பித்ருக்களின் சாபம் நீங்க இந்திரா ஏகாதசி வழிபாடு!
பொதுவாகவே வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்குரிய ஒரு நாள். சுக்கிர பகவானின் நட்சத்திரம் பூரம். சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. இப்படிப்பட்ட உன்னதமான நாளில் ஏகாதசி விரதம் இருப்பது அற்புதமான பலன்களைத் தரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. இந்த ஏகாதசிக்கு இந்திரா ஏகாதசி என்று பெயர்.
ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி ‘இந்திரா ஏகாதசி” என்று அழைக்கப்படுகிறது. இன்று இந்திரா ஏகாதசியில் விரதமிருந்தால் நாம் செய்த பாவம் மட்டுமின்றி நம் முன்னோர்களின் பாவங்களும் நீங்கும்.
இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக் கிறார். அதனை நாமும் காண்போம்.
ஓ யுதிஷ்டிரா!!! மிகவும் மேன்மை வாய்ந்த இந்த இந்திரா ஏகாதசி விரதத்தினை முறைப்படி அனுஷ்டிப் பவர்களின் பாவ வினைகள் நீங்குவதோடு அல்லாமல், பாவ வினைகளின் காரணமாக துரதிர்ஷ்டவசமாக நரகத்தில் வீழ்ந்த அவர்களது மூதாதையர்களும் விடுதலை பெற்று நன்னிலை அடைவர் என்றார்.
மேலும், பக்தி சிரத்தையுடன் இந்த விரதத்தின் மகாத்மியத்தை காதால் கேட்பவர்களும் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவர் என்றுரைத்தார்.
சத்ய யுகத்தில் மகிஷ்மதபுரி என்ற நாட்டை இந்திர சேனன் என்னும் மன்னன் சீரும், சிறப்புமாக ஆண்டு வந்தான். இவனது பராக்கிரமத்தால் எதிரிகள் அனைவரையும் அழித்து, பயமின்றி, புகழோடு வாழ்ந்து வந்தான். கோவிந்த நாம சங்கீர்த்தனையுடன் தன்னை பூரணமாக அர்ப்பணித்து கொண்டு இறைவன் ஸ்ரீஹரியை பூஜித்து வந்தான்.
ஒரு நாள், அரசன் மகிழ்வுடனும், அமைதியுடனும் அமைச்சரவையில் வீற்றிருந்த போது, அங்கே திரிலோக சஞ்சாரியான தேவரிஷி நாரதர் வந்தார். உடனே அரசன் தனது அரியணையில் இருந்து எழுந்து அவரை இருகரம் கூப்பி வணங்கி, தக்க மரியாதை அளித்து அவரை ஆசனத்தில் அமரச் செய்து வந்த விஷயத்தைப் பற்றி விசாரித்தார்.
அதற்கு தேவரிஷி நாரதர் விடை அளிக்கையில், “ஓ அரசர்களில் சிம்மத்தைப் போன்றவனே!! நான் இப்போது கூறப் போவது உனக்கு வியப்பைக் கூட அளிக்கலாம், எனவே கவனமாகக் கேள்!!” என்றார்.
ஓ இந்திரசேனா!! நான் பிரம்மலோகத்தில் இருந்து திரும்பி வருகையில், வழியில் யமலோகம் சென்றிருந்தேன். அங்கே யமதர்மராஜனும் என்னை வரவேற்று உபசரித்தான்.
அப்போது நாங்கள் அங்கு பேசிக் கொண்டிருக்கையில், உனது தந்தையை நான் அங்கு கண்டேன் என்றார். அதைக் கேட்ட இந்திரசேனன், ஆயினும் எனது தந்தை தர்மம் தவறாது, பக்தி நெறியுடன், நன்முறையில் நாட்டை ஆண்ட அவர் ஏன் நரகத்தில் வசிக்க வேண்டும்? இதைக் கேட்கும் போது என் மனம் வேதனை அடைகிறது என்றார்.
