பாம்பும், மயிலும் வழிபட்ட கோயில்!

153

பாம்பும், மயிலும் வழிபட்ட கோயில்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி என்ற ஊரில் உள்ள கோயில் அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோயில். இந்தக் கோயிலில் வெற்றிவேல் முருகன் மூலவராக காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகியவை இந்தக் கோயிலின் முக்கிய விழாக்கள் ஆகும்.

தைப்பூச திருவிழாவானது 11 நாட்கள் கொடியேற்றத்துடன் மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் திருவிழாவாகும். தினசரி சிறப்பு அலங்கார ஆராதனைகளுடன் சுவாமி புறப்பாடு நடைபெறும். காவடி, பால் குடங்கள் சுமந்து வந்து பக்தர்கள் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்கின்றனர். ஒன்பதாம் நாள் நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியும், பத்தாவது நாள் நடைபெறும் தேரோட்ட விழாவும் தைப்பூச திருவிழாவின் முக்கிய திருவிழாவாகும்.

மூலவரது இடது பாதத்தில் மயில் பீலி (மயில் தோகை) இருப்பது அபூர்வமாக கருதப்படுகிறது. கோயில் பிரகாரத்தில் ஆதி விநாயகர், சொர்ணபுரீஸ்வரர், சொர்ணாம்பிகை, பைரவர், சண்டிகேஸ்வரர், நாகர் தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர். தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகிய மூவரும் கோஷ்டத்தில் வீற்றியிருக்கின்றனர்.

முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமையில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கால் நடைகளை இந்த மயில் தோகையால் தடவி பூஜித்த திருநீறு பூச விரைவில் உடல் நலம் சரியாகும் என்று சொல்லப்படுகிறது. கோர்ட் வழக்குகள், குடும்ப பிரச்சனைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சத்ரு சம்ஹார திரிசதி பூஜை அர்ச்சனை செய்தால் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்பது ஐதீகம்.

கடந்த காலகட்டத்தில் அதிக மன உளைச்சலையும், கஷ்டத்தையும் சந்தித்து வந்த தனுசு ராசிக்காரர்கள் இந்தக் கோயிலில் வழிபாடு செய்தால் அவர்கள் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும். மேலும், விவாகரத்து வழக்கு நடந்து வந்தால் இந்தக் கோயிலில் வழிபாடு செய்யலாம். உடனடியாக தீர்ப்பு சாதகமாக வரும்.

செவ்வாய் மற்றும் நாகதோஷம் உள்ளவர்களுக்கு இந்தக் கோயில் சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. கிருத்திகை, பௌர்ணமி, சண்டி, பிரதோஷம் ஆகிய நாட்கள் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. சனி பிரதோஷ நாளின் போது 108 சங்காபிஷேகத்துடன் மகாந்யாஸ பாராயணமும் ருத்ர ஹோமும் சிறப்பாக செய்யப்படுகிறது.

இத்தலம் சோமாஸ் கந்த சொரூபத்தில் அமைந்துள்ளது மட்டுமல்லாமல் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. பொதுவாக முருக தண்டாயுதத்துடன் இருப்பது போன்று தான் சிலை வடிக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தக் கோயிலில் முருகப் பெருமான் வேலுடன் இருப்பது போன்று சிலை வடிக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

வேல் என்பது ஞானம். ஞானமாகிய வேல் எல்லாவற்றையும் வெல்கின்றது. அதுவே வெற்றிவேல், வீரவேலாக திகழ்கிறது. அந்த வேலை தாங்கிய வெற்றிவேல் முருகனை வணங்கி வழிபடுவோருக்கு ஞானம் பெருகும். வினைகள் தீரும். இதைத்தான் வேலுண்டு வினையில்லை என்று சொல்வார்கள்.

ஞான பண்டிதனாகிய முருகப் பெருமானை வேலை விடாமல் தாங்கியுள்ளார். ஞான சக்தியாக விளங்குவதால் இத்தலம் சக்தி மலை என்று பெயர் பெற்றது. இங்கு துதித்து தியானிப்பவர்களுக்கு மனத் தெளிவு பிறக்கிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் இந்தக் கோயிலுக்கு வந்து முருகப் பெருமானை வேண்டி தியானத்தில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் மன அமைதி பெற்று படிப்பில் அதிக கவனம் செலுத்துவதாக சொல்லப்படுகிறது.

ஒருமுறை வாரியர் சுவாமிகள் இந்தக் கோயிலுக்கு வருகை தந்தார். அப்போது கருவறையில் முருகன் சிலை மட்டுமே இருந்தது. வேறு மண்டபங்களோ அல்லது வேறு சிலைகளோ என்று எதுவும் இல்லை. எப்போதெல்லாம் வாரியர் சுவாமிகள் வெளியூர் செல்கிறாரோ அப்போதெல்லாம் தன்னுடன் முருகன் சிலையை ஒரு பெட்டியில் வைத்து எடுத்துச் செல்வார். அவர், தங்கும் இடங்களில் எல்லாம் முருகனுக்கு பூஜை, அபிஷேகம், ஆராதனைகள் செய்வது வழக்கம்.

அப்போது தான் முருகப் பெருமானை இந்தக் கோயிலில் வைத்து பூஜித்து வழிபட்டார். வெற்றிவேல் முருகன் வாரியர் சுவாமிகளை ஆட்கொண்டார். கண்டிப்பாக இந்தக் கோயில் பெரிய கோயிலாக மாறும் என்றும், தங்கத்தேர் ஓடும் அளவிற்கு பிரபலமாகும் என்றும் வாழ்த்தினார். அவர் கூறியபடியே இன்று தைப்பூச திருநாளின் போது மரத்திலான தேர் ஓடுகிறது.

திட்டமலைக்கு தென்கிழக்குப் பகுதியில் கெட்டிச் செலியூர் வழியில் 5 கிமீ தொலைவில் இருந்த ஓர் உயர்ந்த குன்று கோத்தகிரி. அந்த குன்றில் அடர்த்தியான செழிப்பான மரங்கள் வளர்ந்திருந்தன. அதில், ஒரு மரத்தடியின் கீழ் சுயம்பு மூர்த்தம் ஒன்று இருந்தது. அந்த சுயம்பு மூர்த்தத்தை தினந்தோறும் நாகம் மற்றும் மயில் இரண்டும் வந்து பூஜிப்பதை மாடு மேய்ப்பவர்களும், காய்ந்த இலைகளை சேகரிப்பவர்களும் கண்டுள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் 6 மாதம் நடந்துள்ளது. இது குறித்து ஊர் மக்களிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களை சிறுவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு கூட்டிச் சென்றனர். சுயம்பு மூர்த்தத்திற்கு நாகம் மற்றும் மயில் இரண்டும் பூஜிப்பதை ஊர் மக்கள் கண் குளிர கண்டு ரசித்துள்ளனர். மேலும், நாகமும், மயிலும் பூஜித்ததால் அந்த சுயம்பு மூர்த்தம் நிச்சயமாக முருகப் பெருமானாக இருக்கும் என்றும் அவர்கள் கருதினர். அதை உறுதி செய்து, அந்த இட த்தில் முருகப் பெருமானுக்கு கோயில் கட்ட முடிவு செய்தனர். அதன்படியே கோயிலையும் கட்டி, கற்சிலைக்கு ஏற்பாடு செய்தனர். நாளடைவில் சுயம்பு மூர்த்தத்திற்கு பின்னால் கற்சிலையை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகமும் செய்தனர்.

பக்தர்களின் வருகையைத் தொடர்ந்து அர்த்த மண்டபம், மகாமண்டபம், பிற சன்னதிகள் கட்டப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.