையடுத்து, கடந்த 2000 ஆம் ஆண்டில் கோயிலை விரிவாக கட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.