பாரதம் சொல்லும் கதைகள் – ஒரு அரசன் எவ்வாறு நாட்டை ஆள வேண்டும் ?

8

பாரதம் சொல்லும் கதைகள் – ஒரு அரசன் எவ்வாறு நாட்டை ஆள வேண்டும் ?

மஹாபாரத போருக்கு பின் , தருமர் அஸ்தினாபுரத்தை அமைதியான முறையில் ஆண்டு வந்தார் . ஒரு முறை அவரை பார்க்க கண்ணபிரான் வருகை தந்தார் . அந்த அதிகாலை பொழுதில் , தருமர் ஏழைகளுக்கு தான தருமம் செய்து கொண்டு இருந்தார் . கிருஷ்ணரை சந்தித்த தருமர் தனது தானம் தருமங்களின் பெருமையை சொல்லி சிலாகித்து கொண்டு இருந்தார் , தருமருக்கு தான் சிறப்பாக ஆட்சி செய்கிறோம் என்று ஒரு எண்ணம் உண்டு . இதை உணர்ந்து கொண்ட பரமாத்மா , தருமரை பாதாள உலகத்திற்கு அழைத்து சென்றார். அங்கு பலி சக்கரவர்த்தி ஆண்டு கொண்டு இருந்தார் , பாதாள உலகை சுற்றி பார்த்த தருமருக்கு இங்கு ஆட்சி நடப்பதை போலவே தெரியவில்லையே என்று தனக்குள்ளே சொல்லி கொண்டார் .
மகா பலியை பார்த்த கிருஷ்ணர் , தருமரின் தான சிறப்புகளை பற்றி சக்கரவர்த்தியிடம் கூறினார் . மகாபலி அவரிடம் மனம் வருந்தினார் , தனது நாட்டில் யாரும் தானம் வாங்குவதில்லை என்றும் , அதனால் தான் தான தருமங்கள் தன்னால் செய்ய முடிவதில்லை என்றும் கூறினார் . இதை கேட்டு அதிர்ந்த தருமர் அதற்கான காரண விளக்கத்தை கேட்டார் , பதில் கூறிய சக்கரவர்த்தி தங்கள் நாட்டில் ஏழைகளே இல்லை என்றும் அதனால் தன்னிடம் யாரும் தான தருமங்களை ஏற்பதில்லை என்று விவரித்தார் . அப்பொழுது தான் தருமருக்கு உண்மை உரைத்தது , ஒரு உண்மையான அரசன் தனது நாட்டில் ஏழைகளே இல்லாத நிலையை உருவாக்குவான் ஒழிய , தான தருமங்களை செய்வதால் வறுமையை ஒழிக்க முடியாது என்பதை உணர்ந்தார் . கிருஷ்ணரும் தருமரின் கர்வம் அழிந்த மகிழ்ச்சியில் பாதாள உலகத்தில் இருந்து விடை பெற்றார்கள் .