பாவங்களை நீக்கும் ஆடி மாதம் புதன் பிரதோஷம்!

61

பொதுவாக ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு உகந்த மாதம். அதில், ஆடி பிரதோஷம் என்றாலே இன்னும் சிறப்பு. அம்பாளின் வழிபாடுகளைக் கண்டு சிவனே ஆச்சரியப்படுவாராம். தன் கணவரை மகிழ்விக்க, அவரிடமிருந்து வரங்களைப் பெறுவதற்கு உமையவளே பிரதோஷ நாளில் விரதமிருந்து பூஜைசெய்து வழிபட்டுள்ளார். அந்த வகையில், இன்று புதன் கிழமை பிரதோஷம். இன்றைய நாளில் சிவனை நினைத்து சிவாலங்களுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள்.
ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் வரும். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளை குறிப்பது திரயோதசி. இது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்து காலக்கணிப்பு முறையில் கணக்கிடப்படுகிறது.
அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு 3 நாட்கள் முன்னதாக வருவது திரயோதசி. இதைத்தான் பிரதோஷம் என்கிறோம். ஆக, ஒவ்வொரு மாதமும் 2 நாட்கள்பிரதோஷம் வரும். ஒவ்வொரு கிழமையில் வரும் பிரதோஷத்திற்கு ஒவ்வொரு வகையிலான பலன்கள்உண்டு.
திங்கள் பிரதோஷம்:
சோமன் என்றால் சந்திரன். சந்திரனுக்கு மற்றொரு பெயர் தான் திங்கள். இந்த நாளில் வரும் பிரதோஷத்தன்று சிவனுக்கு பூஜை செய்து வழிபட்டால், மன நிம்மதி அடைந்து நல்ல நிலையை அடையலாம் என்பது ஐதீகம்.
செவ்வாய் பிரதோஷம்:
செவ்வாய்க்கிழமை முருகப் பெருமானுக்குரிய நாள். செவ்வாய் பிரதோஷத்தில் சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்யுங்கள். தென்னாட்டுடைய சிவனையும், நந்திகேஸ்வரரையும் பிரார்த்தனை செய்தால், கடன் பிரச்சனை தீரும், செல்வமும், யோகமும் கூடி வரும்.
புதன் பிரதோஷம்:
புதன் கிழமை நரசிம்மருக்கு விஷேசமான நாள். மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்று தான் நரசிம்ம அவதாரம். இந்த நரசிம்ம அவதாரம், பிரதோஷ வேளையில் நடந்துள்ளது. ஆகையால், புதன்கிழமையில் வரும் பிரதோஷ நாளில், சிவனை வழிபடுவதோடு, நரசிம்மரையும் சேர்த்து வழிபட்டால், வாழ்வில் எல்லா வளமும் பெற்று சீரும், சிறப்போடும் வாழலாம்.
வியாழன் பிரதோஷம்:
பொதுவாக வியாழன் என்றாலே குரு. அன்றைய தினம் குருவிற்கு அற்புதமான நாள். அந்த கிழமையில் வரும் பிரதோஷ நாளில் விரதம் இருந்து சிவன் கோயிலுக்கு சென்று பூஜை செய்து வழிபாடு செய்தால், ஞானமும், யோகமும் கிட்டும்.
வெள்ளி பிரதோஷம்
பொதுவாக வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். இந்த நாளில் பிரதோஷம் வருவது என்றால் சிறப்பு. இந்த பிரதோஷ நாளில் சிவனை வழிபடுவதோடு அம்மனையும் வழிபாடு செய்தால் கூடுதல் நன்மை கிடைக்கும். மேலும், உறவு வளப்படும், சகல ஐஸ்வரியங்களும் கிட்டும்.
சனி பிரதோஷம்:
சனிக்கிழமை சனிபகவானுக்கு உகந்தநாள். இந்த நாளில் விரதமும், சிவ வழிபாடும் பாவங்களையும், கிரக தோஷங்களையும் நீக்கவல்லவை என்பது ஐதீகம்.சனிபிரதோஷ நாளில், சிவவழிபாடு செய்தால், வீடுகளில் பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேர்ந்து சிவபார்வதியை போல் வாழ்வார்கள்.
சரி இன்று புதன் பிரதோஷம், என்ன செய்யணும் என்று கேக்குறீங்களா? பிரதோஷ காலமான மாலை 4 மணி 30 நிமிடத்தில் சிவனுக்கு பிடித்த வில்வ மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.
மேலும் கீழ்க்கண்ட பொருள்கள் கொண்டு அபிஷேகம் செய்து வர என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்
பால் – நோய் தீர்ந்து நீண்ட ஆயுள் கிடைக்கும்.
நெய் – முக்தி பேறு கிட்டும்.
தயிர் – எல்லா வளம் கிட்டும்.
இளநீர் – மக்கட் பேறு கிட்டும்.
பஞ்சாமிர்தம் – அனைத்து செல்வங்களும் பெருகும்.
சந்தனம் – சக்தி கிடைக்கும்.
தேன் – நல்ல சரீரம் கிட்டும்.
எண்ணெய் – சுகமான வாழ்வு கிடைக்கும்.
பழங்கள் – விளைச்சல் மென்மேலும் பெருகும்.
சர்க்கரை – எதிரிகள் தொல்லை மறைந்து எதிர்ப்புகள் குறையும்.