பலிபீடத்தை வழிபடுவதினால் ஏற்படும் நன்மைகள்!

115

பலிபீடத்தை வழிபடுவதினால் ஏற்படும் நன்மைகள்!

பலிபீடத்தை தொட்டு வணங்கினால் தோஷம் பிடிக்கும்.

ஒவ்வொரு கோயில்களிலும் கொடி மரத்திற்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்திருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் நாம் பலி பீடத்தை வழிபட வேண்டும்.

பலிபீடம் என்றால் என்ன?

பலிபீடம் என்றதும், பெரும்பாலானோர் கோழி, ஆடு ஆகியவற்றை பலி கொடுக்கும் இடம் என்று எண்ணுகிறார்கள். விலங்குகளை பலியிடும் மேடையாகவும், வேள்வித்தூணாகவும் இருந்தவை தான் நாளடைவில் பலிபீடமாகவும், கொடி மரமாகவும் வடிவெடுத்துள்ளன என்று நம் முன்னோர்கள் சொல்கிறார்கள். ஆகையால் தான் பலி கொடுக்கும் இடம் பலிபீடம் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

ஆனால், ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ள சிவன் கோயில்களிலும், வைணவ கோயில்களிலும் உள்ள பலிபீடங்கள் நம் வாழ்வை மேம்படுத்தும் ஒன்று என்று கருதப்படுகிறது. இது போன்ற கோயில்களில் பலிபீடங்களில் உயிர்கள் பலி கொடுப்பதில்லை. மனிதர்களாக பிறந்த ஒவ்வொருக்கும் ஆழ்மனதில் சில கெட்ட குணங்கள் இருக்கத்தான் செய்யும். எவ்வளவு பக்குவப்பட்டவராக இருந்தாலும் சரி, அவருக்குள்ளும் போட்டி, பொறாமை, கோபம், சூது, வாது, காமம், குரோதம் போன்ற குணங்களில் ஏதாவது ஒன்று இருக்கத்தான் செய்யும்.

இப்படி கெட்ட குணத்துடன் கோயில் கருவறைக்குள் நாம் சென்றால் கடவுளின் அருள் எப்படி கிடைக்கும். நம் மனது எந்தவித ஆசாபாசமின்றி தெள்ளத்தெளிவாக ஒன்றுமே இல்லாமல் வெற்று இடம் போன்று இருந்தால் தான் இறைவனின் அருள் கிடைக்கும். நல்ல எண்ணம், தூய சிந்தனை, மற்றவர்களுக்கு உதவும் குணம் உள்ளவர்களுக்கு தான் கடவுள் அருள் புரிவார்.

ஆகையால், நமது மனதில் உள்ள தீய குணங்களை கெட்ட நினைவுகளை பலி கொடுக்க வேண்டும். இது கோயிலுக்கு சென்று வழிபடும் போது மிகவும் முக்கியமானது. மனதிலுள்ள தீய குணங்களை அழிக்கும் போது நல்ல மனிதனாக மாறி விடுவோம்… ஒவ்வொருவரையும் நல்ல மனிதராக மாற்றும் ஒரு அற்புதமான இடம் தான் இந்த பலிபீடம்.

பலிபீடத்தை அமைக்கும் விதிகள்:

 1. எப்போதும், கோயில் மூலவரின் பீடத்தின் உயரமும், பலிபீடத்தின் உயரமும் சமமாக இருக்க வேண்டும்.
 2. பலி பீடத்தில் பாதுகா, சுபோதம், அசுரபத்தி, பத்மம், குமுத பத்திகம், கலா கம்பம், ஜகதி, குமுதம், நிதிரவம் என்று பல வகைகள் உள்ளன.
 3. பலிபீடத்தை பத்ரலிங்கம் என்றும் அழைப்பார்கள். பலிபீடத்திற்கு அருகிலிருக்கும் நந்தி எனும் ஆன்மாவில் உள்ள ஆணவமலம் பலிபீடத்தில் தான் ஒதுங்கியிருக்கும்.
 4. பலிபீடம் அருகில் சென்றவுடன் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மும்மலங்களை பலியிடுதல் வேண்டும்.
 5. நான் என்ற அகங்காரத்தை பலியிட வேண்டும்.
 6. பலிபீடம் அருகில் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.
 7. ஆலயத்தின் கருவறை வடக்கு, மேற்கு திசையை நோக்கி இருந்தால், பலி பீடத்தின் இடது பக்கத்திலும், கருவறை கிழக்கு, தெற்கு நோக்கி இருந்தால் பலி பீடத்தின் வலது பக்கத்திலும் நின்று வணங்க வேண்டும்.
 8. எப்போதும் மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் போது அல்லது நைவேத்தியம் படைக்கும் போது பலிபீடத்தை வழிபட கூடாது.
 9. பலிபீடத்தை 3, 5, 7, 9, 12 என்ற எண்ணிக்கையில் வணங்க வேண்டும்.
 10. பலிபீடத்தை பலி நாதர் என்றும் சொல்வார்கள்.
 11. பலிபீடத்துக்கு மாயச் சக்கரம் என்ற ஒரு பெயரும் உண்டு. அதாவது நமது பிறப்பு – இறப்பு எனும் மாயச் சக்கரமாக பலிபீடத்தை கருதுகிறார்கள்.

சில கோயில்களில் பலிபீடத்தின் அடியில் பக்தர்கள் வேண்டுதலாக உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை போட்டுச் செல்வார்கள். உப்பாகிய உடம்பையும், மிளாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்துவிட்டேன் என்பதைத் தான் இது காட்டுகிறது.

பலிபீடத்தை வழிபடுவதினால் ஏற்படும் நன்மைகள்:

ஆதலால் பலிபீடங்களையும் வழிபட வேண்டும். பலிபீடத்தை வழிபடுவதால் காம எண்ணங்கள் நீங்கும். ஆசா பாசங்கள் நீங்கும். கோபம் குறையும். தீராத பற்றும் நீங்கும். பேராசை குணம் அடியோடு அழியும். வஞ்சக குணம் வராது. தாழ்வு மனப்பான்மை விலகும். பலிபீடம் – மனிதனை முழு மனிதனாக மாற்றுகிறது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

கோயில்களில் கொடிமரத்திற்கும் – கோபுர வாசலுக்கும் இடையிலுள்ள பலிபீடத்தில் நித்ய பூஜையின் முடிவில் கோயிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும் அன்னம் வைப்பார்கள்.

இதனை தெய்வங்கள் சாப்பிட்டு செல்வதாக ஒரு ஐதீகம். பலிபீடத்தின் போது அதனை தொட்டுச் செல்வதோ அல்லது உரசிச் செல்வதோ கூடாது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், பலிபீடமானது நம் மீது பட்டு விட்டாலே ஒருமுறையாவது குளிக்க வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.