பிரம்ம தோஷம், பில்லி, சூனியம் விலக சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில்!

35

பிரம்ம தோஷம், பில்லி, சூனியம் விலக சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில்!

108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக திகழ்கிறது சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். சோளிங்கர் வேலூர் மாவட்டத்தில் உள்ளது. ஒரு “கடிகை நேரம், அதாவது ஒரு நாழிகை- (4 நிமிடங்கள்) மட்டுமே, இந்த திருத்தலத்தில் இருந்தாலே மோட்சம் கிட்டிடுமாம்! அத்தனை பெருமை உடையது “கடிகாசலம்’ என்று அழைக்கப்படும் சோளிங்கர்.

750 அடி உயரத்தில், 1305 படிக்கட்டுகளுடன் கடிகாசலம் எனும் ஒரே மலை குன்றின் மீது 200 அடி நீளம், 150 அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோயிலில் லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார். வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ள அழகிய கோயில்.

பொதுவாக பெருமாள் கோயில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வர். ஆனால் சோளிங்கரில் மட்டும் யோக நரசிம்மர், மூலவர் மட்டுமே கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் சேவை சாதிக்கிறார். மூலவர் யோக நரசிம்மசுவாமி சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன், இரு கால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப்பட்டையுடன் காட்சி தருகிறார்.

விசுவாமித்திரர், ஒரு கடிகை நேரம் இம்மலையில் இருந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு பிரம்மரிஷி பட்டமும் பெற்றதாக வரலாறு உள்ளது. பக்தன் பிரகலாதனுக்கு காட்சி தந்த நரசிம்ம அவதார திருக்கோலத்தை தாங்களும் கண்டு ஆனந்திக்க வேண்டுமென வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், பாரத்துவாஜர் ஆகிய முனிசிரேஷ்டர்களோடு, விசுவாமித்திரர் இத்திருத்தலத்தில் தவமிருந்தார்.

கடிகாசலத்தில் தவம் மேற்கொண்டிருந்த சப்தரிஷிகளுக்கு காலன், கேயன் எனும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுத்து வந்தனர். அவர்களை வதம் செய்வதற்காக ஆஞ்சநேயர், எம்பெருமானின் சங்கு சக்கரங்களை வேண்டிப் பெற்று அவற்றின் துணையோடு, அரக்கர்களை அழித்தார்.

மகரிஷிகள் எழுவரின் தவத்தினை மெச்சிய திருமாலும், திருக்கடிகைக்கு எழுந்தருளி நரசிம்ம மூர்த்தியாகக் காட்சியளித்தார். ஆஞ்சநேயரும் நரசிம்ம அவதாரக் காட்சியைக் கண்டு ஆனந்தத்தோடு, சங்கு சக்கரத்தோடு பெரியமலைக்கு எதிரில் யோக ஆஞ்சநேயராக அமர்ந்துவிட்டார்.

இம்மலையின் அருகே எதிர்திசையில் 350 அடி உயரத்தில், 406 படிக்கட்டுகள் கொண்ட, சிறிய மலையின் மீது ஆஞ்சநேயர் தியான நிலையில் அமர்ந்தபடி பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார். ஆண்டு முழுவதும் கண் மூடிய நிலையில் தியானத்தில் இருக்கும் யோக நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாகவும் ஐதீகம்.

உற்சவர் பக்தோசித பெருமாள், சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இருதேவியருடன், மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தனிக்கோயில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் தனித்தனி சன்னதி கொண்டுள்ளார். அமிர்த தீர்த்தம், பிரம்மதீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோயில் அருகில் உள்ளன.

பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிரம்மதீர்த்தத்தில் நீராடி மலைமீது அமர்ந்து அருள்பாலிக்கும் யோகநரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் வணங்கினால் நோய்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை.

தொட்டாச்சாரியார் ஆண்டுதோறும், காஞ்சிபுரம் சென்று வரதராஜப்பெருமாளை சேவித்து வருவதை வழக்கமாகக் கொண்டவர். வயது மூப்பு காரணமாக அவரால் காஞ்சிபுரம் வரை பயணிக்க முடியவில்லை.

ஒருநாள் இங்குள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்தபடி, காஞ்சி வரதராஜப் பெருமாளையும், அவரது கருட சேவையையும் பற்றி சிந்தித்தபடி இருந்தார். அப்போது கருட வாகனத்தில் வரதராஜப்பெருமாள் தக்கான் குளக்கரையில் தொட்டாச்சாரியாருக்கு காட்சி தந்தார். இன்றும் காஞ்சிபுரம் வரதராஜர் பிரம்மோற்சவத்தின் 3ம் நாள், பெருமாள் கருட வாகனத்தில் சோளிங்கர் தக்கான் குளத்திற்கு எழுந்தருளுகிறார். இந்தக் குளத்தில் நீராடினால், பிரம்மதோஷம் கூட நீங்கும் என்பது ஐதீகம்.

இக்கோயில் சென்னையிலிருந்து 100 கி.மீ தொலைவிலும், வேலூரிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலும், அரக்கோணத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும், திருத்தணியில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. சென்னையிலிருந்து ரயிலில் வருபவர்கள், அரக்கோணம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலை சென்றடையலாம்.

திருகடிகை (சோளிங்கர்) “ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருவடிகளே சரணம்!