பாத ரட்சையுடன் காட்சி தரும் முருகன்!

112

பாத ரட்சையுடன் காட்சி தரும் முருகன்!

சென்னை வடபழநியில் உள்ளது முருகன் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக வடபழநி ஆண்டவர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அம்மன், வள்ளி, தெய்வானை. பாத ரட்சையுடன் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

வடபழநி முருகன் கோயில் தோன்றுவதற்கு மூல காரணமாக இருந்தவர் அண்ணாசாமி தம்பிரான். தனது நாக்கை அறுத்து திருத்தனி முருகப் பெருமானுக்கு காணிக்கையாக செலுத்தியவர். இந்த முறைக்கு (நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் முறை) பாவாடம் என்று பெயர்.

இவர், தனது வீட்டை சிறிய கீற்றுக் கொட்டகை (ஓலவீடு, குடிசை வீடு என்பது போன்று) அமைத்து, அதில் குறி சொல்லும் மேடை உருவாக்கி பழநியிலிருந்து வாங்கி வந்த பழநி ஆண்டவர் படத்தை அங்கு வைத்து தினமும் பூஜை செய்தார். அண்ணாசாமி தம்பிரான் பூஜை செய்த பழநி ஆண்டவர் படம் இன்னமும் கோயில் சன்னதியின் உட்பிரகாரத்தில் உள்ள வடக்கு மண்டபத்தில் இருக்கிறது.

அண்ணாசாமி தம்பிரானின் தொண்டரான இரத்தினசாமி தம்பிரானும், இறைவனுக்கு தனது நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தியிருக்கிறார். அண்ணாசாமிக்குப் பிறகு இரத்தினசாமி காலத்தில் பழநி ஆண்டவர் படம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் முருகனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. குறி சொல்லி வந்த மேடையை வடபழநி ஆண்டவர் கோயில் என்று அழைக்கச் செய்தார்.

இவர்களது வரிசையில், பாக்யலிங்க தம்பிரானும் இணைந்தார். எப்படி என்றால், இறைவனுக்காக தனது நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தியுள்ளார். வடபழநி முருகன் கோயிலில் கர்ப்ப கிரகம், உட்பிரகாரத் திருச்சுற்றும் கருங்கல் திருப்பணி ஆகியவற்றை இவர் செய்தார். பாயலிங்க தம்பிரான் காலத்தில் தான் வடபழநி முருகன் கோயில் புகழ் பெற்று விளங்கியது.

அண்ணாசாமி தம்பிரான், இரத்தினசாமி தம்பிரான் மற்றும் பாக்யலிங்க தம்பிரான் ஆகியோரது சமாதிகள் வடபழநி முருகன் கோயிலுக்கு வடமேற்கில் 1 பர்லாங்கு (1 மைல் = 8 பர்லாங்கு) தொலைவில் இருக்கிறது. தற்போது கோயிலின் தென்கிழக்கு பகுதியில் குறி சொல்லும் மேடை அமைக்கப்பட்டிருந்த இடம் இருக்கிறது.

அண்ணாசாமி தம்பிரான், இரத்தினசாமி தம்பிரான் மற்றும் பாக்யலிங்க தம்பிரான் ஆகியோருக்கு நெற்குன்றம் பாதையில் தனியாக கோயிலும் அமைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் மாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. குருபூஜையும் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த கோயிலில் முருகப் பெருமான் பாத ரட்சையுடன் (காலணிகள்) காட்சியளிக்கிறார். இந்தக் கோயிலில் அங்காரகன் சன்னதி தனியாக இருப்பது கூடுதல் சிறப்பம்சம். முருகனுக்கு தங்க தேரும் இருக்கிறது. அங்காரகன் முருகப் பெருமானுக்கு பிடித்தவர்.

பழநி முருகன் கோயிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் வடபழநி முருகன் கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வழிபடுவது சிறப்பு. முருகப் பெருமான் தனது வலது காலை முன் வைத்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இந்த கோயிலில் முக்கிய நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்தப்படுகிறது. இது தவிர, வேல் காணிக்கை, பணம் ஆகியவையும் இருக்கிறது. பால் அபிஷேகம், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றால் முருகப் பெருமானுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுகிறது.

வடபழநி முருகனை வணங்கி வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். புதிய தொழில் தொடங்க, வியாபாரம் விருத்தியடைய வடபழநி முருகப் பெருமானை வழிபடலாம். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வடபழநி முருகனை வழிபாடு செய்யலாம்.

தமிழ் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, வைகாசி விசாகம், நவராத்திரி, மாசி மகம், கந்த சஷ்டி, பங்குனி உத்தரம், கிருத்திகை ஆகிய நாட்களில் வடபழநி முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.