அப்போது தேவரிஷி நாரதர் கூறினார்: இந்திரசேனா!! உனது தந்தை தர்மாத்மாவாக பக்தி நெறியுடன் வாழ்ந்திருந்தாலும், அவர் ஒரு முறை ஏகாதசி விரதத்தை பூரணமாக அனுஷ்டிக்காமல், அது நிறைவடையும் முன்பே பாரணை செய்ததால், அவர் யமலோகம் செல்ல நேர்ந்தது. எனவே, உனக்காக அவர் ஒரு செய்தியை என்னிடம் கொடுத்துள்ளார். அதைக் கூறவே யாம் இங்கு வந்தோம் என்றார்.
அது என்ன என்று அரசன் வினவிய போது, மகிஷ்மத புரி நாட்டை ஆண்டு வரும் என் மகனிடம், எனது இந்த நிலையை எடுத்துக் கூறி, அவனை தயை கூர்ந்து இனி வரவிருக்கும் இந்திரா ஏகாதசி விரதத்தினை அனுஷ்டி த்து எனக்கு முக்தியை வழங்க உதவ வேண்டும் என்று கூறினார் என்றார்.அதனைக் கேட்ட அரசன் அவருடைய தந்தை நன்னிலை அடைய அவரிடமே இந்திரா ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கும் முறை பற்றி கேட்டு தெரிந்து கொண்டார்.
அவை:
- இந்திரா ஏகாதசி நாளுக்கு முதல் நாளான தசமி திதி அன்று காலையில் நீராடி, இறைவன் ஸ்ரீ ஹரியை வணங்க வேண்டும்.
- மதியம், நதிக்கரையில் குளித்து, நம்பிக்கையுடன், பக்திபூர்வமாக மூதாதையர்களுக்கு தர்ப்பணம் வழங்க வேண்டும். அன்று 1 வேளை மட்டும் உணவருந்தி, தரையில் படுத்து உறங்க வேண்டும்.
- ஏகாதசி அன்று அதிகாலையில் நீராடி, இறைவனை எண்ணி, “இன்று முழுவதும் உபவாசத்துடன் பஞ்சேந்திரியங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அனைத்தையும் துறந்து நின்னையே தியானித்து இருப்பேன், நீயே கதி என்றிருக்கும் என்னை காத்து அருள வேண்டும் பரந்தாமா!!” என்று சங்கல்பம் செய்து விரதம் அனுஷ்டித்து, மதியம் வேள்வித்தீயில் ஆகுதி அளித்து, தர்ப்பணம் செய்து முன்னோர் நற்கதி அடைய உதவ வேண்டும். பிண்டங்களை பசுக்களுக்கு அளிக்க வேண்டும்.
- பின்னர் இரவெல்லாம் கண் விழித்து இறைவனைத் துதித்து வணங்க வேண்டும். அதன் பிறகு துவாதசி அன்று, நீராடி இறைவனை வணங்கி, அன்னதானம் செய்தல் வேண்டும். அதன்பின், உற்றார், உறவினர்களுக்கு உணவளித்து, கடைசியில் நீ உணவருந்தி விரதம் முடிக்க வேண்டும் என்றார்.
அதன்படி அரசனும் விதிமுறைகளின் படி விரதம் இருக்கிறான். விரத முடிவில், அவன் மீது மலர்மாரி பொழிந்தது. அவனது தந்தை நல்லுலகை அடைவதை அவனால் காண முடிந்தது. இறுதியில் அவனும் நல்லுலகை அடைந்தான்.
மேலும் இக்கதையைக் கேட்பவர், படிப்பவர் அனைவரும் இவ்வுலக வாழ்வில் அனைத்து சுகபோகங்களையும் அடைவதுடன், பாவ வினைகளிலிருந்து நீங்கி, இறுதியில் முக்தி பெற்று, வைகுந்தப் ப்ராப்தி அடைவர் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறியதாக பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.
இந்த விரதம் இருப்பதன் மூலமாக எல்லா விதமான சுபத்தடைகளும் விலகி வெற்றி கிடைக்கும். மன உறுதி பெருகும். பிள்ளைகள் மிக நல்ல மேன்மையான நிலையை அடைவார்கள். ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசியில் பாரணை செய்ய வேண்டும்.
அப்பொழுது கன்றுடன் கூடிய பசுவை வணங்க வேண்டும். இதன் மூலமாக முப்பத்து முக்கோடி தேவர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாற்றி வழிபடலாம். இந்த இந்திரா ஏகாதசி பிதுர் தோஷத்தை நீக்கும்.