புதிய வீடு கட்ட நினைப்பவர்கள் வழிபட வேண்டிய கோயில்!

70

புதிய வீடு கட்ட நினைப்பவர்கள் வழிபட வேண்டிய கோயில்!

சென்னை திருவள்ளூர் மாவட்டம் சின்னமேடு பகுதியில் உள்ளது சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் கோயில். இந்தக் கோயிலில் உள்ள மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

தல பெருமை:

இந்தக் கோயிலில் மரகதக்கல்லால் ஆன மயில் தான் விசேஷம். மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மற்ற தெய்வங்கள் மரகதக்கல்லால் ஆனவை. இங்கு வள்ளியும் பாலசுப்பிரமணியரும் திருமணக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இது போன்ற திருமணக் கோலத்தினை காண்பது என்பது அரிது. பாலசுப்பிரமணியரை பூச நட்சத்திர நாளில் வழிபட விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

வள்ளி மற்றும் முருகப் பெருமானின் திருமணம் பூச நட்சத்திர நாளில் நடந்ததாக சொல்லப்படுகிறது. ஆதலால், இந்த நட்சத்திர நாளில் முருகனை வழிபட திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:

ராமபிரான் பட்டாபிஷேகத்திற்கு பிறகு மாதமாக இருந்த மனைவி சீதா தேவியை ஊரார் பழி போட அவரை காட்டிற்கு அனுப்பிவிட்டார். காட்டில், சீதா தேவிக்கு லவன் மற்றும் குசன் என்று இருவர் பிறந்தனர். சீதாதேவியை காட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு ராமபிரான் அஸ்வமேதயாகம் செய்தார். உண்மையில், மனைவி இல்லாமல், யாகம் செய்வது என்பது விதிக்கு புறம்பானது.

ராமபிரான் பல நாடுகளுக்கு யாக குதிரையை அனுப்பி வைத்தார். ஆனால், அந்த குதிரைகளை எல்லாம் லவன் மற்றும் குசன் ஆகியோர் கட்டிப்போட்டுவிட்டனர். தனது யாக குதிரைகள் திரும்பி வராத நிலையில், ராமபிரான் அதனை மீட்க லட்சுமணனை அனுப்பி வைத்தார். எனினும், லட்சுமணனால் யாக குதிரைகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில், ராமரே யாக குதிரைகளை மீட்கச் சென்றார் என்று ராமாயண வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, ராமபிரானுடன் லவன் மற்றும் குசன் ஆகியோர் சண்டை போட்டதாகவும், அந்த இடம் தான் சிறுவாபுரி என்ற சின்னமேடு என்றும் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலில் முருகம்மை என்ற முருகனின் தீவிர பக்தை ஒருவர் எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே இருந்து வந்தார். அவரது கற்பின் மீது சந்தேகமடைந்த அவரது கணவர் பக்தையின் கையை துண்டித்தார். அப்போது கூட, முருகம்மை முருகனின் சிந்தனையிலேயே இருந்துள்ளார். இதையறிந்த முருகப் பெருமான், அம்மையாருக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்தார். அதோடு, அம்மையாரின் கை ஒன்று சேர்ந்தது.

இந்த கோயிலின் சிறப்பம்சம் என்னவென்றால் முருகப் பெருமானைத் தவிர மற்ற தெய்வங்கள் அனைத்தும் மரகத்தால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. தைப்பூசம், பங்குனி உத்திரம், நவராத்திரி மற்றும் திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் இந்த கோயிலில் திருவிழா நடைபெறுகிறது.

இந்தக் கோயிலுக்கு பசியோடோ அல்லது நேரிலோ வந்து தரிசிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போன்று, சிறுவாபுரி முருகனை நினைத்தாலே வேண்டியது கிடைக்கும். புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பர்கள் இங்கு வந்து வழிபாடு செய்து கொள்ளலாம். அதோடு, திருமணமாகாதவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து தொடர்ந்து 6 வாரம் பூஜை செய்தால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

முதல் வாரத்தில் எந்த கிழமையில் எந்த நேரத்தில் செல்கிறோமோ, தொடர்ந்து 6 வாரமும், அதே கிழமை அதே நேரத்தில் தான் செல்ல வேண்டும். உதாரணமாக செவ்வாய் கிழமை காலை 6 மணிக்கு கோயிலுக்கு சென்றால், அதே போன்று தான் ஒவ்வொரு வாரமும் கோயிலுக்கு சென்று வர வேண்டும். இப்படி தொடர்ந்து 6 வாரம் கோயிலுக்கு சென்று திருமணம் நடக்க வேண்டிக் கொண்டால் விரைவில் வரன் அமைந்து திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.